Published : 17 Aug 2023 04:42 PM
Last Updated : 17 Aug 2023 04:42 PM
கறுப்புத் திரை. அதற்குப் பின்னால் சமூகத்தின் வெவ்வேறு வகையறா மனிதர்களின் குரல்கள் ஒவ்வொன்றாக ஒலிக்கின்றன. அவர்களுக்கென தனி முகங்கள் கிடையாது. பிரத்யேக பெயர்கள் கிடையாது. இங்கே நடக்கும் அன்றாட திருமணங்களில் பங்கேற்கும் அதே நான்கு பேர்தான் அவர்கள்!. ‘ரமேஷன் இன்னும் நல்ல பொண்ணா பாத்துருக்கலாம்’, ‘நகை ரொம்ப கம்மி’, ‘சாப்பாட்டுல உப்பில்ல’, ‘மண்டபம் சரியில்ல’, ‘பொண்ணு என்ன இப்படி இருக்கு’... இப்படியான பேச்சின் மூலம் வன்மம் கக்கும் சோகால்டு சொசைட்டியின் வழியே படத்தின் தொடக்கத்திலேயே அழுத்தமான கதைக்கான முன்னோட்டத்தைக் கொண்டு படத்தை அழகாக தொடங்குகிறார் இயக்குநர் சென்னா ஹெக்டே.
மேற்கண்ட திருமணம் ரமேஷனுக்கும் (குஞ்சாக்கோ போபன்), ஸ்மிருதிக்கும் (வின்சி அலோஷியஸ்) நடக்கிறது. ரமேஷனை பொறுத்தவரை கல்லூரி விரிவுரையாளர். கூடுதலாக கவிஞர். திருமணம் முடிந்த முதல் நாள் இரவில் மனைவி ஸ்மிருதி தனது காதலனுடன் சென்றுவிடுகிறார். அவர் செல்லும் காரின் மாடல் பெயர் ‘பத்மினி’. 70-கள் தொடங்கி 90-கள் வரை பிரபலமாக இருந்த கார். மனைவி பிரிந்து போன அதிர்ச்சியிலிருக்கும் ரமேஷனை ஊர் மக்கள் கலாய்த்து கிண்டல் செய்கின்றனர். மீண்டுமொரு பெண் பார்க்கும் படலத்தை அவர் தொடங்க, அதுவும் கைகூடாமல் தவிக்கிறார்.
இந்தச் சூழலில் கல்லூரியில் புதிய விரைவுரையாளராக வந்து சேரும் பத்மினிக்கும் (மடோனா செபாஸ்டின்) ரமேஷனுக்கும் இடையே காதல் மலர்கிறது. ஆனால், பத்மினியை திருமணம் செய்துகொள்ள, தனது ஒருநாள் மனைவியிடமிருந்து ரமேஷன் சட்டரீதியாக விவாகரத்து பெற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்தப் பிரச்சினை எப்படி அணுகப்படுகிறது, பத்மினியை அவர் திருமணம் செய்தாரா, இல்லையா என்பது தான் படத்தின் திரைக்கதை. படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
திருமணத்தைச் சுற்றி நிகழும் சம்பவங்களையும், கடைசி நேரத்தில் அது கைகூடாமல் போகும்போது ஏற்படும் தனிநபரின் உளவியல் சிக்கல்களையும் ஒரே நேர்கோட்டில் பார்வையாளர்கள் எளிதில் கனெக்ட் செய்துகொள்ளும் வகையில் எழுதியிருக்கிறார் தீபு பிரதீப். சென்னா ஹெக்டேவின் இயக்கம் அந்த எழுத்துக்கு உறுதுணையாக நிற்கிறது. மற்றவர்களின் வாழ்க்கையில் அதீத அக்கறைகொள்ளும் பொதுச் சமூகம், திருமண முறிவை மனதளவில் எதிர்கொள்ள போராடும் குஞ்சாக்கோ போபனை கொத்தி தின்கிறது; எள்ளி நகையாடுகிறது.
