Published : 26 May 2022 09:36 PM
Last Updated : 26 May 2022 09:36 PM
'அவங்க உங்கள விட்டு போனாங்களா? இல்ல நீங்க அவங்கள விட்டு வந்துடீங்களா?' என்று கேட்கப்படும் கேள்விக்கு 'காதல் எங்களை விட்டு சென்றுவிட்டது' என பதிலளிக்கிறார் ஆகாஷ். கவித்துமான இந்த வசனம், திருமணத்திற்கு பிறகான காதலில் ஏற்படும் வறட்சியை தெளிவாகப் பேசுகிறது. அதேபோல மற்றொருபுறம் 'எந்தவித முன் பரிச்சயமும் இல்லாம எப்படி கல்யாணம் பண்றீங்க?' என்ற கேள்விக்கு 'திருமணத்திற்கு பிறகு காதல் வந்துவிடும்' என்கிறார் இர்பான் கான். 'அப்படி வரவில்லை என்றால்?...' - சொல்லப்போனால் இந்தக் கேள்விக்கான பதில் நம்மிடமும் கூட இல்லை.
இப்படியாக தோன்றும் பல்வேறு கேள்விகளுக்கு கலாசார கடிவாளங்கள் முட்டுக்கட்டையிட்டு சில வரையறைகளை விதித்துள்ளன. இங்கே வரையறுக்கப்பட்டுள்ள கோடுகளை தாண்டிச் செல்வது குறித்தும், அதிலுள்ள சிக்கல்கள் குறித்தும், வயதான தம்பதிகளின் லிவிங் வாழ்க்கை முறை என உண்மையில் நாம் பேச தயங்கும், விஷயங்களை 2007-ம் ஆண்டு அசலாட்டாக பேசி வெளியான படம் தான் 'லைஃப் இன் எ மெட்ரோ' (Life in a Metro). அனுராக் பாசு இயக்கத்தில் வெளியான இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
ஒரு ஆந்தாலஜிக்கான உணர்வைக் கொடுக்கும் இந்தப் படத்தில் ஒவ்வொருவரின் உறவுச் சிக்கல்கள் தனித்தனியே அணுகப்பட்டு ஒரு புள்ளியில் இணைக்கப்படுகின்றன. அதை பிரித்துப் பார்ப்பதன் மூலம் அதை விளங்கிக் கொள்ள முடியும்.
அமுல் (தர்மேந்திரா) ஷிவானி (நவீசா அலி)
அந்த வகையில் முதலில் வயதான தம்பதிகளின் லிவ் இங் ரிலேஷன் குறித்த கதையிலிருந்து தொடங்குவோம். கணவர் இறந்த பின்பு, மகனால் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடப்பட்ட ஷிவானி தனிமையில் வாழ்ந்து வருகிறார். எல்லாருக்கும் ஏதோ ஒரு பழைய காதல் இருக்கத்தானே செய்கிறது. அப்படியான ஒரு காதல் ஷிவானிக்கு மட்டும் இல்லாமலா போய்விடும். ஏதோ ஒரு தருணத்தில், ஏதோ ஒரு சூழ்நிலையில் பிரிந்த ஒரு காதல் மீண்டும் துளிர்விட, கால நிர்ணயம், வயது வரம்புகள் தேவையில்லை தானே?. ஏனென்றால் காதலே, நம் வரையறைகளுக்கு அப்பாற்ப்பட்ட உணர்வுதான். அப்படிப்பார்க்கும்போது அதற்கு வயது வரம்பெல்லாம் ஒரு பொருட்டாக இருப்பதில்லை. அப்படியாக தன் முன்னால் காதலன் அமுலிடமிருந்து வரும் கடிதத்தின் எழுத்துக்கள் ஷிவானியின் வாழ்க்கைக்கான அர்த்தத்தை கொடுக்கிறது.
இருவரும் சந்திக்கின்றனர். இளமையில் தவறவிட்ட வாழ்க்கையை மீண்டும் வாழ எத்தனிக்கும் அவர்களைச் சுற்றிக் கோடுகள் வரையப்பட்டுள்ளன. அவர்களின் இளமையில் இந்தச் சமூகம் வரைந்த அதே கோடுதான். இனியும் அந்த கோட்டுக்குளிருந்து வாழ அவர்களுக்கு விருப்பமில்லை. அன்றும் கூட அவர்களுக்கு விருப்பம் இருந்ததில்லை. ஆனால், சூழ்நிலை தான் அன்றை விருப்பத்தை பலிகடாவாக்கியிருந்தது. எனவே கோட்டைத் தாண்டிய இருவரும், வீடெடுத்து தங்கி வாழ்கின்றனர். வயதான தம்பதிகள் இருவர் திருமணத்திற்கு பிறகு லிவ்விங் உறவில் வாழும் ப்ரேம்களில் அத்தனை புதுமை தொக்கி நிற்கிறது.
அவர்களிடையே உலாவும் அன்பு, அரவணைப்பு நம்மை ரசிக்க வைக்கிறது. ஒரு காட்சியில், 'இன்னைக்கு நீ இங்கே தூங்கு' என்கிறார் ஷவானி. இருவரும் இணைந்து இரவைக் கழிக்கின்றனர். இப்படியான காட்சியை வைக்க இயக்குநரிடம் எந்த தயக்கும் இல்லை. தமிழில் கூட 'பவர் பாண்டி' படம் காலம் கடந்து துளிர்விடும் காதல் குறித்து பேசியிருக்கும். இருவரும் இறுதியில் பிரிந்து தனித்தனியே சென்றுவிடுவர். காரணம் குடும்பம், குழந்தை என அடுக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்தப் படத்தில் அவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழ ஆசைப்பட்டு, கோடுகளை எளிதில் தாண்டி வந்துவிடுகின்றனர். முற்போக்காக இந்த கதையை இயக்குநர் அணுகியிருப்பார்.
மண்டி (இர்ஃபான் கான்) ஷ்ருதி (கொங்கோனா சென்)
இரண்டு திறமையான நடிகர்கள் திரையை பகிர்ந்து கொண்டு நடிப்பது சுவாரஸ்யமாகவும், ரசிக்கும் வகையில் அமைந்தது. ஒருவருக்கொருவர் நடிப்பில் மிரட்டுகிறார்கள். தொடக்கத்தில் நிராகரிக்கத்த இர்ஃபான் கானை இறுதியில் கொங்கனா சென் கைபிடிப்பது தான் இந்தப் பகுதிக்கான கதை. என்றாலும், அவர்களுக்காக எழுதப்பட்ட காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. ஏற்கெனவே தன்பால் ஈர்ப்பாளராக இருக்கும் ஒருவரை நம்பி ஏமார்ந்திருப்பார் கொங்கோனா. அதில் கூட தெளிவா, 'தன்பால் ஈர்ப்பாளர் என்பதில் எனக்கு பிரச்னையில்லை.
அது உன் விருப்பம். எப்படியிருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க உனக்கு உரிமையுண்டு. ஆனால் ஒரு பெண்ணை திருமணம் செய்து ஏமாற்ற உனக்கு உரிமையில்லை' என கூறியிருப்பார். இயக்குநர் எந்த இடத்திலும் எந்தக் காட்சியும் தவறாக புரிந்துகொள்ளபட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளார். எனவே நம்பி ஏமார்ந்த விரக்தியிலிருக்கும் கொங்கனாவை மாடிக்கு அழைத்துச் சென்று 'நல்லா கத்தி அழு' என ஆற்றப்படுத்தும் காட்சி அட்டகாசமானது. அதேபோல, ஒரிடத்தில் கொங்கோனா சென்-னை தவறான பார்வையில் இர்பான் பார்த்திருப்பார். அதையே காரணமாக வைத்து அவரை நிராகரித்திருப்பார் கொங்கனா.
பின்னர் வரும் காட்சியில், 'அதற்காகவா என்னை நிரகாரித்தாய்? அதிலென்ன தவறிருக்கிறது. எனக்கு 35 வயதாகிவிட்டது. இன்னும் ஒரு பெண்ணைக்கூட தொட்டதில்லை. நீ அழகாக இருப்பதால் பார்த்தேன்' என்று கூறுவார். ரசிப்பதில் தவறில்லை. வலுக்கட்டயமாக அடைய நினைப்பது தான் தவறு என்பது அப்பாவியான தனது டயலாக்குகளால் உணர்த்தியிருப்பார். இருவருக்குமான காட்சிகளில் நகைச்சுவையுடன் கடக்கும்.
ஷிகா (ஷில்பா ஷெட்டி) ரஞ்சித் (கேகே மேனன்)
படத்தில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது ஷிகா- ரஞ்சித் ஆகியோரின் திருமண உறவு. ஆணாதிக்க மனோபாவம் கொண்ட ரஞ்சித், 'நான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறேன். நீ வீட்ல டிவி தானே பாக்குற' என கேட்கும்போது, சற்றும் யோசிக்காமல், 'நானும் சம்பாதிச்சுட்டு தானே இருந்தேன். குழந்தை வேணும்னு நீ தானே நிறுத்த சொன்ன. உனக்கு எந்த வகையிலும் நான் குறைஞ்சவ இல்ல. உன்ன விட அதிகமா நான் சம்பாதிப்பேன். என்னோட கரியர், டேன்ஸ் எல்லாமே உனக்காக தானே தியாகம் பண்ணேன்' என்று பேசிவிட்டு இறுதியில் தனக்கு பிடித்த மற்றொரு உறவையும் குடும்பத்திற்காக தியாகம் செய்துவிடுவாள்.
