Published : 05 Sep 2023 07:03 PM
Last Updated : 05 Sep 2023 07:03 PM

ஓடிடி திரை அலசல் | Dayaa - திகிலும் திருப்பமும் நிறைந்த காத்திரமான சீரிஸ்!

எந்த வம்பு தும்புக்கும் செல்லாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என வாழ்ந்து வரும் ஃபீரிஸர் வேன் டிரைவர் தயாவின் வாழ்க்கைப் பயணத்தில், திடீரென ஏற்படும் திருப்பங்களும், திகைப்புகளும்தான் இந்த வெப் சீரிஸின் ஒன்லைன்.

வஸந்த் குமார் ஜுரு, ராகேந்து மவுலி ஆகியோருடன் இணைந்து எழுதி இயக்குநர் பவன் சதிநேனி இயக்கியிருக்கும் தெலுங்கு க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸ்தான் தயா. கானல் நீராகிவிட்ட நீதிக்கானப் போராட்டத்தில், மரங்களை சலித்து மண்ணில் விழுந்து மட்கிப்போகும் சறுகுகளுக்கு இணையானது எளிய மக்களின் வாழ்க்கை. அடைகாத்துக் கொள்ள ஒரு வீடு, பசியாற்றிக் கொள்ள ஒரு வேலை, இளைப்பாறிக் கொள்ள ஒரு துணை என்ற அடிப்படை அத்தியாவசியங்கள்கூட எளிதில் கிடைத்துவிடுவதில்லை. தினசரி கூலியுடன், ஒரு நூறோ ஐம்பதோ சேர்த்து கிடைத்துவிடாதா? என்ற ஏக்கமும், பரிதவிப்பும் கொண்ட இம்மனிதர்களின் வாழ்க்கை சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தடம் மாறுவதை உரக்கப் பேசுகிறது இந்த வெப் சீரிஸ்.

காட்டில் வாழும் உயிரினங்கள் இரையை அடித்து தின்று , வலிமையை நிரூபித்து உயிர் வாழும். அதுபோலத்தான், இச்சமூகத்தில் எளிய மனிதர்களுக்கான அன்றாட வாழ்க்கையும். தீராத பிரச்சினைகளுடன் போராடி வாழவும், வீழவும் செய்யவும் யதார்த்த வாழ்வியலைத்தான் லாஜிக் மீறல்களுடன் பேசியிருக்கிறது. ஒரு சாதாரண வாழ்க்கையைக்கூட வாழ முடியாமல் போகும்போது உருவாகும் பெருங்கோபம் ஒருநாள் எரிமலைக்கு நிகராக வெடித்துச் சிதறும், அத்தகைய மனிதர்களின் ரத்தத்தையும் சதையையும் உறிஞ்சுக் குடிக்கும் அரசியல் அதிகாரத்தின் கதையை இயக்குநர் கையாண்டிருக்கும் விதம் ரசிக்க வைத்திருக்கிறது.

ஆந்திர மாநிலத்தில், மீன்களை வெவ்வேறு இடங்களுக்கு தனது ஃபீரிஸர் வேனில் ஏற்றிச் செல்லும் தயா(ஜே.டி.சக்ரவர்த்தி), கூடுதல் பணம் கிடைக்கும் என்பதால், ஒருநாள் சவாரி ஒன்றை ஒப்புக் கொள்கிறார். அந்த சமயத்தில் அவரது செல்போனுக்கு வரும் அழைப்பில், அவரது வண்டியில் ஒரு சடலம் இருப்பதாகவும், அதை தாங்கள் சொல்லும் இடத்துக்கு பத்திரமாக எடுத்து வரவும் கட்டளையிடப்படுகிறது. அதேநேரத்தில், தயாவின் மனைவி (ஈஷா ரெப்பா) நிறைமாத கா்ப்பிணியாக வீட்டில் இருந்தபடி, தயாவின் வருகைக்காக காத்திருப்பதால் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.

தயாவின் வேனில் சடலமாக இருக்கும் பத்திரிகையாளர் கவிதா (ரம்யா நம்பீசன்) யார்? அவரது சடலம் தயாவின் வண்டிக்குள் எப்படி வந்தது? இறந்தவரின் கொலைக்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? வண்டிக்குள் கிடந்த சடலம் தயாவின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் திடுக்கிடும் திருப்பங்கள் என்ன? என்பதுதான் இந்த வெப் சீரிஸின் திரைக்கதை. இந்த வெப் சீரிஸில் வரும் கதாப்பாத்திரங்களை எழுதியிருக்கும் விதம் நேர்த்தியாக இருக்கிறது. அதேநேரம், முக்கிய கதாப்பாத்திரங்களில் வருபவர்களும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதற்கு முன்பும் ஏற்கெனவே பலமுறை, அந்த சாதுவான முகத்துடன், ரத்தம் சொட்டும் ஆக்சன் திரைப்படங்களில் பார்த்திருந்தாலும், ஜே.டி.சக்ரவர்த்தி இந்த வெப் சீரிஸிலும் பளிச்சிடுகிறார். இந்த முதல் சீசன் முழுவதுமே, அவரைச் சுற்றிதான் கதை நகர்கிறது. சண்டைக் காட்சிகளில் தெலுங்குப்பட வாசம் தூக்கலாக இருக்கிறது. வெள்ளித்திரைக்குப் பின்னர், வெப் சீரிஸில் அறிமுகமாகும் சக்ரவர்த்தி கொஞ்சம் எடையைக் குறைத்திருக்கலாம். பின்னால் திரும்பிச் செல்லும் சில காட்சிகளில் அவரது உடற்பருமனால் சிரமப்படுவதைக் காட்டுகிறது.

ரம்யா நம்பீசன் எப்போதும்போலவே ஒரு ஸாலிட் பெர்ஃபார்மன்ஸ். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேட்டியெடுக்கும் காட்சி, ஊடகத் தலைமையிடம் சமரசம் செய்து கொள்ள மறுக்கும் காட்சி, பப்லு பிரித்திவிராஜின் ரியாக்‌ஷன் பேட்டியெடுக்க செல்லும் காட்சியிலும் தனது காத்திரமான நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல், சக்ரவர்த்தியின் தம்பிகளாக வருபவர்களும், மற்றவர்களும் தங்களது பங்களிப்பை நிறைவாக செய்திருக்கின்றனர். ஷ்ரவன் பரத்வாஜின் பின்னணி இசையும், விவேக் கலேப்புவின் ஒளிப்பதிவும் வெப் சீரிஸின் வேகத்தைக் கூட்டியிருக்கிறது.

அக்கட பூமியின் கடலோரத்து காட்சிகளையும், கிராமங்களையும் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் ரசிக்கும்படியாக இருக்கிறது. சக்ரவர்த்தியின் ஹீரோயிஸ சண்டைக் காட்சியில், கழுகு ஒன்று இரையைப் பிடிப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது கதைக்கு அத்தனைப் பொருத்தமாக அமைந்துள்ளது. அதேபோல், சக்ரவர்த்திக்கான ஆக்‌ஷன் காட்சிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் இசைக் கோர்ப்பு அருமை. நான் லீனியர் முறையில் ஆரம்பிக்கும் கதையை பார்வையாளர்கள் ஊகிக்கத் தொடங்கியவுடன் திரைக்கதை வேகம் சற்றும் குறைந்து நத்தை வேகத்தில் நகர ஆரம்பிக்கிறது. க்ரைம் த்ரில்லர் என்றாலே வயது வந்தோருக்கான காட்சிகள் இருக்க வேண்டும் என்பதற்காக திணிக்கப்பட்டது போல் வரும் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம்.

லாஜிக் மீறல்களை தவிர்த்துவிட்டு, சுமார் அரை மணி நேரம் ஓடும் எட்டு எபிசோடுகளைக் கொண்ட இந்த வெப் சீரிஸில் வரும் ட்விஸ்ட் அண்ட் டர்னஸும், ஹிண்டுகளும் இரண்டாவது சீசனுக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, அலவேலு கதாப்பாத்திரம் (ஈஷா ரெப்பா) மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கவேச் செய்யும். டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்த வெப் சீரிஸ் காணக் கிடைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x