Last Updated : 30 May, 2024 05:18 PM

 

Published : 30 May 2024 05:18 PM
Last Updated : 30 May 2024 05:18 PM

Panchayat Season 3: நெகிழ்ச்சி தந்ததா ‘அசல்’ கிராமத்து கதைக்களம்? | ஓடிடி திரை அலசல்

கரோனா காலகட்டத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் ‘பஞ்சாயத்’. வட இந்திய கிராமங்களின் நிலையை அப்படியே கண்முன் நிறுத்திய இத்தொடரின் மூன்றாவது சீசன் தற்போது வெளியாகியுள்ளது. நகைச்சுவைக்கும், நெகிழ்ச்சியான காட்சிகளுக்கும் பேர்போன இத்தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று பார்க்கலாம்.

கடந்த சீசனில் எம்எல்ஏ உடனான பிரச்சினையால் டிரான்ஸ்பர் செய்யப்பட்ட கிராம பஞ்சாயத்து செயலாளர் அபிஷேக் திரிபாதி (ஜிதேந்திர குமார்), ஃபுளேரா கிராமத்தின் நினைவுகளை விட்டு இன்னும் முழுமையாக மீளாமல் இருக்கிறார். கிராமத்தினரால் ரதான் ஜி என்று அழைக்கப்படும் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் (ரகுபீர் யாதவ்), பஞ்சாயத்து அலுவக உதவியாளர் விகாஸ் (சந்தன் ராய்) உள்ளிட்டோர் மீண்டும் அபிஷேக்கை அதே பொறுப்புக்கு கொண்டு வர விரும்புகின்றனர்.

இதனிடையே பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே வீடு இருக்கும் ஒருவருக்கு வீடு வழங்க முயற்சித்த விவகாரத்தில் கிராமத்தினருக்கும், எம்எல்ஏ சந்திர கிஷோருக்கும் (பங்கஜ் ஜா) இடையே மோதல் வெடிக்கிறது. இந்த சண்டை என்னவிதமான விளைவுகளை ஏற்படுத்தியது, அதிலிருந்து கிராமத்தினர் மீண்டார்களா என்பதே இந்த சீசனின் கதை.

கிராமத்து வாடையைக் கூட நுகராத நகர சூழலில் வளர்ந்த பட்டதாரி இளைஞன் ஒருவன் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத ஒரு குக்கிராமத்தின் சூழலுக்கு மெல்ல எப்படி தன்னை தகவமைத்துக் கொண்டு, அங்குள்ள மனிதர்களோடு இணக்கமாகிறான் என்பதே ‘பஞ்சாயத்’ தொடரின் கரு. இதன் அடிப்படையிலேயே முதல் இரண்டு சீசன்களும் நகைச்சுவைக்கும், உணர்வுபூர்வமான காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டிருந்தன.

ஆனால், இந்த சீசனில் நகைச்சுவையை சற்றே குறைத்து, ஆக்‌ஷனை அதிகப்படுத்தியிருக்கின்றனர். கூடவே எமோஷனல் அம்சங்களுக்கும் குறைவில்லை. அந்த வகையில் கடந்த சீசன்களில் இருந்த அதே சுவாரஸ்யத்துக்கு சற்றும் குறைவில்லாத அனுபவத்தை தருகிறது சீசன் 3.

புதிதாக வரும் கிராம பஞ்சாயத்து செயலாளரை கிராமத்தினர் பாடாய் படுத்தும் காட்சிகளுடன் தொடங்கும் தொடர், இறுதிவரை எந்தவித சலிப்பும் இன்றி ஒரு சிறு புன்னகையுடனே கடைசி வரை நம்மை பயணிக்க வைக்கிறது. இடையிடையே நம்மை வெடிச் சிரிப்பு சிரிக்க வைத்து, கண்கலங்க வைத்து, பல இடங்களில் நெகிழவும் வைக்கிறது.

‘பஞ்சாயத்’ தொடரின் பலமே அதன் நடிகர்கள் தான். ஹீரோவாக வரும் ஜிதேந்திர குமார், நீனா குப்தாவை தவிர மற்ற அனைவரும் பெரியளவில் அறிமுகமில்லாத முகங்கள்தான். ஆனால் எந்த இடத்திலும் அப்படி தோன்றாத வகையில் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் கூட தேர்ந்த நடிப்பை வழங்கியிருப்பதே இந்த தொடர் மூன்று சீசன்களாக வெற்றி பெறுவதற்கு காரணம். குறிப்பாக இந்த சீசனில் ஒரு சில எபிசோட்கள் மட்டுமே வரும் அந்த பாட்டியின் நடிப்பு அபாரம்.

ஓர் அசலான வட இந்திய கிராமத்தையும், அங்குள்ள மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகளையும் எந்தவித இடைச்செருகல்களும் இன்றி மிக இயல்பாக காட்டிய ஒரு சில படைப்புகளில் ‘பஞ்சாயத்’ முக்கியமானது. முந்தைய சீசன்களை காட்டிலும் இதில் சற்றே மிகையான காட்சிகள் இருந்தாலும், அதன் இயல்புத்தன்மையில் இருந்து சற்றும் மாறாமல் இருப்பது சிறப்பு.

இறுதி எபிசோட்களில் வரும் ஆக்‌ஷன் காட்சிகள் இந்த தொடருக்கு சற்றே அந்நியமானதாக இருந்தாலும், அதை முடிந்த அளவு இயல்பாகவும், நம்பகத்தன்மையுடனும் காட்சிப்படுத்தியிருக்கின்றனர். கடைசி சீசனில் ’பஞ்சாயத்’ தொடர் ‘மிர்சாபூர்’ ஆகிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. நல்லவேளையாக அப்படியான வன்முறைக் காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை. அடுத்த சீசனுக்கான கேள்விக்குறியுடன் தொடரை முடித்திருப்பது இன்னும் ஆர்வத்தை கூட்டுகிறது.

கோடை விடுமுறையில் மனதுக்கு இதமான ஒரு நல்ல தொடரை ‘பிங்கே வாட்ச்’ செய்ய விரும்புவர்கள் அவசியம் பார்க்கலாம். முந்தைய சீசன்களை பார்க்காதவர்களும் இணையத்தில் இத்தொடர் மற்றும் அதன் கதாபாத்திரங்கள் குறித்த அறிமுகத்தை மட்டும் தெரிந்து கொண்டு இந்த சீசனை பார்த்தாலும் நல்ல அனுபவம் கிட்டும். அமேசான் ப்ரைமில் சப்டைட்டிலுடன் காணக்கிடைக்கிறது. தமிழ் டப்பிங் இல்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x