Published : 19 Jun 2023 11:55 AM
Last Updated : 19 Jun 2023 11:55 AM
க்றிஸ் ஹெம்ஸ்வொர்த் நடிப்பில் நெட்ஃப்ளிக்ஸில் கரோனா காலகட்டத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘எக்ஸ்ட்ராக்ஷன்’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது.
முதல் பாகத்தின் இறுதியில் பங்களாதேஷில் வில்லன் ஆட்களால் சுடப்பட்டு ரத்தவெள்ளத்தில் தப்பிக்கும் நாயகன் டைலர் (க்றிஸ் ஹெம்ஸ்வொர்த்) தன் சகாக்களால் மீட்கப்பட்டு, ஆஸ்திரியாவில் ஆள் அரவமற்ற ஒரு இடத்தில் ஒரு தனி வீட்டில் தங்கவைக்கப்படுகிறார். எந்தவித ரகசிய மிஷனிலும் ஈடுபடாமல் அமைதியான வாழ்க்கை வாழ்ந்துவரும் நாயகனுக்கு, அவரது முன்னாள் மனைவி மூலமாக புதிய மிஷன் ஒன்று வருகிறது. நாயகனின் முன்னாள் மனைவியின் தங்கையை அவரது கணவர் ஜார்ஜியாவில் உள்ள ஒரு சிறையில் அடைத்து வைத்திருப்பதாக நாயகனுக்கு தகவல் கிடைக்கிறது. முன்னாள் மனைவியின் தங்கையையும், அவரது குழந்தையையும் மீட்பதற்காக, தன் சகாக்களின் எதிர்ப்பையும் மீறி ஜார்ஜியா கிளம்பிச் செல்லும் அவர் தனது நோக்கத்தில் வெற்றிபெற்றாரா? என்பதே ‘எக்ஸ்ட்ராக்ஷன் 2’ படத்தின் மீதிக் கதை.
கதையைப் பற்றியெல்லாம் கவலை இல்லை, எங்களுக்கு ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்ஷன் காட்சிகள் படம் முழுக்க நிறைந்திருக்க வேண்டும் என்பவர்களுக்காகவே வெளியான படம் ‘எக்ஸ்ட்ராக்ஷன்’. படம் தொடங்கியது முதல் இறுதிவரை சேஸிங், துப்பாக்கிச் சண்டை, கத்திக் குத்து என ரத்தக் களறியாக செல்லும். அதே ஃபார்முலாவில் இம்மிபிசகாமல் வெளியாகியிருக்கிறது ‘எக்ஸ்ட்ராக்ஷன் 2’. முதல் பாகத்தைப் போலவே இதிலும் சிக்கலில் இருக்கும் குழந்தைகளை மீட்கும் சாதாரண கதைதான். ஆனால் படம் முழுக்க வரும் ஆக்ஷன் காட்சிகள்தான் கதையை முன்னோக்கிக் கொண்டு செல்கின்றன. திரைக்கதையில் ஆக்ஷன் காட்சிகள் இருக்கலாம். ஆனால் வெறும் ஆக்ஷன் காட்சிகளுக்காகவே திரைக்கதை எழுதினால் அதுதான் ‘எக்ஸ்ட்ராக்ஷன் 2’.
முதல் பாகத்தில் பங்களாதேஷில் நடக்கும் சண்டைக் காட்சி ஒரே ஷாட் ஆக 12 நிமிடம் தொடர்ச்சியாக நடக்கும் வகையில் எடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இப்படத்தில் அதை தூக்கி சாப்பிடும் வகையில் ஜார்ஜியா சிறையில் இருந்து தப்பிக்கும் காட்சி 20 நிமிடம் எடுக்கப்பட்டிருக்கிறது. சிங்கிள் ஷாட் காட்சியமைப்பில் இயக்குநர் சாம் ஹார்க்ரேவ் அசுரப் பாய்ச்சல் நிகழ்த்தியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். அதன் பிறகு வரும் காட்சிகள் அனைத்தும் படத்தை ஜெட் வேகத்தில் கொண்டு செல்கின்றன.
ஆனால் முதல் பாகத்தை விட ஒரு படிமேலாக ஆக்ஷன் காட்சிகள் இருக்கவேண்டும் என்பதற்காக வைக்கப்பட்ட காட்சிகள் ஒருகட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. படம் முழுக்க குண்டு மழை பொழிந்து கொண்டே இருக்கிறது. பிஸ்டல், ஸ்னைப்பர், ரைஃபிள் என மாறி மாறி யாராவது சுட்டுக் கொண்டே இருக்கிறார்கள். படத்தை எந்த இடத்தில் ஸ்கிப் செய்து பார்த்தாலும் அந்த காட்சியில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுதான் இருப்பார். அந்த அளவுக்கு படம் முழுக்க டமால் டுமீல் சத்தம்.
முந்தைய பாகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சொல்லப்பட்ட டைலரின் பின்னணி, இதில் விரிவாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த காட்சிகள் அழுத்தமாக பதிவு செய்யப்படாததால் பார்க்கும் நமக்கு அவை எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆக்ஷன் காட்சிகளில் செலுத்திய கவனத்தை கொஞ்சம் எமோஷனல் காட்சிகளிலும் செலுத்தியிருக்கலாம்.
எத்தனை முறை சுட்டாலும் சாகாத நாயகன், குண்டு தீராத துப்பாக்கிகள், போலீஸே இல்லாத நகரங்கள் என படம் முழுக்க அப்பட்டமான லாஜிக் மீறல்கள் இருந்தாலும், படம் முடியும்வரை அவை எதுவும் நமக்கு தோன்றாமல் பார்த்துக் கொண்டதுதான் இயக்குநரின் வெற்றி. ஒரு ஆள் நூறுபேரை அடிப்பதை தமிழ் சினிமாவிலேயே காலம் காலமாக நாம் பார்த்திருந்தாலும், க்றிஸ் ஹெம்ஸ்வொர்த்தின் ஆஜானுபாகுவான தோற்றமும், ஸ்டண்ட் கலைஞர்களின் உழைப்பும் அந்த காட்சிகளுக்கான நம்பகத்தன்மையை கூட்டுகிறது.
முன்பே குறிப்பிட்டதுபோல கதை, லாஜிக், சென்டிமெண்ட் எல்லாம் தேவையில்லை, ரத்தம் தெறிக்க தெறிக்க தரமான ஆக்ஷன் காட்சிகள் இருந்தால் போதும் என்று சொல்பவர்கள் தாராளமாக பார்க்கலாம். படத்தின் இறுதியில் மூன்றாம் பாகத்துக்கான ஒரு குறிப்பும் உள்ளது. அதைப் பார்க்கும்போது ‘வின்னர்’ படத்தில் வரும் ஒரு வசனம்தான் ஞாபகம் வருகிறது. “இன்னும் எத்தனை தலை உருளப் போகுதோ தெரியலியே”
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT