Last Updated : 23 Aug, 2022 07:02 PM

 

Published : 23 Aug 2022 07:02 PM
Last Updated : 23 Aug 2022 07:02 PM

தெறிப்புத் திரை 5 | Zindagi inShort - அந்த 7 பெண்களும் வாழ்வின் அதிர்வுகளும்

'நம் சாதாரண வாழ்வில் உள்ள அசாதாரண சூழ்நிலைகள்' குறித்து 7 தனித்தனி கதைகளில் ஆந்தாலஜி வகைமையில் சொல்லியிருக்கும் படம்தான் 'ஜிந்தகி இன் ஷார்ட்' (Zindagi inShort). நீட்டி முழங்காமல் ஒவ்வொரு கதையையும் வெறும் 16 நிமிடங்களுக்குள் சொல்லி முடித்திருப்பது கதைக்கான அடர்த்தியை அதிகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் நெட்ஃப்ளிக்ஸில் காணக்கிடைக்கும் 'ஜிந்தகி இன் ஷார்ட்' ஆந்தாலஜி குறித்து விரிவாகப் பார்ப்போம்.

பின்னி - தஹிரா காஷ்யப் குரானா: இயக்குநர் தஹிரா காஷ்யப் குரானாவின் 'பின்னி' கதையுடன் இந்த ஆந்தாலஜி தொடங்குகிறது.படத்தின் மையக் கதாபாத்திரத்தின் மிகவும் நுணுக்கமான கதாபாத்திர வார்ப்பு பெரிதும் ஆச்சரியமூட்டுகிறது. ஒரு புறக்கணிக்கப்பட்ட பெண் ஒருவர் குறித்த கதை தான் 'பின்னி'. (பஞ்சாபின் மிகவும் புகழ்பெற்ற இனிப்பு பண்டத்தின் பெயர் பின்னி). நீனா குப்தா என்ற பெண்ணைச் சுற்றியே படம் நகர்கிறது. இங்கே நீனா குப்தா என்பது நம் வீட்டு பெண்கள் தான். அவரது கணவர் ஷிஷிர் சர்மாவுக்கும், வெளிநாட்டிலிருக்கும் மகளுக்கும், மனைவியாகவும், தாயாகவும் இருக்கும் நீனா குப்தா பண்டங்கள் தயாரிக்கும் ஒரு மெஷின். அவ்வளவே!

அதைத் தாண்டி ஒன்றுமில்லை. சொல்லப்போனால் ஒரு 'யூஸ் அன் த்ரோ'. தேவைப்படும் நேரங்களில் பயன்படுத்திக்கொண்டு வீசிவிடுகிறார்கள். தேவை தீர்ந்ததும் கூடுதலாக ஒரு வார்த்தை நீனா குப்தா பேசினால் தொடர்பு துண்டிப்பு. குறிப்பாக கணவருக்கு காஃபி ரூமுக்கு வந்து சேர வேண்டும். அந்த பெண்ணின் உலகம் அவ்வளவு அழுத்தமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த உலகில் பாத்திரம் கழுவுவது, உணவு தயாரிப்பது, வீட்டை சுத்தம் செய்வது ரிப்பீட். இயக்குநர் தஹிரா காஷயப் எந்த இறுதியில் பெண் கதாபாத்திரத்தை கொண்டு பச்சதாபம் தேடவில்லை. மாறாக நுணுக்கமான எதிர்ப்பு அங்கே பதிவு செய்யப்படுகிறது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் பெரிய வசனமெல்லாம் இல்லை. இறுதியில் நீனா குப்தா பேசுகிறார் கணவர் குற்றவுணர்ச்சியிலும் மௌனத்திலும் தவிக்கிறார். கட். இப்படியான ஒரு க்ளைமேக்ஸ் படம் முடிந்த பின்பும் நமக்குள் பல கேள்விகளுடன் உரையாட வைக்கிறது.

ஸ்லீப்பிங் பாட்னர் - புனர்வாசு நாயக்: முக்கியமான பிரச்சினையை பேசும் அழுத்தமான படைப்பை கொடுத்திருக்கிறார் புனர்வாசு நாயக். 'மேரிடல் ரேப்', வறட்சி திருமணங்கள், உடலியல் தேவைகளுக்காக சுருக்கப்படும் பெண்கள் என பல பிரச்சினைகளை பேசுகிறது படம். முதன்மைக் கதாபாத்திரமான பீனா தத்தா மரியாதைக்கும், அங்கீகாரத்திற்கும் ஏங்குகிறார். அவரது கணவர் அவரை ஸ்லீப்பிங் பாட்னர் என கூறி மோசமான முறையில் நடத்துகிறார்.

20 ஆண்டுகளாக கணவரால் மேரிடல் ரேப் செய்யப்படுகிறார். அந்த உறவில் அன்பும் சுத்தமாக இல்லை. அவர் அதிலிருந்து எப்படி மீண்டார் என்பது தான் கதை. இதில் இரண்டு ஆண் கதாபாத்திரங்கள் காட்டப்படுகின்றன. இருவரும் ஏதோ ஒரு தேவைகளுக்காகவே பீனா தத்தாவை அணுகுகின்றன. இந்த ஒட்டுமொத்த ஆந்தாலஜியிலும் எந்த இடத்திலும் பச்சதாபம் தேடப்படவில்லை. இதிலும் அப்படித்தான்.

இறுதியில் அவள் இரண்டு ஆண்களையும் லெஃப்ட் ஹெண்டில் டீல் செய்துவிட்டு நகரும் காட்சிகள், பெண்களுக்கு உண்மையில் தேவையானது பச்சதாபமல்ல; விடுதலை. அதை அவர்களாகவே எடுத்துக்கொள்ள முடியும் என்பதை படம் உணர்த்துகிறது. சொல்லப்போனால், இங்கே நடக்கும் திருமணங்களையும், அதன்பிறகான தாம்பத்யத்தையும், ஸ்லீபிங் பாட்னராக சுருக்கப்படும் பெண்களையும் இந்தப் படம் கண்ணாடியாக பிரதிபலிக்கிறது. தவிர, ஆபாச படங்களை பதிவேற்றிவிடுவேன் என்ற சொல்லாடல்களுக்கு பயந்துகொள்ள இனி எந்த தேவையுமில்லை என்பதையும் படம் அழுத்தமாக பதிவு செய்கிறது.

சன்னி சைட் அப்பர் - விஜயதா குமார்: 'வாழ்க்கை கணிக்க முடியாதது' ('life is so unpredictable') என படத்தில் வரும் வசனத்தைதான் படம் பிரதிபலிக்கிறது. 'நாங்க ரிட்டையர்மென்ட்க்கு அப்றம் உலகத்த சுத்தி பாக்க நெனைச்சோம்.ஆனா கேன்சர் வந்திருச்சு' என கதாபாத்திரம் ஒன்று பேசும் வசனம் வாழ்க்கையின் மீதான நிச்சயமற்ற தன்மை உணர்த்துகிறது. வாழ்நாள் முழுவதும் சந்தோஷத்தை தேடி அழைந்து கொண்டிருக்கும் நமக்கு அது சின்ன சின்ன விஷயங்களில் அடைப்பட்டுகிடக்கிறது என்பதை படம் புரிய வைக்கிறது.

வாழ்வில் மீதான புதிய கோணத்தை சிறிய மருத்துவமனையில் ஒரு புற்றுநோயியல் மருத்துவர் மூலம் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் ஈர்க்கிறது. காவ்யா மேனனின் நடிப்பு கவனிக்க வைக்கிறது. குறிப்பாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மூதாட்டியிடம் அவர் பேசும் வசனங்கள் ஒட்டுமொத்த படத்தின் தரத்தையும் தூக்கி நிறுத்துகிறது. 'ஒரே வாழ்க்கை தான். கேன்சர் வந்துவிட்டது. எத்தனை நாட்களுக்குத்தான் அழமுடியும்?' உங்களை ரெஃப்ரஷ் செய்துகொள்ள 'சன்னி சைட் அப்பர்' நிச்சயம் உதவும். வாழ்க்கையை அதன் போக்கில் அந்தந்த நிமிடங்களில் வாழ சொல்கிறது படம்.

நானோ சோ ஃபோபியா - ராகேஷ் சைனின்: ஒரு வயதான, குழப்பமான பெண் தனது வீட்டு உதவியாளரால் கொள்ளையடிக்கப்பட்ட அதிர்ச்சியை சமாளிக்க போராடும் கதை. உளவியல் பாதிப்பை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இக்கதை, குற்றவாளிகளை உருவத்தின் அடிப்படையில் சித்திரப்பதில் நெருடலைத் தருகிறது. இறுதிக்காட்சியின் திருப்பம் சற்றே திகைப்பை தந்தாலும் ஒட்டுமொத்தமாக படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

சாஜு கே தாஹி பல்லே - கௌதம் கோவிந்த்: கௌதம் கோவிந்தின் 'சாஜு கே தாஹி பல்லே' பிரிவினை லென்ஸ் கொண்டு பார்க்கப்படும் இரண்டு இளம் காதலர்களின் காதல் கதை. மிகவும் சிம்பிளான அதேநேரத்தில் நம்மை யோசிக்க வைக்கும் ஒரு கதைக்களம். படம் குறித்து சற்று ஆழமாக யோசித்துப்பார்தால், பல்வேறு நுணுக்கமான விஷயங்கள் புலப்படும். பொதுவாக காதலை ஒரு சாதியோ, மதமோ மட்டும் பிரித்துவிடுதில்லை.

சமயங்களில் மனிதர்களிடையே வரையப்படும் எல்லைக்கோடுகள் அசலாட்டாக பிரித்துவிடுகின்றன. அம்ரீக், அம்ரீன் இருவரும் வெவ்வேறு மதம் என்றாலும், அவர்களின் டேஸ்ட் கிட்டத்தட்ட ஒன்று தான். அம்ரீக்குக்கு பிடித்துதான் அம்ரீனுக்கும் பிடித்துள்ளது. ஆனால் அவர்களின் விருப்பங்கள் ஒன்றாக இருந்தபோதிலும், பிராந்தியங்களின் கோடுகள் வெவ்வேறானவை. உண்மையில் படத்தின் இறுதி ட்விட்ஸ் அட்டகாசமானது!

தப்பட் - வினய் சவ்வால்: ஜிந்தகி இன் ஷார்ட் ஆந்தாலஜியில் கருத்தியல் ரீதியான சில முரண்களை கொண்ட படம் 'தப்பட்'. காதலிப்பதாக கூறி தொல்லை கொடுக்கும் பள்ளி சீனியர்களிடமிருந்து தன் அக்காவை காக்கும் தம்பியின் கதை. ஆண் மகனாக இருக்கும் தம்பி, தன் அக்காவை மீட்கும் பொறுப்பை ஏற்கிறான். சிறுவனாக இருந்தபோதிலும் அவன் ஒரு ஆண். பெரியவளாக இருந்த போதிலும் அக்கா ஒரு பெண்.

பெண் ஒருவரை மீட்கும் பொறுப்பை ஆணே தான் சுமக்க வேண்டியிருக்கிறது. இறுதியில் தொல்லை கொடுப்பவர்களை அடிக்கும் கை மட்டும் தான் அந்த பெண்ணுடையது. அதற்கான அத்தனை ஸ்கெட்சும் அந்த தம்பியினுடையது. இந்த முரண் காலம் காலமாக நீடித்துக்கொண்டிருக்கிறது. மீட்பராக சிறுவனை காட்ட வேண்டிய தேவை என்ன என்ற கேள்வி எழாமலில்லை. இதில் சூப்பர் ஹீரோஸ் ரெஃபரன்ஸ் வேறு.

ஸ்வாஹா - ஸ்ம்ருதிகா பாணிக்ரஹி: திருமணத்தின் மீதான புனிதத்தை படம் உடைத்து சுக்குநூறாக்குகிறது. 'ஒருத்தர் கூட ரொம்ப நாள் வாழ முடியாது' என இஷா தல்வார் கூறி கணவரை டீல் செய்யும் காட்சிகள் மிரட்டுகின்றன. இஷா தல்வார் கதாபாத்திர வடிவமைப்பு ஈர்க்கிறது. 'விவகாரத்து வாங்கினால், ஜீவனாம்சம் கேப்பேன்' என கணவரை பதிலுக்கு மிரட்டுகிறார். கதையாய் பார்க்கும்போது, யாரோ ஒருவர் சொன்ன பொய்யை நம்பி தன் மனைவியை சந்தேகிக்கும் கணவரை, மனைவி எப்படி டீல் செய்கிறார் என்பது தான் கதை.

ஒரு பெண்ணை குற்றவாளியாக்கிவிட யாரோ முகம் தெரியாத ஒருவரின் குரல் போதுமானதாக உள்ளது என்பதை அடித்துச் சொல்கிறது படம். அது ஒரு கட்டத்தில் பொய்யாக இருந்தாலுமே அதை ஏற்க ஆண்கள் ஒருபோதும் தயாராக இருப்பதில்லை. கணவன் - மனைவிக்கு இடையேயான வசனங்கள் திருமண கட்டமைப்பின் அடுக்குகளை கேள்விக்குறியாக்குகின்றன. சமூகத்தின் மரபுகளை நகைச்சுவையுடன் கேள்விகேட்கும் விதத்தில் பளிச்சிடுகிறது 'ஸ்வாஹா'.

> முந்தைய அத்தியாயம்: தெறிப்புத் திரை 4 | Life in a Metro - சமூகத்தின் கலாசார கோடுகளை அழிக்க முற்படும் படைப்பு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x