மனைவி ‘பத்மினி’ காரில் காதலனுடன் சென்றதால் ‘பத்மினி’ என நகைப்புக்குள்ளாகும் குஞ்சாக்கோ அந்த உணர்ச்சிகளையும், சொல்லமுடியாத சோகத்தையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். நம் கூட்டத்திலிருக்கும் ஒருவரைப்போல எளிதாக அவரை கனெக்ட் செய்துகொள்ள முடிகிறது. சீரியஸான இந்தப் பிரச்சினையை ஜாலியாகவே கடத்த முயன்றியிருக்கிறார் இயக்குநர். அதனால் பெரிய அளவில் போர் அடிக்காத திரைக்கதை காட்சிகளை கடக்க துணைபுரிகிறது. மைத்துனனாக வரும் ஆனந்த் மன்மதன் கதாபாத்திரம் காமெடிக்கு உதவுகிறது.
குஞ்சாக்கோ போபனைப்போல அபர்ணா பாலமுரளி. 30+ வயதைக் கடந்தும் திருமணமாகாத முதிர் கன்னி. இருப்பினும் வழக்கறிஞராக தன் சொந்த உழைப்பில் வாழும் பெண். இப்படியான ஒரு கதாபாத்திரத்துக்கு அப்படியே நேரெதிரான ஆணாதிக்க மனநிலை கொண்ட சஜின் செருக்காயிலை காதலனாக்கியது சுவாரஸ்யத்தை கூட்டுகிறது. இந்த இரண்டு குணாதிசய முரண் கதாபாத்திர ஜோடிக்கான உரையாடல்கள் கவனம் பெறுகிறது. ‘அக்கறை’ என்ற பெயரில் பெண்களை கட்டுப்படுத்தும் சஜின் கதாபாத்திரம் ஜாலியாக எழுத்தப்பட்ட விதம் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக விளம்பரக் காட்சி ஒன்று இடைவேளையிலும், க்ளைமாக்ஸிலும் பொருத்திய விதம் புது அனுபவம்.
மடோனா செபாஸ்டியன் கல்லூரி விரைவுரையாளராக ஆரம்பத்தில் ஈர்க்கிறார். அவருக்கும் குஞ்சாக்கோவுக்குமிடையிலான காதலின் தொடக்க புள்ளியும் பாடலும் பொறுமையாக நகரும் திரைக்கதைக்கு அழகூட்டுக்கின்றன. இருப்பினும் இன்னும் கூட மடோனா கதாபாத்திரத்துக்கு வெயிட் கூட்டியிருக்கலாம். ஒரு கட்டத்தில் குஞ்சாகோபோபன் - அபர்ணா இருவரும் சேர்ந்து காட்சிகளில் ஸ்கோர் செய்கின்றனர். குஞ்சாக்கோவின் மனைவியாக வின்சி அலோஷியஸ் சிறிது நேரமே வந்து சென்றாலும் திரையில் அட்டகாசம் செய்து கவர்கிறார்.
பின்னணி இசை மூலம் கதைக்கு தேவையான பங்களிப்பு சிறப்பாகவே செய்திருக்கிறார் ஜேக்ஸ் பிஜாய். பாலக்காட்டின் கிராமப் பகுதிகளில் நிகழும் கதையை வெப்பத்தையும், குளிரையும் சரிவிகித்தத்தில் கலந்து திரைப் பரிமாற்றம் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீராஜ் ரவீசந்திரன். படம் இறுதிக்கட்டத்தை நெருங்கும்போது வரும் வைடு ஆங்கிள் ஷாட் ரசிக்க வைக்கிறது.
மொத்தமாக விதிக்கப்பட்டு விலகிச் செல்லும் திருமணங்களையும், பிடித்தவர்களை தேர்வு செய்வதற்கான தேவையையும் ஜாலியாக பேசுகிறது ‘பத்மினி’. மேலும் விவாகாரத்தை ‘நார்மலைஸ்’ செய்ய சொல்லும் இப்படைப்பு, வாய்க்கு வந்ததை பேசும் சமூகத்தையும் சேர்த்து எள்ளி நகையாடுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment