Last Updated : 11 Mar, 2024 05:15 PM

 

Published : 11 Mar 2024 05:15 PM
Last Updated : 11 Mar 2024 05:15 PM

Anweshippin Kandethum: டோவினோவின் திருப்பம் நிறைந்த த்ரில்லர் | ஓடிடி திரை அலசல்

வெவ்வேறு சூழலில் நடக்கும் இரண்டு கொலைகளும், அந்த வழக்கைத் தீர்க்க போராடும் காவல் துறை அதிகாரியின் போராட்டமுமே ‘Anweshippin Kandethum’ மலையாளப் படத்தின் ஒன்லைன். டோவினோ தாமஸ் நடித்துள்ள இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

கேரளாவின் கோட்டயம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்படுகிறார் ஆனந்த் நாராயணன் (டோவினோ தாமஸ்). புதிதாக பணியில் சேர்ந்த காவலருக்கே உண்டான கனவுகளுடன் வலம் வருகிறார். இப்படியான சூழலில் தன்னுடைய மகளைக் காணவில்லை என தந்தை ஒருவர் புகார் அளிக்க, அது தொடர்பான விசாரணையில் களமிறங்குகிறார் ஆனந்த். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் கொல்லப்பட்டது தெரிய வருகிறது. மேலும், இந்த வழக்கில் உயர் அதிகாரிகளின் தொடர்புகள் இருப்பதால் பொய்யான குற்றவாளியை வைத்து வழக்கை முடிக்கத் திட்டமிடுகிறது காவல் துறை.

இருப்பினும் விடாபிடியான முயற்சியால் உண்மைக் குற்றவாளிகளை கண்டறியும் ஆனந்த், தொடர்ந்து நடக்கும் எதிர்பாராத சம்பவத்தால் தன் குழுவுடன் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். அவர் மீதான களங்கத்தை துடைக்கவும், நன்மதிப்பை பெறவும் வேறொரு தீர்க்கப்படாத வழக்கு மூலமாக குற்றவாளிகளைக் கண்டறியும் வாய்ப்பு கிடைக்கிறது. இறுதியில் தனக்கான வாய்ப்பை பயன்படுத்தி குற்றவாளியைக் கண்டறிந்து நன்மதிப்பை பெற்றாரா என்பது படத்தின் திரைக்கதை.

கதை கோராத காதல், வலிந்து திணிக்கப்படும் பாடல்கள், சம்பிரதாயத்துக்காக ஒரு நாயகி, என்ற எந்த வித மிகைப்பூச்சும் இல்லாமல், கதையின் விரல் பிடித்து படத்தை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் டார்வின் குரியகோஸ்.

இளம் பெண்ணின் கொலை, அதைச்சுற்றிய முடிச்சுகள், தொக்கி நிற்கும் கேள்விகள் ஆகியவற்றை இணைத்து, யார் குற்றவாளி என்பதை அறியும் ஆர்வத்தை மிகவும் சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தியிருப்பது பலம். முதல் ஒரு மணி நேரத்திலேயே படம் முடிந்துவிட்டதாக நினைக்கும்போது, அடுத்த ஒரு மணி நேரம் என்னவாக இருக்கும் என்ற ஆவல் படத்தை ‘ஸ்கிப்’ செய்ய விடாமல் பார்க்க தூண்டுகிறது.

சஸ்பென்ஸுக்கான காரணம், க்ளைமாக்ஸ் திருப்பம், கொலை வழக்குகளை அணுகிய விதம், சாதிய ஆணவக் கொலையை நுழைத்தது, இரண்டு வழக்கிலும் தண்டனை பெறாத குற்றவாளிகள், இறுதிவரை அங்கீகாரத்துக்கு போராடும் காவலர் போன்றவை ஐடியாவாக ஈர்ப்பது மட்டுமல்லாமல், வேகத்தை கூட்டுகின்றன.

ஆனாலும், ஆணவக் கொலையைத் துப்பறியும் வழக்கில் ஆழமில்லாதது ஏமாற்றம். கேரளாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் பிரதிபலிப்பை உணர்த்துவது கவனிக்க வைக்கிறது. சிலருக்கு படம் மெதுவாக நகர்வதாக தோன்றலாம். ஆனால், தேவையான இடங்களில் விறுவிறுப்புகளை கூட்டி, கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நகர்கிறது படம்.

காவல் துறையின் கம்பீரத்தை வரித்துக்கொண்டு இறுக்கமான முகத்துடன் அங்கீகாரத்துக்காக போராடும் காவலரான டோவினோ தாமஸ் கதாபாத்திரத்துடன் ஒன்றிப்போவதுடன், மிகையுணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் ஸ்கோர் செய்கிறார். தவிர, சித்திக், பாபுராஜ், இந்திரன்ஸ், ஷம்மி திலகன், கோட்டயம் நஸீர் உள்ளிட்டோர் தேவையான பங்களிப்பை செலுத்துகின்றனர்.

கதைக்கு தேவைப்படாத பாடல்களை தவிர்த்து, பின்னணி இசையில் ஓகே சொல்ல வைக்கிறார் சந்தோஷ் நாராயணன். கோட்டயம் மற்றும் அதைச் சுற்றிய நிலத்தின் யதார்த்தமான சாயலை பதிவு செய்கிறது கவுதம் சங்கரின் கேமரா. சைஜு ஸ்ரீதரனின் கட்ஸ் கச்சிதம். ஆங்காங்கே சில குறைகள் இருந்தாலும், அயற்சி கொடுக்காமல் நகரும் திரைக்கதையும், திருப்பமும் படத்தை பரிந்துரைக்க ஏற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x