Published : 06 Aug 2023 04:20 PM
Last Updated : 06 Aug 2023 04:20 PM
ஏறக்குறைய நான்கு தசாப்தங்களாக தமிழக - கர்நாடக அரசாங்கங்களுக்கு பெரும் சவாலாக இருந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் குறித்து நான்கு அத்தியாயங்களாக உருவாகியுள்ள ஆவணத் தொடர் ‘தி ஹன்ட் ஃபார் வீரப்பன்’.
90கள் தொடங்கி 2000களின் மத்தியப் பகுதி வரை வீரப்பனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தந்தங்களுக்காக ஆயிரக்கணக்கான யானைகளைக் கொன்று, பின்னர் சந்தன மரங்களை கடத்தத் தொடங்கி, தன் வழியில் குறுக்கே வந்தவர்களை தயவுதாட்சண்யமின்றி சுட்டுக் கொன்ற வீரப்பனை பிடிக்க தமிழக - கர்நாடக அரசுகள் செலவிட்ட தொகை சுமார் ரூ.220 கோடிக்கு மேல். அன்றைய காலகட்டத்தில் ரூ.220 கோடி என்பது மிகப்பெரிய தொகை. 36 ஆண்டுகள் நீடித்த இந்த தேடுதல் வேட்டை காரணமாக எல்லையோர கிராம மக்கள் பட்ட இன்னல்கள் சொல்லில் அடங்காதவை. மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வீரப்பனின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் ஒரு த்ரில்லர் வெப் தொடருக்கு உண்டான விறுவிறுப்புடனும், சுவாரஸ்யத்துடனும் கொடுத்துள்ளார் இயக்குநர் செல்வமணி செல்வராஜ்.
தன்னுடைய கணவர் வீரப்பன், நம்பியவர்களுக்குத் தன் உயிரைக் கொடுப்பார்; துரோகம் செய்பவர்களின் உயிரைப் பறிப்பார் என்று வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி பேசுவதோடு தொடங்குகிறது இந்த ஆவணத் தொடர். இத்தொடரின் பெரும்பாலான காட்சிகள் முத்துலட்சுமியின் பார்வையில்தான் நமக்கு சொல்லப்படுகின்றன. தனக்கு 15 வயது இருக்கும்போது 39 வயதான வீரப்பன் தன்னிடம் காதலைச் சொல்லி திருமணம் செய்து கொண்டதை நெகிழ்ச்சியுடன் விவரிக்கிறார். தன் கணவர் செய்த கொலைகள் யாவுமே எதிராளிகளின் செயல்களுக்கான எதிர்வினைகளே என்பதில் முத்துலட்சுமி உறுதியாக இருக்கிறார். முத்துலட்சுமி தவிர்த்து வீரப்பனின் குழுவில் இருந்தவர்கள், கிராமத்து மக்கள், வனத்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என பலரும் தங்கள் பார்வைகளை முன்வைக்கிறார்கள்.
தொடர் முழுவதும் இது ஒரு ஆவணத்தொடர் என்ற உணர்வே எழாத வண்ணம் சிறப்பான ஒளிப்பதிவு, டார்க் லைட்டிங், நெகிழ்வான இசை, ஒரு த்ர்ல்லர் படத்துக்கு உண்டான திருப்பங்களுடன் கூடிய கட்ஸ் என மேக்கிங் வியக்க வைக்கிறது. இதனால் திரையில் பேசும் மனிதர்களின் மனநிலையுடன் பார்வையாளர்களால் எளிதில் ஒன்ற முடிகிறது. ஆனால் இந்த மேற்பூச்சுகள் யாவும் வீரப்பனை பெரும்பாலும் ஒரு ஹீரோவாக சித்தரிக்க முயல்வதாக ஏற்படும் தோற்றத்தை தவிர்க்க இயலவில்லை. 2000-க்குப் பிறகு பிறந்தவர்களோ அல்லது வெளிநாட்டவர்களோ இந்த ஆவணத் தொடரை பார்க்க நேர்ந்தால் நிச்சயம் அவர்களுக்கு வீரப்பன் ஒரு ராபின் ஹூட் என்ற எண்ணம் எழக்கூடும்.
முதல் அத்தியாயத்தின் இறுதியில் வனத்துறை அதிகாரியும் எஸ்டிஎஃப் (Special Task Force) தலைமை அதிகாரியுமான ஸ்ரீனிவாசை சுட்டுக் கொன்று பின்னர் அவரது உடலை எரித்து, அப்போதும் கோபம் தணியாமல் அவரது தலையை வெட்டிச் சென்றதாக வீரப்பன் தன் குரலாலேயே சொல்லும் ஆடியோ கிளிப்பிங் பார்ப்பவர்களின் நெஞ்சை பதைபதைப்புக்கு உள்ளாக்குகிறது.
கர்நாடகாவைச் சேர்ந்த எஸ்டிஎஃப் அதிகாரி ஷங்கர் பிதரி தலைமையிலான குழு எல்லையோர மலைவாழ் கிராம மக்களிடம் செய்த அட்டூழியங்களையும் இந்த தொடர் பதிவு செய்கிறது. ’ஒர்க்ஷாப்’ என்ற பெயரில் ஒரு பாழடைந்த கட்டிடத்தில் வைத்து கிராம மக்களுக்கு கொடுத்த இன்னல்களை சக அதிகாரிகளே சொல்லும்போது உடல் நடுங்குகிறது. தன் நண்பர்களை வீரப்பன் கொன்றதற்கு பழிவாங்கும் விதமாக 13 பேரை தான் சுட்டுக் கொன்றதை ஒரு அதிகாரி பெருமிதத்துடன் சொல்கிறார். சந்தேக கேஸில் பிடித்து வரப்பட்ட கிராம மக்கள் 8 பேரை கொடூரமாக கொன்றதை இன்னொரு அதிகாரி கூறுகிறார்.
வழக்கறிஞர் பாலமுருகன் எழுதிய ’சோளகர் தொட்டி’ நாவல்தான் இந்த ஆவணத் தொடரை இயக்குவதற்கான உந்துசக்தி என்று பேட்டி ஒன்றில் செல்வமணி செல்வராஜ் கூறியிருந்தார். ஆனால் அந்த நாவலின் மையக்கருவான பழங்குடி மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அராஜகங்கள் இதில் ஆழமாக பேசப்படவே இல்லை.
மூன்றாவது அத்தியாயத்தில் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியது; அதன் பின் ஏற்பட்ட விளைவுகள் மிக ஆழமாக பேசப்பட்டுள்ளன. ராஜ்குமாரை விடுவிக்க தமிழ் மக்களை முன்னிறுத்தி 10 நிபந்தனைகளை வீரப்பன் முன்வைத்ததும், பின்னர் வீரப்பனின் நோக்கத்தில் பணமே பிரதானமாக இருந்ததையும் கொளத்தூர் மணி தன் பார்வையில் விவரிக்கிறார். தன் மனைவிக்கு வீரப்பன் அனுப்பிய ஆடியோ கேசட்டில் அவர் தன் மனைவி, குழந்தைகளோடு தன் ஒரு முறையாவது காரில் செல்ல வேண்டும் என்று ஆசையை வெளிப்படுத்துவதும் சராசரி மனிதனாக வீரப்பன் வாழ விரும்பியதை காட்டுகின்றன.
நான்காம் அத்தியாயமான ‘The Way Out’, வீரப்பனைக் கொல்ல கே.விஜயகுமாரின் தலைமையில் எஸ்டிஎஃப் அதிகாரிகள் போட்ட திட்டத்தையும், அதன் பின் நடந்த சம்பவங்களையும் பேசுகிறது. வீரப்பனை பிடிக்க விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பெயரை எஸ்டிஎஃப் கையில் எடுக்கிறது. அப்போதையை எஸ்டிஎஃப் -எஸ்பி ஆக செந்தாமரைக் கண்ணன், ‘முகிலன்’ என்ற பெயரில் வீரப்பனை இலங்கை அழைத்துச் செல்வதாக நம்பவைத்து பின்னர் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது வரை விரிவாக இந்த அத்தியாயம் பேசுகிறது. வேனின் வெளியே குண்டு துளைக்கப்பட்ட அடையாளங்கள் இருக்கும்போது, வீரப்பனின் தலையில் அருகில் இருந்து சுட்டது போன்ற காயம் இருப்பது எப்படி? உள்ளிட்ட வீரப்பனின் மரணத்தில் இருந்த மர்மங்களையும், கேள்விகளையும் இந்த தொடர் முன்வைக்கிறது. மேலும் இதற்கான பதிலை மக்களே முடிவு செய்து கொள்ளட்டும் என்பது போன்ற ஒரு விளக்கத்தை கொடுக்கிறார் செந்தாமரைக் கண்ணன்.
ஒட்டுமொத்தமாக நான்கு அத்தியாயங்களும், விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யத்துடனும் எழுதப்பட்டுள்ளது சிறப்பு. வெறுமனே பேட்டிகளை வைத்து காட்சிகளை அமைத்து கொட்டாவி விட வைக்காமல், ஒரு தரமான திரைப்படத்தைப் போல நல்ல இசை, ‘ரிச்’ ஆன ஒளிப்பதிவு, நெகிழ்வான காட்சியமைப்புகள் என காட்சியமைப்பில் ஸ்கோர் செய்கிறார் இயக்குநர். முதல் அத்தியாயம் தொடங்கி எங்குமே நிறுத்தமுடியாத அளவுக்கு சுவாரஸ்யமாக எடுக்கப்பட்டுள்ள ‘தி ஹன்ட் ஃபார் வீரப்பன்’ அவசியம் பார்க்க வேண்டிய ஒரு ஆவணத் தொடர். இது நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணக்கிடைக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT