Published : 21 Jun 2023 04:34 PM
Last Updated : 21 Jun 2023 04:34 PM

ஓடிடி திரை அலசல் | Pachuvum Athbutha Vilakkum - அடுத்த நொடி ஒளித்து வைத்துள்ள ஆச்சரியம் அறியும் அனுபவம்!

கேரளாவைச் சேர்ந்த பிரசாந்த் மும்பையில் தான் நடத்திவரும் ஆயுர்வேத பார்மஸியின் வாடகை கட்டிடத்தின் உரிமையாளராகும் வாய்ப்பு கிடைக்கிறது. அதற்காக, அந்தக் கட்டிட உரிமையாளருடைய தாயாரின் விருப்பத்தை நிறைவேற்றும் பணி ஒன்றை ஒப்புக்கொள்கிறார். அந்தப் பணி வெற்றிகரமாக முடிந்ததா, இல்லையா என்பதுதான் படத்தின் ஒன்லைன்.

இயக்குநர் அகில் சத்யன் எழுதி, இயக்கியிருக்கும் மலையாளத் திரைப்படம் 'பாச்சுவும் அத்புத விளக்கும்' (Pachuvum Athbutha Vilakkum). க்ரைம் த்ரில்லர், சஸ்பென்ஸ், ஹாரர் என பல ஜானர்களில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளிவந்தாலும் மென்மையான குடும்பக் கதைகளை மையமாக கொண்ட லைட் ஹார்ட்டடு ஃபேமிலி டிராமாவுக்கு பார்வையாளர்களிடம் எப்போதும் வரவேற்பு இருக்கவே செய்கிறது. அகில் சத்யனின் 'பாச்சுவும் அத்புத விளக்கும்' திரைப்படமும் அத்தகைய நகைச்சுவை கலந்த முழுநீள ஃபேமிலி டிராமாதான்.

உணவு, உறக்கம் ,வேலை என்ற மனித வாழ்கையின் பழகிப்போன கால அட்டவணையில் உற்சாகத்தைக் கொடுப்பவை பயணங்கள். ஒவ்வொரு பயணமும், ஏதாவது ஒரு புதிய அனுபவத்தை கற்பித்துக் கொண்டே இருப்பவை. அதனால்தான், பலருக்கும் பயணங்கள் அலாதியான விருப்பத்தையும், ஆச்சரியத்தையும் தருகின்றன. சிலருக்கு வேலை நிமித்தமாகவும் பயணங்கள் கட்டாயமாகியிருக்கும். அதுபோன்ற ஒரு பயணத்தை மையமாக வைத்துதான் இந்தக் கதையை சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

'பாச்சு' என்றழைக்கப்படும் பிரசாந்த் (ஃபஹத் ஃபாசில்) மும்பையில் ஓர் ஆயுர்வேத பார்மஸி நடத்தி வருகிறார். தனது நிறுவனத்தின் லைசென்ஸை புதுப்பிப்பது, அப்படியே திருமணத்துக்காக பெண் ஒருவரை பார்த்து வருவது என்ற திட்டமிடலுடன் சொந்த ஊரான கேரளத்துக்குச் சென்று திரும்பும்போது, சிறு விபத்தில் காயமடைகிறார். இதனால் மும்பை திரும்புவது தாமதமாகிறது. இதற்கிடையில், மும்பையில் ஆயுர்வேத பார்மஸி அமைந்துள்ள கட்டிடத்தின் உரிமையாளரான ரியாஸ் (வினீத்), பிரசாந்திடம் மும்பை வரும்போது, கேரளாவில் உள்ள தனது அம்மாவையும் ரயிலில் அழைத்து வருமாறு கூறுகிறார். பிரசாந்தும் அதைச் செய்ய ஒப்புக்கொள்கிறார். இந்தப் பயணத்தின் நடுவே கோவாவில் ரியாஸின் அம்மா காணாமல் போகிறார். ஒருவழியாக அவரை கண்டுபிடித்து ரியாஸிடம் சேர்க்கிறார் பிரசாந்த், இந்த இடைவெளியில் அந்த அம்மா பிரசாந்துக்கு ஒரு முக்கியமான வேலையுடன் ஆஃபர் ஒன்றையும் கொடுக்கிறார்.

ரியாஸ் அம்மா பிரசாந்த்துக்கு கொடுத்த வேலை என்ன? பிரசாந்த் இந்த வேலையைச் செய்ய ஏன் ஒப்புக்கொண்டார்? இந்தப் பயணத்தில் இடையில் என்ன நடந்தது? பயணத்தில் ஏற்பட்ட பிரச்சினைக்கான காரணங்கள் என்னென்ன? அந்தப் பிரச்சினைகளை அவர் எப்படி எதிர்கொள்கிறார்? யாரெல்லாம் அவருக்கு உதவினார்கள்? இந்தப் பயணத்தால் பிரசாந்த் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன? - இந்தக் கேள்விகளுக்கான விடைதான் படத்தின் திரைக்கதை.

பாச்சு என்ற பிரசாந்த் கதாப்பாத்திரத்தில் ஃபஹத் மிக சிறப்பாக தனது நடிப்பை வெளிபடுத்தியிருக்கிறார். ஹீரோவுக்கு பெரிய ஸ்கோப் இல்லாத கதை போன்ற படங்களில்கூட தனது நாயகத்தன்மையின் தேவையை நல்ல நடிகரால் பதிவு செய்ய முடியும் என்பதை ஃபஹத் பாச்சு கதாப்பாத்திரத்தின் வழி வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு மெடிக்கல் ஷாப் உரிமையாளராக, திருமணத்துக்கு பெண் தேடும் இளைஞனாக, வளர்ச்சிக்கான வாய்ப்பை தவறவிடாமல் பற்றிக் கொள்ள விரும்பும் சராசரி மனிதனாக, கண்களின் வழியே காதலையும், பாசத்தையும், வீரத்தையும் வெளிக்காட்டும் ஹீரோவாக ஃபஹத் பார்வையாளர்களை வசப்படுத்திக் கொள்கிறார்.

படத்தில் ஹம்சத்வனி கதாப்பாத்திரத்தில் வரும் அஞ்சனா ஜெயபிரகாஷ் போல்டான கோல்டாக ஜொலித்திருக்கிறார். ஃபஹத்துக்கு உதவிடும் காட்சிகளிலும், காதல் பிறக்கும் காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார். மூதாட்டி கதாப்பாத்திரத்தில் வரும் விஜி வெங்கடேஷ், ரஃப் அண்ட் டஃப்பான கேரக்டரில் வரும் வினீத் என அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்னர்.

ஷரன் வேலாயுதனின் கேமரா வழியே கோவாவை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் ரசிக்க வைக்கிறது. கேரளாவைப் போலவே கோவாவின் நிலப்பரப்பும் காணும் போதெல்லாம் மனதுக்குள் மழை பெய்யச் செய்கிறது. இந்தப் படத்துக்கு நம்ம ஜஸ்டின் பிரபாகர்தான் இசையமைப்பாளர். நகைச்சுவை, இரக்கம், காதல், தேடல் என இப்படத்தின் கதைக்களத்துக்கு உகந்த இசையை வழங்கியிருப்பது சிறப்பு.

நகைச்சுவையான பீஃல் குட் டிராமாவாக இருந்தாலும், எளிதில் ஊகிக்கக் கூடிய காட்சிகள்தான் வரப்போகிறது என்று தெரிந்தும், படம் மணிக்கணக்கில் நீள்வது அயற்சியைத் தருகிறது. ஃபஹத்தின் அறிமுகத்துக்கு முன்பு வரை காதலித்த ஒருவரை, ஆர்டர் செய்த உணவு ஆறிவிட்டதால் கேன்சல் செய்வதுபோல, காதலனை வெகு சுலபமாக வேண்டாம் என முடிவு செய்வதுதான் காதலின் புதிய பரிணாமாமா என்று தெரியவில்லை. இப்படியான சில குறைகளைத் தவிர்த்துவிட்டு பார்த்தால், இந்தப் படம் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் ஃபீல் குட் திரைப்படம்தான். கடந்த ஏப்ரல் 23-ல் திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் மே 26 முதல் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x