Published : 19 Sep 2024 06:27 PM
Last Updated : 19 Sep 2024 06:27 PM

Roopanthara: நவீன திரைக்கதை வடிவில் ஓர் அட்டகாச ஆந்தாலஜி சினிமா | ஓடிடி திரை அலசல்

சாலையில் குழந்தையுடன் யாசகம் பெறும் பெண், ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான சிறுவன், சிறுநீர் கழிக்கும் போது தன்னை இடித்துவிட்டுச் செல்லும் நபரை துரத்திச் செல்லும் ஒரு ரவுடி, நகரத்தைப் பார்க்க வேண்டும் எனும் மனைவியின் விருப்பத்துக்காக கிராமத்தில் இருந்து பெங்களூரு வரும் வயது மூத்த தம்பதி... இந்த நால்வரின் வாழ்க்கையில் ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பே ‘Roopanthara’ படத்தின் விரிவான ஒன்லைன்.

கன்னட திரை உலகில், நேர்த்தியான திரைக்கதையாடலைக் கையாண்டு அறிமுக இயக்குநர் மிதிலேஷ் எடவலத், அழுத்தமாக தனது வரவைப் பதிவு செய்திருக்கும் ஆந்தாலஜி திரைப்படம் 'Roopanthara'. அவருடன் இணைந்து ராஜ் பி.ஷெட்டி வசனங்களை எழுதியிருகிறார். நிகழ் காலத்தில் நாம் கண்டும், கேட்டும் கழிவிரக்கத்துடன் கடந்து செல்லும் எத்தனையோ நிகழ்வுகளில் இருந்து ஒரு நான்கு சம்பவங்களை பார்வையாளர்களின் முன்னிறுத்துகிறார் இயக்குநர்.

ஏஐ-யின் வேகத்துக்கு ஓட பழகிக்கொண்டிருக்கும் மனிதர்களை இரண்டரை மணி நேரம் உட்கார வைத்து, போரடிக்காமல் மனிதத்தைப் போதிக்கிறது இந்த திரைப்படம். போர், ஆயுதங்கள், சுற்றுச்சூழல், சுத்தமான காற்று, தண்ணீரின் தேவை, காவல்துறை, தனியார் மருத்துவமனை கட்டணம், ஆன்லைன் விளையாட்டுகள், கணவன் - மனைவி உறவு, கிராமம், விவசாயம் என நிகழ்கால நிகழ்வுகளை பிரச்சாரமின்றி, நவீன அழகியல் தன்மைக் கொண்ட சினிமாவாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

எந்த வகையிலும் தொடர்பே இல்லாத நான்கு கதாப்பாத்திரங்கள் ஓர் இரவில் கடந்து செல்லும்படியாக வரும் இடங்களில் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார் இயக்குநர். ஒருசில இடங்களில் கூர்தீட்டப்பட்ட கத்தி போல பாய்கிறது வசனங்கள். ஒரு புழு, பட்டாம்பூச்சியாக நான்கு நிலைகளைக் கடக்க வேண்டும். இயற்கையாக நிகழும் இந்த மாற்றங்களைக் கடந்து அனைத்து புழுக்களும் பட்டாம்பூச்சி ஆக மாறுவதில்லை. அதிலும் சில சூரிய வெளிச்சத்தைப் பார்ப்பதற்கு முன்னதாகவே மரித்துப் போகின்றன. முட்டை, மயிர்க்கொட்டி, கூட்டுப்புழு, பட்டாம்பூச்சியென இந்த வாழ்வியல் உருமாற்றத்தை தனது 4 கதாப்பாத்திரங்களைப் பொருத்தி கதை சொன்ன விதத்தில் அசரடித்திருக்கிறார் இயக்குநர். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும், அவரது படைப்பின் உன்னத தன்மையுணர்ந்து முழுமையான அர்ப்பணிப்பைக் கொடுத்துள்ளனர்.

