Published : 02 Jun 2023 03:36 PM
Last Updated : 02 Jun 2023 03:36 PM
பெருந்தொற்று பரவிய காலக்கட்டத்தில் அது குறித்த கற்பனையான கதைக்களத்துடன் நெட்ஃப்ளிக்ஸில் ‘போஸ்ட் அபோகலிப்டோ’ ஜானரில் வெளியான தொடர் ‘ஸ்வீட் டுத்’. 2021-ஆம் ஆண்டு வெளியாகி, வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இத்தொடரின் இரண்டாவது சீசன் கடந்த மாதம் வெளியானது.
முதல் சீசன்: ஒரு மிகப் பெரிய ஆட்கொல்லி வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவுகிறது. இன்னொருபுறம் மிருகங்களின் உருவத்துடன் குழந்தைகள் பிறக்கின்றன. தன் தந்தையுடன் காட்டில் வளரும் கஸ் என்ற மானின் கொம்புகள் கொண்ட சிறுவன், பின்பு தந்தையை இழந்து தனியாகிறான். காட்டுக்கு வரும் ஜெப் என்ற மனிதனின் உதவியுடன் தன் தாயை கண்டுபிடிக்கும் பயணத்தை தொடங்குகிறான். இதுதான் முதல் சீசனின் கதை. இதில் விலங்கு தோற்றம் கொண்ட ஹைப்ரிட் குழந்தைகள்தான் வைரஸ் பரவலுக்கு காரணம் என்று தேடித் தேடிக் கொல்லும் ‘தி லாஸ்ட் மென்’ என்ற கூட்டம், அவர்களுக்கு எதிராக செயல்படும் அனிமல் ஆர்மி என முதல் சீசன் நெருப்பு வேகத்தில் விறுவிறுப்பாக சென்றது.
கஸ் ‘தி லாஸ்ட் மென்’ ஆட்களால் கடத்தப்பட்டு, அனிமல் ஆர்மியின் தலைவி பியர் அவனை தேடிச் செல்வதுடன் முதல் சீசன் முடிந்திருந்தது. ஹைப்ரிட் குழந்தைகளை உயிரியல் பூங்கா ஒன்றில் வைத்து பாதுகாத்து வந்த எய்மீ என்ற பெண்ணிடமிருந்து பூங்காவையும், ஹைப்ரிட்களையும் தி லாஸ்ட் மென் அபகரித்துக் கொள்கின்றனர். இன்னொரு பக்கம் மேலும் பரிணாமம் அடைந்துவிட்ட வைரஸுக்கான மருந்தை கண்டுபிடிக்க முயற்சியில் ஆதித்யா சிங் என்ற விஞ்ஞானி ஈடுபட்டு வருகிறார். எய்மீ, ஜெப், அனிமல் ஆர்மி தலைவி பியர் உள்ளிட்டோரின் முயற்சியால் கஸ் உள்ளிட்ட ஹைப்ரிட் குழந்தைகள் மீட்கப்பட்டார்களா என்பதற்கு விடை சொல்கிறது ஸ்வீட் டூத் இரண்டாவது சீசன்.
ரோட் ட்ரிப், பரபர சேசிங், அனிமல் ஆர்மி vs தி லாஸ்ட் மென் மோதல் என முதல் சீசன் முழுக்கவே காட்சிகள் மாறி மாறி காட்டப்பட்டிருக்கும். ஆனால், இரண்டாவது சீசனின் பெரும்பாலான காட்சிகள் தி லாஸ்ட் மென் ஆக்கிரமித்திருக்கும் உயிரியல் பூங்காவிலும், ஆதித்யா சிங்கின் ஆராய்ச்சிக் கூடத்திலுமே நகர்கின்றன. முதல் சீசனில் பெரும்பாலும் கஸ் மற்றும் ஜெப்-ஐ சுற்றியே காட்சிகள் நகரும். ஆனால், இந்த சீசனில் ஆதித்யா சிங், தி லாஸ்ட் மென் கூட்டத்தின் தலைவன் அவரது தம்பி, ஆதித்யா சிங்கின் மனைவி, எய்மி என கிளை கதாபாத்திரங்கள் மீதே கதை நகர்கின்றது.
அழுத்தமான எமோஷனல் காட்சிகள், மெயின் கதையை பாதிக்காத கிளைக் கதைகள், விறுவிறுப்பான திரைக்கதை என ஒரு வெப் தொடருக்கு தேவையான அத்தனை அம்சங்களையும் கொண்டு நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது ‘ஸ்வீட் டூத்’. ஃபேன்டசி பாணியிலான கதைக்களம் என்றாலுமே சூப்பர் ஹீரோயிக் தருணங்களையோ, எதிர்பாராத திருப்பங்களையோ கொண்டு திரைக்கதையை கையாளாமல் ஒரே நேர்க்கோட்டில் ஆர்ப்பாட்டமில்லாமல் கொண்டு சென்றது சிறப்பு. இந்த சீசனின் இறுதியில் மூன்றாவது சீசனுக்கான லீடும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜெஃப் லெமைரின் ‘ஸ்வீட் டூத்’ கிராஃபிக் நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ள இந்த ’ஸ்வீட் டூத்’ தொடர் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இயற்கை கொடுக்கும் இன்னல்களுக்கு தீர்வு இயற்கையிலேயே தான் இருக்கிறது என்ற கருத்தை முன்வைக்கும் இந்த தொடர் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
‘ஸ்வீட் டூத்’ சீசன் 2 ட்ரெய்லர் வீடியோ:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT