Published : 18 Jan 2024 04:52 PM
Last Updated : 18 Jan 2024 04:52 PM

ஓடிடி திரை அலசல் | Echo: ஆக்‌ஷன், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத ‘சூப்பர் ஷீரோ’ மினி தொடர்!

’அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ படத்துடன் பல்வேறு முக்கிய சூப்பர் ஹீரோக்களை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதால், அடுத்தகட்டமாக புதிய ஹீரோக்களை அறிமுகம் செய்து வருகிறது மார்வெல். அவற்றில் சில வரவேற்பை பெற்றும், சில எடுபடாமலும் போவது நடந்து வருகிறது. அதேபோல மார்வெலின் வலிமையான சூப்பர் ஷீரோவாக இருந்த ‘ப்ளாக் விடோ’ கதாபாத்திரத்துக்குப் பிறகு அந்த இடத்துக்கு கேப்டன் மார்வெல், ‘வாண்டா’ உள்ளிட்ட பெண் கதாபாத்திரங்களை கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ள சூப்பர் ஷீரோ ‘எகோ’ (Echo) / மாயா லோபஸ். இந்தக் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, பெரிய விளம்பரங்கள் எதுவுமின்றி வெளியாகியுள்ள இந்த புதிய மினி தொடர் ஈர்த்ததா என்பதை பார்ப்போம்.

அமெரிக்க பூர்வகுடிகளின் வம்சாவளியைச் சேர்ந்த மாயா லோபஸ் (Alaqua Cox) பிறப்பிலேயே காது கேளாதாவர். அவரால் வாய் பேசவும் இயலாது. விபத்தில் தாய் உயிரிழக்கவே, தந்தையின் அரவணைப்பில் வளர்கிறார். ஒருகட்டத்தில் மாயாவின் தந்தை மர்ம நபர்களால் கொல்லப்பட்ட பிறகு, நியூயார்க் நகரிலன் மிகப்பெரிய கோடீஸ்வரரான ‘கிங்பின்’ எனப்படும் வில்சன் ஃபிஸ்க், அவரை தத்தெடுத்து பராமரிக்கிறார். தன்னுடைய சமூக விரோத காரியங்களின் பயன்படுத்த மாயாவை ஒரு ஃபைட்டராக வளர்க்கிறார் கிங்பின். அவரது குழுவில் மிக முக்கிய ஆட்களில் ஒருவராக உருவெடுக்கும் மாயா, பல கொலைகளும் செய்து வருகிறார். ஒருகட்டத்தில், கிங்பின்னுக்கு எதிரியாக மாறும் மாயாவின் தலைக்கு விலை வைக்கப்படுகிறது. அங்கிருந்து தப்பித்து ஓடும் மாயா என்ன ஆனார்? கிங்பின் உடனான அவரது மோதலுக்கு என்ன காரணம்? - இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்கிறது ‘எகோ’.

மார்வெலிடமிருந்து இந்த சீரிஸ் தொடர்பான அறிவிப்பு வந்தபோது, சமூக வலைதளங்களில் அது குறித்து பெரிய எதிர்பார்ப்போ, பேச்சுகளோ எழவில்லை. காரணம், மார்வெல் காமிக்ஸில் மிகவும் பிரபலமில்லாத கதாபாத்திரங்களில் ஒன்று இந்த ‘எகோ’. ஏற்கெனவே வெளியான ‘ஹாக்ஐ’ தொடரில் இந்த எகோ கதாபாத்திரம் இடம்பெற்றிருந்தாலும், அத்தொடர் பெரிய வரவேற்பை பெறாததால் அந்த கேரக்டரும் பெரியளவில் பேசப்படவில்லை. ஒரு தனி தொடராக எடுக்கும் அளவுக்கு பிரபலமாகாத, வில்லத்தனம் கொண்ட ஒரு கதாபாத்திரத்தை எடுத்துக் கொண்டு, குறைகள் இல்லாத கச்சிதமான ஒரு ஆக்‌ஷன் த்ரில்லரை உருவாக்கியுள்ளது மார்வெல்.

‘ஹாக்ஐ’ வெப் தொடரின் முடிவுக்குப் பிறகு ஐந்து மாதங்களுக்குப் பிறகு தொடங்குவதாக காட்டப்படும் முதல் எபிசோடில் மாயா யார், அவரது பின்புலம் என்ன என்பதை சொல்வதன் மூலம் ஆன்டி ஹீரோவாக இருந்த மாயாவை மெல்ல பார்வையாளர்களின் மனதில் ஒரு ஹீரோவாக பதிய வைத்துள்ளனர். வெறும் ஐந்து எபிசோட்களை மட்டுமே இந்த மினி தொடரின் ஒவ்வொரு எபிசோடும் மாயாவின் வலி, பிரிவு, ஏமாற்றம், குடும்பத்துடனான அவரது உணர்வுப் போராட்டம் ஆகியவற்றையே பேசுகிறது. வரும் மார்வெல் படைப்புகளில் ‘எகோ’ ஒரு தவிர்க்க முடியாத கேரக்டராக வலம் வரப்போவதற்கான அடித்தளம் மிகச் சிறப்பாக இத்தொடரில் அமைக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த தொடரையும் ஒற்றை தாங்குவதே மாயா லோபஸ்/ எகோ கதாபாத்திரத்தில் நடித்துள்ள Alaqua Cox தான். காது கேளாத, வாய் பேச இயலாத கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதே நேரம், ஒரு சூப்பர் ஷீரோவாக ஆக்‌ஷன் காட்சிகளிலும் மாஸ் காட்டுகிறார். அவரைத் தாண்டி தொடரில் வரும் சின்ன சின்ன கதாபாத்திரங்களும் ஈர்க்கும் அளவுக்கு எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக மாயாவின் பாட்டியாக வரும் சூலாவுக்கும் (டான்டூ கார்டினல்) அவரது முன்னாள் கணவராக வருபவருக்கும் இடையிலான காட்சிகள் கவர்கின்றன.

அமெரிக்க பூர்வகுடிகளாக இருக்கும் சோக்டா நேஷன் (Choctaw Nation) இனத்தில் இருக்கும் பெண்களுக்கு தலைமுறை தலைமுறையாக கிடைக்கும் சக்தி குறித்து காட்டப்பட்டுள்ள விதமும், ஒவ்வொரு எபிசோடிலும் ஒவ்வொரு தலைமுறையைச் சேர்ந்த பெண் குறித்தும் அவரது பின்னணி குறித்தும் சிறிய முன்கதையை சொல்லிச் சென்ற விதமும் சிறப்பு.

மார்வெல் ரசிகர்கள் எதிர்பார்க்கும் சில முக்கிய சூப்பர் ஹீரோ கேமியோக்களும் உண்டு. ஆனால் அவை கதையில் பெரிய திருப்பத்தையோ, தாக்கத்தையோ ஏற்படுத்தவில்லை. தொடரின் மையக் கதாபாத்திரம் ஒரு ‘ஃபைட்டர்’ என்பதால் ஆக்‌ஷன் காட்சிகளில் கூடுதல் உழைப்பு தெரிகிறது. குறிப்பாக மூன்றாவது எபிசோடில் ஒரு பவுலிங் மையத்தில் நடக்கும் சண்டை காட்சியில் ஆக்‌ஷன் கோரியோகிராபி வியக்க வைக்கிறது.

மல்டிவெர்ஸ் என்ற களத்தை மார்வெல் கையில் எடுத்தபிறகு, ரசிகர்களின் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமானது. அதை பூர்த்தி செய்யாமல் போனதே இடையில் வந்த சில தொடர்கள், படங்கள் வரவேற்பை பெறாமல் போனதற்கு காரணமாக சொல்லலாம். ஆனால் கடைசியாக வெளியான ‘லோகி’, தற்போது வெளியாகியுள்ள ‘எகோ’ மூலம் புதிய தலைமுறை பார்வையாளர்களின் ‘பல்ஸ்’-ஐ மார்வெல் தெரிந்துகொண்டதாகவே தோன்றுகிறது. இதே வழியில் சென்றால், 2008ல் வெளியான ‘அயர்ன் மேன்’ தொடங்கி ‘எண்ட்கேம்’ வரையிலான காலகட்டத்தை போல, இன்னொரு ரவுண்டு வர வாய்ப்புள்ளது.

’எகோ’ தொடரை பார்க்க பழைய மார்வெல் படங்கள், தொடர்கள் எதையும் பார்த்திருக்க வேண்டியதில்லை. ஐந்து எபிசோட்களில் ஒரு சிறப்பான, விறுவிறுப்பான அதிரடி ஆக்‌ஷன் மினி தொடரை பார்க்க விரும்புபவர்கள் தாராளமாக பார்க்கலாம். டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் இத்தொடர் தமிழிலும் காணக்கிடைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x