Published : 01 Jun 2022 08:07 PM
Last Updated : 01 Jun 2022 08:07 PM

ஓடிடி திரை அலசல் | Aviyal - ராதாக்களின் துயரக் கதைகளும் நல்லனுபவமும்!

இயக்குநர் ஷனில் முகமது எழுதி இயக்கியிருக்கும் மலையாளத் திரைப்படம் 'அவியல்'. தனது காதலனுடன் ஏற்பட்ட பிரேக்-அப்பால், மனமுடைந்து, பியர் குடித்துவிட்டு தனது தந்தை கிருஷ்ணனை அழைக்கிறார் அவரது மகள். மகளின் காதல் கதையை கேட்டு சிரித்து ரசிக்கிறார் இசைக் கலைஞரான கிருஷ்ணா.

அடுத்த நாள் தனது மகளை காரில் அழைத்து செல்கிறார். அந்தப் பயணத்தில் கிருஷ்ணா தனது முதல் காதல் தொடங்கி திருமணம் வரையிலான வாழ்க்கையை விவரிப்பதுதான் படத்தின் கதை. கிருஷ்ணனாக ஜோஜு ஜார்ஜ், மகளாக அனஸ்வரா ராஜன், இளம் வயது கிருஷ்ணனாக சிராஜுதின் நசீர், அஞ்சலி நாயர், கெட்டகி நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜோஜு ஜார்ஜ் சொல்லவே வேண்டாம், அப்பா கதாபாத்திரத்தில் அப்படி பொருந்தியிருக்கிறார். அதேபோல், இளம் வயது கிருஷ்ணனாக வரும் சிராஜுதின் நசீர் பள்ளி மாணவன், சோம்பேறித்தனமான கல்லூரி மாணவர், போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர், ராக் இசை கலைஞர் என நான்கு கட்டங்களிலும் வெவ்வேறாக பரிணமித்து, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தில் வரும் அனைத்து பெண் கதாப்பாத்திரங்களும் தங்களது பணியைச் சிறப்பாக செய்துள்ளனர்.

கிருஷ்ணாவின் பள்ளிப் பருவ காதல் காட்சிகளும், அப்பாவிடம் காதலை வெளிப்படுத்த ஐடியா கேட்கும் காட்சிகளும் ரசிக்கும்படியாக உள்ளன. அதே நேரம், படத்தின் ஒளிப்பதிவாளரும், கலை இயக்குநரும் பல இடங்களில் நம்மை கவனிக்க வைக்கின்றனர். குறிப்பாக 'மனமே நீ திரிகே பாயும் ' பாடல். தீயில் எரியும் கிடார், காலியான பீர் பாட்டில்களாலான படுக்கை என ஆர்ட் டைரக்டரும், காமம், குழப்பம் நிறைந்த மனநிலையை விளக்கும் காட்சி அமைப்புகளில் ஒளிப்பதிவாளரும் மிரட்டியுள்ளனர்.

காதல் படங்களுக்கு பாடல்கள் எப்போதுமே கூடுதல் பலம் சேர்ப்பவை. உணர்வுகளால் பரிமாறிக் கொள்ளப்படும் இன்பத்தையும், வலியையும் மனித மனங்களுக்கிடையே கடத்துவதில் இசைக்கு நிகர் எதுவுமில்லை. அந்த வகையில் இந்தப் படத்தில் ஷங்கர் சர்மா, ஷரத் இசையமைப்பு பணிகளை செய்துள்ளனர். படத்தில் மொத்தம் 6 பாடல்கள், ஆறு பாடல்களுமே அடிபொளி ரகம்.

குறிப்பாக மண்ணின் தூவல் பாடல் கேட்டதிலிருந்தே முணுமுணுக்க தொடங்கிவிடும் ரகம். இந்தப் பாடலை ஷரத் கம்போஸ் செய்திருக்கிறார். துணி துவைக்கும்போது வரும் சத்தங்களுக்கு ஏற்ப கிடாரை இசைத்து, மனதின் ஆசைகளை பகிர்ந்துகொள்ளும் காட்சியில் தனி ஆவர்த்ததனம் செய்திருக்கிறார் இசையமைப்பாளர் ஷங்கர் சர்மா.

கிருஷ்ணா என்ற ஆணின் கதாப்பாத்திரத்தை கருவாக வைத்துக் கொண்டு, ஒரு வழக்கமான கதையை வித்தியாசமான திரைக்கதை மூலம் இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஷனில் முகமது. அதேபோல் காதல் காட்சிகள், பிரியும் நேரங்களில் பேசப்படும் வசனங்கள், ஜெயிலில் மகன் கிருஷ்ணாவை பார்த்துவிட்டு அவரது தந்தை பேசும் வசனங்கள், மனம் திருந்திய பின் சேர்ந்து வாழ கூப்பிடும்போது கிருஷ்ணாவின் மனைவி பேசும் "எல்லா ராதாக்களுக்கும் கிருஷ்ணனைப் போலவே துயரம் மிகுந்த கதைகள் இருக்கும்" போன்ற வசனங்கள் வாழ்வின் யதார்த்தங்களை பிரதிபலிக்கின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக WOMAN IS THE NIGGER OF THE WORLD என்ற வாசகத்துடன் படத்தை தொடங்குகிறார் இயக்குநர். இசைக் கலைஞர் கிருஷ்ணனின் வாழ்க்கையில் 4 வெவ்வேறு காலக்கட்டத்தையும் பேசிவிட்டு, இறுதிக்காட்சியில் அவர் வைக்கும் ட்விஸ்டும், ஆடியன்ஸுக்கும் கூறும் கருத்தும் ஆகச் சிறப்பு.

தியேட்டர் ரிலீஸிற்குப் பின்னர், மே 20-ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது இந்தப் படம். யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருந்தாலும், வயது வந்தோருக்கான காட்சிகளும் படத்தில் உள்ளன. இதை தவிர்த்துவிட்டு பார்த்தால் ஒரு ஃபீல் குட் குடும்ப டிராமாதான் ‘அவியல்’ திரைப்படம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x