குடிக்கிற தண்ணியும், சுவாசிக்கிற காத்தும் நச்சாக மாறியிருக்கும் எதிர்காலத்தில் தொடங்குகிறது இந்தப் படம். இந்த அசாதாரனமான நிலைக்கு மனிதர்களைத் தவிர வேறு யாரையுமே குறை சொல்லிவிட முடியாது. இடிபாடிகளும், சிதிலமடைந்த கட்டிடங்களும் கருப்பை அப்பிக்கிடக்க, முகக்கவசத்தை அணிந்த மனிதர்கள் ஒரு சொட்டு தண்ணீருக்காக ஒருவரை ஒருவரை தாக்கி உயிர் வாழ்தலுக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். சுத்தமான காத்து வீசும் பகுதிக்குள் தடையை மீறி நுழைந்துவிட்ட மனிதர்களை அழிக்க அதிநவீன ஆயுதங்களோடு வருகிறது இரண்டு சிறார்கள் உட்பட 5 பேர் கொண்ட ஒரு கும்பல். அப்பகுதியில் நடோடியாய் திரியும் முதியவர் ஒருவர் இவர்களது துப்பாக்கி குறியில் சிக்கிக்கொள்கிறார்.

அவரைப் பிடித்து விசாரிக்கும் அந்த கும்பலிடம், தான் ஒரு கதைச்சொல்லி என்கிறார் முதியவர். அந்த ஆயுதம் தாங்கிய கும்பலின் லீடர், முதியவரை கதை சொல்லுமாறு கேட்கிறான். அதேநேரம் கதை நன்றாக இல்லையென்றால், அவரைக் கொன்றுவிடுவதாக நிபந்தனையும் விதிக்கிறான். தனது அழுக்குமூடையில் இருந்து ஒரு குட்டி டப்பாவுக்குள்ளிருந்து அந்த முதியவர் ஒரு பட்டுப்புழுவின் முட்டையை எடுக்கிறார்.

பின்னர் கடந்த காலத்தில் வாழ்ந்த சாலையில் குழந்தையுடன் யாசகம் பெறும் பெண், ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான சிறுவன், சிறுநீர் கழிக்கும் போது தன்னை இடித்துவிட்டுச் செல்லும் நபரை துரத்திச் செல்லும் ஒரு ரவுடி, நகரத்தைப் பார்க்க வேண்டும் எனும் மனைவியின் விருப்பத்துக்காக கிராமத்தில் இருந்து பெங்களூரு வரும் ஏழ்மையான ஓர் வயது மூத்த தம்பதி என ஒரு நாலு பேரின் கதைகளைச் சொல்கிறார். யார் அந்த 4 பேர்? அவர்களுடைய கதை என்ன? கடந்த காலத்தில் வாழ்ந்த இந்த 4 பேருக்கும், எதிர்காலத்து மனிதர்கள் படுகின்ற கஷ்டங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? முதியவர் சொன்ன கதை ஆயுதமேந்திய கும்பலுக்குப் பிடித்ததா? இல்லை முதியவர் கொல்லப்பட்டாரா? என்பதுதான் இப்படத்தின் திரைக்கதை.

ஹனுமக்கா - சோம்சேகர் போலேகன் இருவரும் ஏழ்மையான வயது மூத்த தம்பதியாக வாழ்ந்திருக்கின்றனர். ஒரு வயதான கணவன் - மனைவி கதாப்பாத்திரத்தை அத்தனை அழகாக கவிதை போல் எழுதியிருக்கிறார் இயக்குநர். இந்த ஆந்தாலஜி சினிமாவில் ஆகச்சிறந்த கதையையும், நடிப்பையும் கொண்டது இந்த போர்ஷன்தான். விம்மிக் கொண்டு வரும் அழுகையை அடக்கும்போது உணரப்படும் வலியையும், வேதனையையும் பார்வையாளர்களுக்கு கொடுக்கிறது. ஹனுமக்கா-சோம்சேகர் போலேகன் இருவரும், காதல், நகைச்சுவை, பாசம், அன்பு, நோய், பசி, தூக்கம், துக்கமென எல்லா இடங்களிலும் ஸ்கோர் செய்கின்றனர். இந்தப் படத்தை உன்னதமாக்கியதில் இவர்களது பங்களிப்பு மிக முக்கியமானது. விருதுகள் இவர்களை அலங்காரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

இரண்டாவது கதையில் யாசகம் கேட்கும் பெண்ணாக வரும் லேகா நாயரும், மூன்றாவது கதையில் ஆன்லைன் விளையாட்டு அடிமை மாணராக வரும் அஞ்சன் பரத்வாஜும் கவனிக்க வைக்கின்றனர். லேகா நாயர் கதையில் வரும் காவலர்களின் பங்களிப்பும், லேகா நாயருக்கு உதவிடும் கான்ஸ்டபிளின் நடிப்பு சிறப்பு. ஒரு வழக்கை தனது நுட்பமான அறிவைக் கொண்டு மனதார உணர்ந்திருக்கும் தலைமைக் காவலர், மனசாட்சிக்கு விரோதமாக அதை கேஸை எப்படி முடிக்கிறார் என்பது நிகழ்கால நிஜங்களைத் தூலமாக காட்டியிருக்கிறது.

அதுவும் அவர் பேசும், "ஏற்கெனவே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பாதிக்கப்பட்டவளை, மீண்டுமொரு முறை வன்கொடுமை செய்வதுதான் நம்ம சிஸ்டத்தோட நடைமுறை" என்ற வசனம் மரணபங்கம். இந்த ஆந்தாலஜியில் வரும் டார்க் வெப் மாணவன் கதை மட்டும்தான் சரியாக ஒட்டவில்லை. கதையோட்டத்தில் பெரிய உறுத்தலாக இல்லை. அந்தப் பகுதியை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக பதிவு செய்திருக்கலாம்.

கன்னட திரையுலகில் ஏரியா ரவுடி கதாப்பாத்திரம் ராஜ் பி.ஷெட்டிக்கு என எழுதிக் கொடுக்கப்பட்டு விட்டதா என தெரியவில்லை. அந்த கதாப்பாத்திரத்துக்குள் தன்னை அளவெடுத்துப் பொருத்திக் கொண்டுள்ளார். ஆந்தாலஜியின் நான்காவது கதையில் வரும் ராஜ் பி.ஷெட்டியின் இயல்பை மீறாத நடிப்பு ஈர்க்கிறது. அவரது தொடக்கக் காட்சியில் அவர் மீது விழும் நம் கண்கள், இறுதிக்காட்சியில் அனிச்சையாக அவரைக் காண்பதில் இருந்து விலகிக் கொள்கிறது. அந்த காட்சியின் தொடர்ச்சியாக டாப் ஆங்கிள் ப்ஃரேம் ஒன்று வரும் ராஜ் பி.ஷெட்டியின் உடல் மொழியும், முகபாவனைகளும், பார்வையாளர்களுக்கு பயம் கலந்த சோகத்தைக் கொடுத்துவிடுகிறது.

பிரவீன் ஷிரியனின் கேமரா நான்கு கதைகளையும் உண்மைக்கு மிக நெருக்கமாக உணர வைக்கிறது. மஞ்சள் விளக்கொளியின் ராத்திரிகளை பிரவீன் ஷிரியனின் கேமிரா தங்க ஜரிகை போல் பிரித்துக் காட்டியிருக்கிறது. பிரவீன் ஷிரியன், புவனேஷ் மற்றும் மணிவண்ணன் கூட்டணியின் கட்ஸ், இந்த ஆந்தாலஜி திரைப்படத்தை எங்கேஜிங் ஆக்குகிறது. மிதுன் முகுந்தன் பின்னணி இசை இரைச்சலற்று ஈர்க்கிறது. பிளேஸ் செய்யப்பட்ட இடங்களில் வரும் அனைத்துப் பாடல்களுமே சிறப்பாக இருக்கிறது.

கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது. தமிழ் டப்பிங் இல்லை. சிக்னலில் நிற்கும் போது குழந்தையுடன் யாசகம் கேட்கும் பெண்ணையோ, பரபரப்பான நகரங்களில் சாலையைக் கடக்கும் வயதான தம்பதியையோ, ஒடிசலான உருவம் கொண்ட ஏரியா ரவுடியையோ, ஏர் பாட்ஸ் அணிந்தபடி செல்போனில் கேம் விளையாடும் மாணவனையோ பார்க்க நேரும்போது உங்கள் மனதுக்குள் சிறகு விரிக்கும் செதிலிறகிகள்தான் இந்த 'Roopanthara' திரைப்படம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x