Published : 26 Dec 2024 09:26 PM
Last Updated : 26 Dec 2024 09:26 PM
நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் சர்வைவர் த்ரில்லரான ‘ஸ்குவிட் கேம்’ வெப் சீரிஸின் சீசன் 2 வெளியாகியுள்ளது. ஏழு எபிசோடுகளையும் ஆர்வத்துடன் ஒன்றன் பின் ஒன்றாக கண்டு ரசித்தபடி கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர் ரசிகர்கள்.
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட இணையத் தொடர் என்ற பெருமையையும் 'ஸ்குவிட் கேம்' பெற்றிருந்தது. இந்தத் தொடரின் அடுத்த சீசன் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில், இந்தத் தொடரின் இரண்டாம் சீசன் இன்று (டிச.26) வெளியானது. இதன் 3-வது மற்றும் இறுதி சீசன் வரும் 2025-ம் ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான ட்ரெய்லர் வெகுவாக கவனத்தை ஈர்த்தது. மீண்டும் என்னை அந்த விளையாட்டில் அழைத்துச் செல்லுங்கள் என கேட்கிறார் சியோங் கி ஹுன். மீண்டும் அந்த விபரீதமான விளையாட்டுக்குள் ஒரு கூட்டம் நுழைகிறது.
“நாங்கள் உங்களை எதுவும் செய்ய மாட்டோம். இது உங்களுக்கான வாய்ப்பு” என அந்த பாதுகாவலர்கள் தெரிவிக்கின்றனர். முதல் விளையாட்டு தொடங்குகிறது. முந்தைய பாகத்தில் இருந்ததை போல, கொடுக்கும் நேரத்தில் முன்னேற வேண்டும். தவிர்த்து, ராட்சத பொம்மை பார்க்கும்போது அசைபவர்கள் கொல்லப்படுகிறார்கள். ரத்தம் தெறிக்கிறது. மறுபுறம் உண்டியலில் பணம் கொடுக்கப்படுகிறது. “இதில் நான் வென்றுவிட்டால் என்னுடைய அனைத்து கடனையும் அடைத்துவிடுவேன்” என்கிறார் விளையாட்டில் பங்கேற்கும் ஒருவர்.
விளையாட்டில் பங்கேற்பவர்களிடையே மோதல், உயிர் போதல் என விறுவிறுப்பாக நகரும் ட்ரெய்லரில் எதிர்த்து களமாட முடிவு செய்கிறார் நாயகன் சியோங். “இந்த விளையாட்டை யார் உருவாக்கினார்கள், அவர்களை எதிர்த்து போராட வேண்டும்” என்கிறார். பயம், எதிர்ப்பு, தைரியம், விறுவிறுப்பு என ஆர்வமூட்டியது ட்ரெய்லர்.
தற்போது, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ‘ஸ்குவிட் கேம்’ வெப் சீரிஸின் ஏழு எபிசோடுகள் அடங்கிய சீசன் 2-ஐ ஆர்வத்துடன் கண்டு ரசிகர்கள் கருத்துப் பதிவு செய்து வருகின்றனர். “இதுவரை 3 எபிசோடுகள் முடித்துவிட்டேன். இதுவரை வந்த ட்விஸ்ட் அனைத்தும் மைண்ட் ப்ளோயிங்” என்று ஒரு ரசிகர் குறிப்பிட்டுள்ளார். “த்ரில்லிங்குடன் டென்ஷன் கூடுகிறது” என்று மற்றொருவர் வியந்துள்ளார். அட்டகாசமான துவக்கம் என்று பலரும் கருத்துகளைப் பதிவு செய்தவண்ணம் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT