Last Updated : 29 Dec, 2024 01:05 PM

 

Published : 29 Dec 2024 01:05 PM
Last Updated : 29 Dec 2024 01:05 PM

Squid Game 2 விமர்சனம்: பரபரக்கும் ‘குருதி ஆட்டம்’ நிறைவு தந்ததா?

‘ரவுண்ட் சிக்ஸ்’ என்ற பெயரில் கொரியன் மொழியில் வெளியாகி பின்னர் நெட்ஃப்ளிக்ஸில் ’ஸ்குவிட் கேம்’ என்ற பெயரால் உலகம் முழுவதும் அறியப்பட்ட இத்தொடர் ஓடிடியில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட வெப் தொடர்களில் ஒன்று. கரோனாவுக்கு பின்னால் ஓடிடி படைப்புகளின் மீதான ஆர்வம் அதிகரித்துக் கொண்டிருந்த வேளையில் பலரது கவனத்தையும் வெப் தொடர்களின் பக்கம் கொண்டு வந்த பெருமை ‘ஸ்குவிட் கேம்’, ‘மனி ஹெய்ஸ்ட்’ போன்ற தொடர்களையே சேரும். விறுவிறுப்பான திரைக்கதை, ‘ரா’வான காட்சியமைப்பு என பெரும் ரசிகர் கூட்டத்தை தன் வசப்படுத்திய இத்தொடரின் இரண்டாவது சீசன் நீண்ட காத்திருப்புக்குப் பின் வெளியாகியுள்ளது.

முதல் சீசனில் 45 பில்லியன் வொன் பணத்தை ஸ்குவிட் கேம் போட்டிகளில் வென்ற Seong Gi-hun, குற்ற உணர்ச்சி காரணமாக சொந்த தேவைகளுக்கு அந்த பணத்தை அவரால் பயன்படுத்த முடியவில்லை. மாறாக அந்த விளையாட்டை உருவாக்கியவர்களை தேடிக் கண்டுபிடித்து அந்த ஆட்டத்தையே முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் முனைப்பில் செயல்படுகிறார். அதற்காக எக்கச்சக்க பணத்தை வாரி இறைத்து வருகிறார். இன்னொரு பக்கம் தனது அண்ணனைத் தேடி, ஸ்குவிட் கேம்ஸ் நடக்கும் தீவுக்குச் சென்ற போலீஸ்காரரான Hwang Jun-ho, தனது அண்ணன்தான் அந்த விளையாட்டையே நடத்தும் தி ஃப்ரன்ட் மேன் என்று போன சீசனில் தெரிந்து கொண்டார். அண்ணனால் சுடப்பட்ட அவர் தற்போது சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் வீரியத்துடன் தனது தேடல் பணியை தொடர்கிறார்.

Seong Gi-hunன் முயற்சிகளை பற்றி தெரிந்து கொள்ளும் தி ஃப்ரன்ட் மேன் அவரை பிடித்து வரச் செய்கிறார். தன்னை மீண்டும் விளையாட்டுக்குள் அனுமதிக்குமாறு Seong Gi-hun கேட்கவே அதற்கு ஒப்புக் கொள்கிறார் ஃப்ரன்ட் மேன். Seong Gi-hun பல்லில் பொறுத்தப்பட்ட ஒரு டிராக்கர் கருவி உதவியுடன் அந்த தீவுக்கான வழியை பின் தொடர்கிறார் Hwang Jun-ho. விளையாட்டுக்குள் நுழைந்த Seong Gi-hun, தன்னுடைய அனுபவத்தைக் கொண்டு அங்கு வரும் போட்டியாளர்களுக்கு உதவி செய்ய முயல்கிறார். அவரது எண்ணப்படி போட்டியை தடுத்து நிறுத்த முடிந்ததா? Hwang Jun-hoவும் தீவுக்கு வந்த சேர்ந்தாரா? என்பதே ‘ஸ்குவிட் கேம் 2’ வெப் தொடரின் கதை.

பொதுவாக ஒரு வெப் தொடரோ அல்லது திரைப்படமோ அதன் முதல் பாகம் பெற்ற வெற்றிக்கு காரணமான அம்சங்களை அடுத்தடுத்த பாகங்களில் தக்கவைப்பது என்பது மிக அரிது. அப்படி தக்கவைக்கும் படைப்புகளே கிளாசிக் தன்மை பெறுகின்றன. முதல் பாகத்தில் இருந்த அந்த ‘டெம்போ’ எந்த இடத்திலும் குறைந்து விடாமலும் சில இடங்களில் முந்தைய சீசனை விட சிறப்பாகவும் வந்திருக்கிறது. ஆரம்பத்தில் மெதுவாக தொடங்கும் தொடர், சில நிமிடங்களிலேயே அதன் டிராக்கில் நுழைந்து விடுகிறது. ஹீரோவின் தேடல், அதே போன்ற நோக்கம் கொண்ட ஒரு போலீஸ்காரரும் ஹீரோவும் சந்தித்துக் கொள்ளும் இடம், பின்னர் இருவரும் தீவை தேடிச் செல்வது என எந்த இடத்திலும் தொய்வின்றி செல்கிறது. தேவையற்ற செருகல்கள் எதுவுமின்றி கிட்டத்தட்ட 2 எபிசோடிலேயே இவை அனைத்தையும் சொல்லிவிட்டது சிறப்பு.


முதல் சீசனின் சிறப்பம்சமே அதன் கதாபாத்திர வடிவமைப்புதான். போட்டிக்குள் வரும் ஒவ்வொரு கேரக்டரின் பின்புலமும், நோக்கமும் வெகு சிறப்பாக எழுதப்பட்டிருக்கும். அதே போலவே இதிலும் கிட்டத்தட்ட எல்லா கதாபாத்திரங்களின் பின்னணியும் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பாக கர்ப்பிணியாக வரும் பெண், புற்றுநோய் பாதித்த சிறுமியின் தந்தை, முழுமையான பெண்ணாக மாறவிரும்பும் திருநங்கை, உணர்வுபூர்வமான் அம்மா - மகன் காம்போ உள்ளிட்ட கேரக்டர்களின் தன்மைகள் மிக அழகாக காட்டப்பட்டுள்ளன.

முதல் சீசனில் கூட போட்டி நடக்கும் எபிசோட்களில் இருக்கும் விறுவிறுப்பு போட்டிகள் இல்லாதவற்றில் சற்று குறைவாக இருப்பது போல தோன்றும். இதில் அந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில், ஒவ்வொரு எபிசோடுமே சிறிய தொய்வுகள் கூட எட்டிப் பார்த்துவிடாத வகையில் எழுதப்பட்டுள்ளன. உதாரணமாக, ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் போட்டியை விட்டு வெளியேறுவதற்கான வாக்கெடுப்பு நடக்கும் காட்சிகளை சொல்லலாம்.

முந்தைய சீசனில் தி ஃப்ரன்ட் மேன் ஆக வந்த Hwang In-ho அதில் பெரிதாக வேலை இருக்காது. ஆனால் இந்த சீசனில் அவருக்கு தொடர் முழுக்க ஹீரோவின் திட்டங்களை அவர் கூடவே இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் கேரக்டர். முகத்தில் பெரிதாக உணர்ச்சிகளை காட்டாமல் அமைதியாக வில்லத்தனத்தை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கிறார்.

எந்த இடத்திலும் நம்மை அங்கிங்கு திரும்பிவிடாத திரைக்கதைம் அதற்கு ஈடு செய்யும் பின்னணி இசை என விறுவிறுப்பும் பரபரப்பும் நிறைந்திருந்தாலும், பார்ப்பவர்களுக்கு பல கேள்விகள் எழாமல் இல்லை. போன போட்டியில் வெற்றி பெற்று கோடிக்கணக்கான பணத்தை வென்ற ஒருவரை ஏன் மீண்டும் போட்டிக்குள் அனுமதிக்க வேண்டும்? அதற்கு சொல்லப்பட்ட காரணமும் அழுத்தமாக இல்லை. இந்த போட்டியையே முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று சொல்லும் ஹீரோ, தனக்கு போட்டியில் கலந்து ஒரு வாய்ப்பு வேண்டும் என்று கேட்டதுமே வில்லன் சம்மதிப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை.

அதே போல முதல் சீசனில் பார்வையாளர்களின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதிப்பது போல ஒரு கேரக்டர் வரும். இந்த சீசனிலும் அதே போல ஒரு கேரக்டரை உருவாக்கும் முயற்சியாக,வரும் அந்த ராப் பாடகர் கதாபாத்திரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

க்ரீன் லைட், ரெட் லைட் என்ற பெயரில் வரும் அந்த போட்டியைத் தொடர்ந்து எல்லா போட்டியும் ஏற்கெனவே வந்தது தான் என்ற ஹீரோவின் எதிர்பார்ப்புக்கு மாறாக வெவ்வேறு போட்டிகள் இடம்பெறச் செய்தது ரசிக்கும்படி இருந்தது. அவை வரும் எபிசோட்களிலும் பரபரப்புக்கு பஞ்சமில்லை. எனினும் இந்த சீசனின் பிரச்சினையே அந்த கடைசி எபிசோட்தான் என்பதை குறிப்பிடுவது அவசியம்.

அதுவரை ஒவ்வொரு எபிசோடிலும் வெவ்வேறு போட்டிகள், சுவாரஸ்யமான திருப்பங்கள் என்று சென்று கொண்டிருந்த திரைக்கதை, கடைசி எபிசோடில் சுத்தமாக படுத்தே விட்டது. கிட்டத்தட்ட ஒரு மணி நேர எபிசோடில் கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் சுட்டுக் கொண்டே தான் இருக்கிறார்கள். அது ஒரு கட்டத்துக்கு மேல் பெரும் சலிப்பை ஏற்படுத்தி எப்போது முடியும் என்று நேரத்தை பார்க்க வைத்து விடுகிறது. இவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள், பாதுகாப்பு வீரர்கள் என கட்டமைக்கப்பட்ட ஒரு இடத்தை வெறும் ஆறு பேரால் சில துப்பாக்கிகளை மட்டும் வைத்துக் கொண்டு கட்டுப்படுத்தி விட முடிவது எல்லாம் நம்பும்படி இல்லை. கடைசியில் எந்தவொரு முடிவும் இன்றி அப்படியே கட் செய்து சீசனை முடித்ததும் ஒரு நிறைவான உணர்வை தரவில்லை.

முதல் எபிசோடில் இருந்து ஆறாவது எபிசோட் வரை ஜெட் வேகத்தில் சென்றுகொண்டிருந்த தொடரை இன்னும் மெருகேற்றி 7ஆவது எபிசோடை சற்று சுவாரஸ்யப்படுத்தியிருந்தால் இன்னும் முழுமையான உணர்வை தந்திருக்கும். எனினும் பரபரக்கும் திரைக்கதை, சீட் நுனிக்குக் கொண்டு வரும் காட்சிகளை விரும்பும் த்ரில்லர் ரசிகர்களுக்கும் இது ஒரு ‘செம’ விருந்து என்பதில் சந்தேகம் இல்லை. இத்தொடர் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x