Published : 23 Sep 2024 10:24 PM
Last Updated : 23 Sep 2024 10:24 PM
இந்தியில் வெளியாகி நாடு முழுவதும் பரவலாக கவனிக்கப்பட்ட தொடர்களில் ஒன்று ‘பஞ்சாயத்’. இந்திய வெப் தொடர்கள் என்றாலே ரத்தம், வன்முறை, வெட்டு,குத்து என்ற சூழலில் மனதுக்கு ரம்மியமான, இயல்பான கதாபாத்திரங்கள், இதமான காட்சியமைப்புகளுடன் வெளியான இத்தொடர் இதுவரை 3 சீசன்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடரை உருவாக்கிய டிவிஎஃப் நிறுவனம் தற்போது இதனை தமிழில் ரீமேக்கியுள்ள தொடர்தான் ‘தலைவெட்டியான் பாளையம்’.
கல்லூரி படிப்பை முடித்த இளைஞரான சித்தார்த் (அபிஷேக் குமார்), தனக்கு கிடைத்த பஞ்சாயத்து செகரட்டரி வேலைக்காக வேண்டா வெறுப்பாக ஒரு குக்கிராமத்துக்கு வருகிறார். அந்த ஊரின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மீனாட்சி சுந்தரம் (சேத்தன்), தனது மனைவி மீனாட்சி தேவியை (தேவதர்ஷினி) பஞ்சாயத்து தலைவராக்கி, அந்த வேலையை தானே பார்த்துக் கொண்டிருக்கிறார். நகர சூழலில் வளர்ந்த சித்தார்த் அந்த கிராமத்து சூழலுக்கு ஏற்ப எப்படி தன்னை தகவமைத்துக் கொண்டார் என்பதே இந்த ‘தலைவெட்டியான் பாளையம்’ தொடரின் கதைக்கரு.
ரீமேக் என்று வந்துவிட்டாலே அங்கு ஒப்பீடு என்ற அம்சமும் இயல்பாகவே வந்துவிடும் என்பது எழுதப்படாத விதி. அதிலும் அசலை பார்த்தவர்களுக்கு ரீமேக்கில் இருக்கும் சிறு சிறு குறைகள் கூட துருத்திக் கொண்டு தெரிந்துவிடும். இந்த ஓடிடி யுகத்தில் ஏற்கெனவே பரவலாக வெற்றிபெற்ற ஒரு தொடரையோ அல்லது ஒரு படத்தை ரீமேக் செய்வதென்பது கத்தி மீது நடப்பதை போன்ற சிக்கலான ஒன்று. அசலின் அடிநாதத்தை சிதைக்கும் விதமாக திரைக்கதையில் சிறிது பிசகினாலும் முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடும்.
‘பஞ்சாயத்’ வெப் தொடரின் பலமே அதன் நேட்டிவிட்டிதான். ஏறக்குறைய ஒரு வட இந்திய கிராமத்தை நேரில் பார்ப்பது போன்ற உணர்வு தொடர் முழுக்க பார்க்கும் நமக்கு இருந்துகொண்டே இருக்கும். வசனங்கள், காட்சியமைப்புகள் என ஆரம்பம் முதல் இறுதி வரை அவ்வளவு இயல்புத்தன்மை இருக்கும். இன்னொருபுறம் அதற்கேற்ற கதாபாத்திரத் தேர்வு. ஒவ்வொரு கதாபாத்திரமும் எந்தவித செயற்கைத்தனமும் இன்றி எந்த பிரேமில் பார்த்தாலும் அசல் கிராமத்து மாந்தர்களை பிரதிபலிக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கும். வடமாநிலங்களில் இருக்கும் சாதி, மத சிக்கல்கள் குறித்து ஆழமாக அத்தொடர் பேசவில்லை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் கூட, எடுத்துக் கொண்ட கதைக்களத்தை எவ்வளவு இயல்பாக சொல்லமுடியுமோ அவ்வளவு சொல்லியிருந்தது.
இந்த இயல்புத்தன்மை ‘தலைவெட்டியான் பாளையத்தில்’ முற்றிலுமாக மிஸ்ஸிங். கிட்டத்தட்ட தொடர் தொடங்கியதில் இருந்தே கதாபாத்திரங்கள், காட்சியமைப்புகள் என அனைத்திலும் ஒருவித செய்ற்கைத்தனம் தொற்றிக் கொள்கிறது. முக்கியமாக திருநெல்வேலி பக்கத்தில் இருக்கும் ஒரு குக்கிராமம் என்று காட்டுகிறார்கள். ஆனால் அதற்கேற்ற நேட்டிவிட்டி, வட்டார வழக்கு என எதிலும் மெனக்கெடல் தெரியவில்லை. வார்த்தைகளின் முடிவில் ‘லே’ போட்டு பேசிவிட்டால் அது நெல்லை தமிழ் ஆகிவிடும் என்பது யார் கொடுத்த யோசனை என்று தெரியவில்லை.
ஹீரோவாக வரும் அபிஷேக் குமார் சற்றும் அந்த கதாபாத்திரத்துக்கு ஒட்டாதது போல தோன்றுகிறார். ஆரம்பத்தில் கிராமத்து மனிதர்களிடம் அவர் காட்டும் எரிச்சல் ரியாக்ஷன்கள் ஓகே. ஆனால் போகப் போக மெல்ல அவர்களுடன் பழகும் காட்சிகளில் கூட எந்த வித்தியாசமும் காட்டியதாக தெரியவில்லை. கிட்டத்தட்ட ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரே விதமான ரியாக்ஷன்கள் மட்டுமே அவரிடமிருந்து வெளிப்படுகின்றன. சேத்தன், தேவதர்ஷினி, பால் ராஜ், ஆனந்த்சாமி ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலையை முடிந்தவரை சரியாய் செய்திருக்கின்றனர்.
தொடரில் நகைச்சுவையாக வகைப்பட்ட வசனங்கள் சில இடங்களில் கைகொடுக்கவும் செய்திருக்கின்றன. பல இடங்களில் எடுபடாமலும் போகின்றன. தமிழுக்கு ஏற்ப சில காட்சிகளை மாற்றியிருந்தாலும் கரு என்னவோ ஒன்றுதான். ஆனாலும் அசலில் இருந்த அந்த சுவாரஸ்யம் இதில் மிஸ்ஸிங். முக்கியமாக நாயகனை தங்களில் ஒருவனாக ஏற்றுக் கொண்டு பஞ்சாயத்து தலைவர், ஆபீஸ் உதவியாளர், ராணுவ வீரரின் தந்தையாக வருபவர் ஆகியோர் மது அருந்த அழைத்துச் செல்லும் காட்சி, கடைசி எபிசோடில் தலைவரின் மனைவி தேசிய கீதம் பாடும் காட்சி போன்ற முக்கியமான காட்சிகளில் இருக்க வேண்டிய உணர்வுபூர்வ அம்சங்கள் இதில் இல்லை. அந்த காட்சிகள் தேமேவென்று செல்கின்றன.
சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் ‘பஞ்சாயத்’ தொடரில் தொடக்கம் முதல் இறுதி வரை இருந்த அந்த ஒரு மேஜிக், இதில் எந்த இடத்திலும் நிகழவே இல்லை. ஏற்கெனவே ஒரிஜினலை பார்த்தவர்களுக்கு பல இடங்களில் ஏமாற்றம் தரும் வகையில் அமைந்தது பெரும் குறை. புதிதாக பார்ப்பவர்களுக்கு வன்முறை, ரத்தம் இல்லாத சிம்பிளான பாதகம் இல்லாத ஒரு வெப் தொடர் பார்த்த அனுபவம் கிட்டலாம். இன்னொன்று, ஓடிடி தளங்களை கிராமம் முதல் நகரம் வரை அனைவரும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இந்த சூழலில், இதை மெனக்கெட்டு ரீமேக் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்பது படக்குழுவினருக்கே வெளிச்சம். அதற்கு பதில் நல்ல டப்பிங் உடன் அசலை அப்படியே வெளியிட்டிருந்தால் இன்னும் அதிகம் பேரை சென்றடைந்திருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT