Published : 03 Aug 2022 07:42 PM
Last Updated : 03 Aug 2022 07:42 PM
சென்னை: 'கல்கி' குழுமம் சார்பில் உருவாகியுள்ள 'வந்தியத்தேவனின் பாதையில் ஓர் அனுபவப் பயணம்' ஆவணத்தொடரின் முன்னோட்டம் இன்று சென்னையில் வெளியிடப்பட்டது.
'பொன்னியின் செல்வன்' நாவலில் வந்தியத்தேவன் பயணித்த இடங்களை ஆவணப்படுத்தும் வகையில் கல்கி குழுமம் சார்பில் 'காணொலித் தொடர்' ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 15 வீடியோக்களாக உருவாகியுள்ள இந்தத் தொடர், கல்கி குழுமத்தின் அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்தில் செப்டம்பர் 24-ம் தேதியிலிருந்து வெளியிடப்பட உள்ளது. ஒன்பது நாட்கள், 10 மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்தத் தொடர், வீராணம் ஏரியில் தொடங்கி மாமல்லபுரம் வரையிலான வந்தியத்தேவனின் பயண இடங்கள் குறித்து பேசுகிறது.
எழுத்தாளரும், பத்திரிகையாளருமான 'காலச்சக்கரம்' நரசிம்மன் தொடரை வழிநடத்தியுள்ளார். இந்நிலையில், 'பராக்! பராக்! பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் பாதையில் ஓர் அனுபவ பயணம்' என்ற இந்தத் தொடரின் முன்னோட்டம் (ட்ரெய்லர்) சென்னை வள்ளூவர் கோட்டத்தில் கல்கி குழுமம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 மணி நேரம் ஓடும் இந்தத் தொடரின் ஒவ்வொரு எபிசோடும் 16 நிமிடங்கள் நீளமுடையவை.
மேலும், வந்தியத்தேவன் பயணித்த இடங்களை காட்சியாக மட்டுமல்லாமல், பொதுமக்கள் நேரில் சென்று கண்டு களிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 9 நாட்கள், 6 நாட்கள், 3 நாட்கள் என மூன்று வகையான பேக்கேஜ்களுடன் சம்பந்தபட்ட இடங்களுக்கு பொதுமக்களை அழைத்துச் செல்ல கல்கி குழுமம் திட்டமிட்டுள்ளது. பயணிக்க விரும்புவோர் https://kalkionline.com/ponniyin-selvan-travel-booking என்ற வலைதளத்தில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம். அக்டோபர் முதல் தொடங்கும் இந்தப் பயணத்தின் கட்டண விவரங்கள் செப்டம்பர் 9-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT