Published : 08 Jul 2024 06:21 PM
Last Updated : 08 Jul 2024 06:21 PM
நிழலுலகில் வழியும் ரத்தத்தில் சரி, தவறென்ற எந்த நியாயமும் இருக்காது. சுயநலம் மட்டும்தான் அங்கே உயிர் பிழைத்தலுக்கான ஒரே வழி. அந்த உயிர்பிழைத்தலும் கூட அதிகாரத்தை ருசிப்பார்க்கத்தான். தந்தை, மகன், மனைவி என்ற உறவுகளையெல்லாம் கடந்தது அதிகாரம். அந்த அதிகாரத்தை அடைய நிகழும் மோதல்களின் ரத்தச் சரித்திரமே ‘மிர்சாபூர்’ இணையத் தொடரின் மூன்றாவது சீசன். அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.
மிர்சாபூரின் சிம்மாசனத்துக்காக நடக்கும் ரத்த வேட்டையில் அகண்டானந்த் திரிபாதியும் (பங்கஜ் திரிபாதி), அவரது மகன் முன்னாவும் (திவ்யெந்து) சுட்டுக்கொல்லப்படுவதுடன் 2-வது சீசன் முடியும். தற்போது வெளியாகியிருக்கும் 3-வது சீசனில், முன்னா இறந்துவிடுகிறார். ஷரத் சுக்லாவால் (அன்ஜூம் சர்மா) காப்பாற்றப்படும் அகண்டானந்த் திரிபாதிக்கு மறைவான இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அதேசமயம் தனது கணவர் முன்னாவின் கொலைக்கு காரணமாக குட்டு பண்டிட்டை (அலி பசல்) கொல்வதற்காக காவல்துறை மூலமாக திட்டம் தீட்டுகிறார் முதல்வர் மாதுரி (இஷா தல்வார்). மறுபுறம் ‘இனி மிர்சாபூருக்கு நான் தான் ராஜா’ என குட்டு பண்டிட், திரிபாதியின் சிலையை உடைத்து, ஆயுதங்களை தயாரிக்கும் வேலையை தீவிரப்படுத்துகிறார். அவருக்கு துணையாக இருக்கிறார் கோலு (ஸ்வேதா திரிபாதி).
குட்டுவை அழித்து சிம்மாசனத்தை பிடிக்க காய் நகர்த்துகிறார் ஷரத் சுக்லா. இதனிடையே சத்ருகன் தியாகி (விஜய் வர்மா) தன்னுடைய சகோதரன் மறைவுக்கு காரணமாக கோலுவை பழிவாங்க நினைக்கிறார். அதிகாரத்தை பிடிக்க நடக்கும் மோதல்கள், பழிவாங்குதல், அகண்டானந்தின் எழுச்சி, குட்டு பண்டித்தின் சறுக்கல்களை ஆபாச வார்த்தைகளாலும், அதீத வன்முறைகளால் பேசுகிறது இந்த மூன்றாவது சீசன். மொத்தம் 10 எபிசோடுகள்.
மிக நேர்த்தியாக ஒரு க்ரைம் உலகை உருவாக்கி அதற்குள் அதிகபட்ச சுயநலத்தைக் கொண்ட கதாபாத்திரங்களை நுழைத்து ஒவ்வொருவருக்கும் ஒரு நியாயம் என்ற ரீதியில் வன்முறையை கோத்திருக்கிறார் இயக்குநர் கரண் அனுஷ்மான். அவருடனான எழுத்துக் குழு மிக நுணுக்கமாக காட்சிகளை கட்டமைத்திருப்பது பாராட்டுக்குரியது.
இந்த சீசன், ஷரத் சுக்லாவின் புத்திசாலித்தனமான ‘சிம்மாசன’த்தை நோக்கிய காய் நகர்த்துதலை மையமாக வைத்து நகர்கிறது. அதற்கான அவரின் திட்டமிடுதல், நிதானமான செயல்பாடுகள், அகண்டானந்த் திரிபாதியின் திரைமறைவு வழிநடத்தல், குட்டு பண்டித்தை எதிர்கொள்ளும் முறை என கடந்து இறுதி எபிசோடில் உச்சமடைகிறது.
‘காயம்பட்ட சிங்கத்தோட மூச்சு; அதோட கர்ஜனைய விட வலிமையானது’ என்பதைப்போல இனி பங்கஜ் திரிபாதி டம்மி என நினைத்துக்கொண்டிருக்கும்போது வேறு மாதிரியான முடிவு களத்தை சுவாரஸ்யமாக்குகிறது. அதேபோல உடல் பலத்தை மட்டுமே நம்பியிருந்த குட்டு பண்டிட்டின் பரிணாம முதிர்ச்சி எதிர்நிலை தாதாவை இன்னும் உறுதியாக்குவது பலம்.
எதிர்பாராத முக்கிய கதாபாத்திரங்களின் மரணங்கள், மோதல்கள் என சூடுபிடிக்கும் இந்த சீசனில் பெரும்பாலும் வசனங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனாலேயே சில இடங்களில் மெதுவாக நகரும் உணர்வைத் தருகின்றன.
பீனா திரிபாதி கதாபாத்திரத்தின் கபட நாடகங்கள் கவனம் பெறுகின்றன. போலவே, கோலு செய்யும் தில்லான காரியங்கள் ரசிக்கவும், அதனால் ஏற்படும் பாதிப்புகளில் அவர் மீண்டு வரும் உறுதியும் அயற்சியில்லாமல் நகர்த்துகிறது. ‘உயிர் வாழ்றதுக்கு எது தேவையோ அதான் கொள்கை’ என குட்டு பண்டித்தின் தந்தை பேசும் வசனம் அத்தனை அழுத்தங்களை உள்ளடக்கியிருக்கிறது. குற்றங்கள் ஒருபுறம் நடக்க, சட்டத்தை நம்பியிருக்கும் கொள்கைவாதி ஒருவரின் நிலையும் காட்சிப்படுத்தபடுகிறது. இறுதியில் அவரது தோல்வி தவறான முன்னுதாரணம்.
‘திரிபாதி’, ‘பண்டிட்’, ‘தியாகி’ ஆகிய ஆதிக்க சாதி இந்துக்களுக்கான அதிகார மோதல்களையும், ரத்த உறவுகளைத் தாண்டி மற்றவர்களுக்கு அரியாசனத்தை கொடுக்க மறுக்கும் மனநிலையையும், பரம்பரைவழி பெருமையை தூக்கி சுமப்பதையும் வெளிச்சமிடும் தொடரில் இடைச்சாதியினருக்கான குரல்கள் இல்லை என்பதை அந்த நிலத்தின் அரசியல் வெளிப்படுத்துகிறது.
ஒவ்வொரு கதாபாத்திரங்களின் குணாதியசங்களையும் முடிந்த அளவுக்கு முரண் தன்மையுடன் எழுதியிருப்பது மொத்த தொடரையும் சுவாரஸ்யமாக்குகிறது. 5-வது எபிசோடுக்குப் பிறகு வன்முறைக் காட்சிகள் வேகமெடுக்கின்றன. குறிப்பாக சிறுவன் ஒருவனை கொல்லும் காட்சி கொடூரம். ஆபாச வசனங்கள் அதீதம். எங்கேயும் பெரிய அளவில் அயற்சியில்லாமல் நகரும் தொடரில் சத்ருகன் தியாகியின் அரக்கத்தனமும் அதில் இருக்கும் சிறிய ட்விஸ்டும் அந்தப் போர்ஷனையும் வீண்டிக்காமல் நகர்த்துகிறது. ஆனால், அடுத்த சீசனுக்கான எதிர்பார்ப்பு மேலோங்குவதற்கு பதிலாக சோர்வு ஏற்பட ஆரம்பிக்கிறது. இருப்பினும் இறுதியில் வரும் 10 நிமிடமும், அதற்குப் பின் வரும் திருப்பங்களும் கச்சிதமாக செதுக்கப்பட்டுள்ளன.
முதிர்ந்த ‘டான்’ ஆக பங்கஜ் திரிபாதியின் நிதானம் அசரடிக்கிறது. வழக்கமான தன்னுடைய அட்டாகசமான நடிப்பால் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்கிறார். அலி ஃபசலிம் திமிரும், ‘கெத்தான’ ஸ்வேதா திரிபாதியின் நடிப்பும் ரணகளம். அதீத உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் பொறுமையாக காய் நகர்த்தும் அன்ஜூம் சர்மா, இந்தக் கூட்டத்தில் தன்னை அழுத்தமாக நிறுவுகிறார்.
இஷா தல்வார் தான் சார்ந்த முதல்வர் கதாபாத்திரத்தை நேர்த்தியாக கையாள்கிறார். ஆனால், ஒரு முதல்வரை யார்வேண்டுமானாலும் வந்து சந்திக்கலாம் என்பதும், குற்றவாளியை மாநில முதல்வரே நேரில் வந்து டீல் செய்வதும் நெருடல். அமைதியாக இருந்து கிடைக்கும் தருணங்களில் நடிப்பால் ஸ்கோர் செய்கிறார் பீனா திரிபாதி. விஜய் வர்மாவின் கதாபாத்திர மூர்க்கமும், நடிப்பின் ஆக்ரோஷமும் ஒன்று சேரும் இடங்கள் அழுத்தம் கூட்டுகின்றன. மற்ற துணைக் கதாபாத்திரங்கள் தேவையான நடிப்பால் அழுத்தமான பங்களிப்பை செலுத்த தவறவில்லை.
காட்சித் தரும் உணர்வுகளை தேவையான இடங்களில் மட்டும் ஒலிக்கும் பின்னணி இசையால் இரட்டிப்பாக்குகிறார் இசையமைப்பாளர் ஆனந்த் பாஸ்கர். இருட்டிலும் குவாலிட்டியை கூட்டுகிறது சஞ்சய் கபூரின் கேமரா. அஷ்வின் மேதா, அன்ஷூல் குப்தாவின் படத்தொகுப்பு நேர்த்தி.
நீதிமன்றம், காவல் துறை, அரசாங்கம் என எல்லாவற்றையும் ஒரு கட்டத்தில் கேளிக்கூத்தாகிவிடுகிறது தொடர். மொத்த அதிகாரமும் நிழலுக தாதாக்களின் கையில் இருப்பதாக சித்தரிக்கப்படுகிறது. லாஜிக்கே இல்லாத காட்சிகள் கற்பனைத் தொடர் என்பதை அடிக்கடி நினைவூட்டுகிறது. கதாபாத்திரங்களின் வளர்ச்சியை கொஞ்சம் கொஞ்சமாக பரிணமிக்க வைக்கிறது தொடர். ஆனால், மொத்தமாக அடுத்தக்கட்டத்துக்கு நகர்கிறதா என்றால் அது சந்தேகமே. ஒரே இடத்தில் சுற்றி க்கொண்டிருப்பது போன்ற எண்ணம் சிலருக்கு ஏற்படலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT