Published : 24 Jan 2022 06:33 PM
Last Updated : 24 Jan 2022 06:33 PM

‘நான் ஏன் காந்தியைக் கொன்றேன்?’ படத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு - பின்னணி என்ன? 

‘நான் ஏன் காந்தியைக் கொன்றேன்?’ திரைப்படத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுக்கிறது. இதற்கு, நாதுராம் கோட்சேவை மேன்மைப்படுத்தும் காட்சிகளே காரணம் என்று விவாதிக்கப்படுகிறது.

1948-ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி நாதுராம் கோட்சே என்பவர் மகாத்மா காந்தியை சுட்டுக் கொலை செய்தார். கோட்சேவின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு அவரது சகோதரர் கோபால் கோட்சே எழுதிய புத்தகம்தான் ‘நான் ஏன் காந்தியைக் கொன்றேன்?’ (Why I Killed Gandhi?). தற்போது இந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு அசோக் தியாகி இயக்கியுள்ள ‘ஒய் ஐ கில்டு காந்தி’ என்ற ஆவணப் படம் ஒன்று லைம்லைட் ஓடிடி தளத்தில் வரும் ஜனவரி 30 அன்று வெளியாகவுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகியிருந்தது. இதில் காந்தியைக் கொன்ற கோட்சே, நீதிமன்றத்தில் தன்னுடைய தரப்பு நியாயங்களைப் பேசுவதாக காட்டப்பட்டிருந்தது. அன்று முதல் அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி பல்வேறு தரப்பினரும் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பி வருகின்றனர்.

இப்படத்தில் நடித்துள்ள அமல் ராம்சிங் கோலே தற்போது தேசியவதாக காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்பியாக இருக்கிறார். ஏற்கெனவே மராத்தி தொடரான ‘ராஜா சிவ்சத்ரபதி’யில் சத்ரபதி சிவாஜி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.

‘ஒய் ஐ கில்டு காந்தி’ படத்தை தடை செய்யக் கோரி மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “காந்திஜியைக் கொன்றவரை ஹீரோவாக காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. காந்திஜியும் மற்றும் அவருடைய கொள்கைகளும் உலகளவில் கொண்டாடப்படுகின்றன. காங்கிரஸ் இப்படத்தை முற்றிலுமாக எதிர்க்கிறது. இப்படம் மகாராஷ்டிராவில் வெளியாவதை அனுமதிக்கக் கூடாது என்று முதல்வர் உத்தர் தாக்கரேவிடம் கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல அகில இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு (AICWA) பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் “வரும் ஜனவரி 30 அன்று ஓடிடியில் வெளியாகவுள்ள ‘நான் ஏன் காந்தியைக் கொன்றேன்’ திரைப்படம் முற்றிலுமாக தடைசெய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம். இந்தப் படம் தேசத் தந்தை மகாத்மா காந்திஜியைக் கொலை செய்த நாதுராம் கோட்சேவை மேன்மைப்படுத்துகிறது. காந்திஜி இந்தியா மட்டுமின்று உலகம் முழுவதும் போற்றப்படும் ஒருவர். காந்திஜியின் சித்தாந்தம் ஒவ்வொரு இந்தியருக்கும் அன்பு மற்றும் தியாகத்தின் அடையாளமாக இருக்கிறது. இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தேசத்தின் சார்பாகவும் அனைத்து திரையுலக சங்கங்கள் சார்பாகவும் கோரிக்கை விடுக்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

இது தவிர சமூக வலைதளங்களிலும் நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் இப்படத்தை தடைசெய்ய வேண்டும் என்று குரலெழுப்பி வருகின்றனர். அதேவேளையில், படத்தை முமுமையாகப் பார்த்த பிறகுதான் விமர்சிக்க வேண்டும் என்ற ஆதரவுக் குரல்களும் தென்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x