ஷிகா அதாவது ஷில்பா ஷெட்டியின் கதாபாத்திரம் ஒருவித குற்ற உணர்ச்சியுடனே இருக்கும். சொல்லப்போனால் ஷில்பா ஷெட்டியும் அவரது கணவரான கேகே மேனன் இருவருமே தனிதனியான உறவில் இருப்பர். ஆனால், அதை ஒருவர் மற்றொருவரிடம் பகிர்ந்துகொள்ளும்போது, ஷில்பா ஷெட்டி மட்டும் குற்றத்துள்ளாக்கப்படுவார். கேகே மேனன் இன்னொரு பெண்ணிடம் உறவிலிருப்பது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது .
கேகே மேனன் 'என் வாழ்க்கையில் இரண்டு ஆண்டுகளாக ஒரு பெண் இருக்கிறாள்' என சொல்லும்போது ஷில்பா அமைதியாக இருப்பாள். அதே ஷில்பா 'நான் ஒருவருடன் படத்திற்கு சென்றேன்' என தன் காதலனைப்பற்றி கூறும்போது, 'என் படுக்கையறையை பயன்படுத்துனியா?' என கேட்பார். இந்த காட்சி அவ்வளவு அடர்த்தியாக எழுப்பட்டிருக்கும் அதேபோல, குடும்பத்துக்காகவும், குழந்தைக்காவும் தனக்கு விரும்பியவரோடு இறுதிவரை செல்ல துணியும் தைரியம் ஷில்பாக்கு வாய்க்காது. இதனை முதல் கதையில் வரும் முதிய தம்பதியின் கதையுடன் பொருத்தி பார்க்க முடியும். எல்லாருக்கும் அந்தக் கோடுகள்தான் பிரச்சினை. இதுவே, கேகே மேனனால் அந்தக் கோடுகளை எளிதாக கடந்துவிட முடிகிறது. இந்த சிக்கல்களை விரிவாக பேசியிருக்கும் விதத்தில் படத்தை நிச்சயம் பாராட்டலாம்.
நேஹா (கங்கனா ரணாவத்) ராகுல் (ஷர்மன் ஜோஷி)
எல்லோரும் தேவையுடையவர்கள்தான். எல்லாருக்கும் ஒரு தேவை இருக்கவே செய்கிறது. அதுபோலத்தான் ராகுலுக்கும். தனது ப்ரமோஷனுக்காக அவன் செய்யும் செயல்கள், இறுதியில் அவன் விருப்பதிற்கு எதிராக முடியும்போது, அவன் எந்தப் பாதையை தேர்ந்தெடுக்கிறான் என்பதுதான் நேஹா - ராகுல் காதல் பகுதி. நேஹா முதலாளியுடன் உறவிலிருந்த போதும், அவளை தொடக்கத்தில் நேசித்ததைப்போலத்தான் இறுதிவரை நேசிக்கிறான் ராகுல். அவனுக்கு எந்த பதற்றமோ, நிராகரிப்போ இருக்கவில்லை.
ஒரு புரோமோஷனுக்காக தன் காதலை இழக்க அவன் தயாராக இல்லை. 'இந்த பணம் எப்படி நம்மை ஆட வைக்கிறது' என ராகுல் பேசுவது அவரது ஒட்டுமொத்த வாழ்க்கைக்கான வசனம். குறிப்பாக படத்தில் சஞ்சித் தத்தாவின் வசனங்கள் தெறிக்கின்றன. அது கதைக்கான போக்கை இன்னும் இறுக்க உதவுகிறது.
இந்தக் கதைகள் எல்லாமே திருமணத்திற்கு முன், பின்பான உறவுச் சிக்கல்கள் குறித்த ஒரே புள்ளியில் இணைகின்றன. தங்களைச் சுற்றியுள்ள கோடுகளை சிலர் தாண்ட தயாராக உள்ளனர். சிலர் குடும்பம், குழந்தை என தன் விருப்பத்தை புதைத்துவிடுகின்றனர். தன்பால் ஈர்ப்பு, திருமணத்தை மீறிய உறவு, லிவ் இங் ரிலேஷன்ஷிப், கன்னித்தன்மை என பல்வேறு விஷயங்களை மிகவும் தைரியமாக அணுகப்பட்டுள்ள இந்த படம் நிச்சயம் ஆராயப்பட வேண்டிய படைப்பு.
> முந்தைய அத்தியாயம்: தெறிப்புத் திரை 3 | Cobalt Blue - அன்பும் துயரும் பிரிக்க முடியாதவை, தன்பாலின ஈர்ப்பிலும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT