Last Updated : 19 Jul, 2024 03:23 PM

4  

Published : 19 Jul 2024 03:23 PM
Last Updated : 19 Jul 2024 03:23 PM

வட இந்திய ரசிகர்களை விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ வசீகரித்தது எப்படி? - ஒரு விரைவுப் பார்வை

‘குரங்கு பொம்மை’ படம் மூலம் அறிமுகமான நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ திரைப்படம் கடந்த ஜூலை 12-ல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. திரையரங்குகளில் வெளியானபோதே நல்ல வரவேற்பை பெற்றாலும் ஓடிடியில் வெளியான பிறகு சமூக வலைதளங்களில் இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

குறிப்பாக, வட இந்திய ரசிகர்கள் இப்படத்தை பெரிதும் பாராட்டி வருகின்றனர். பலரும் இப்படத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப் உள்ளிட்டோரின் நடிப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களை பேசிய விதம் குறித்து பாசிட்டிவான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தொடர்ந்து இந்தியாவில் டாப் 10 படங்களில் முதலிடத்தில் உள்ளது. அதேபோல 14 நாடுகளில் ட்ரெண்டிங் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. வெளியான முதல் இரண்டு நாட்களிலேயே இப்படம் 3.2 மில்லியன் பார்வைகளையும், 7.5 மில்லியன் பார்வை நேரங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

பொதுவாக, எந்த மொழிப் படமாக இருந்தாலும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் அந்தந்த மொழி பேசும் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் உள்ள ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் படமே தொடர்ந்து ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடிக்கும். அந்த வகையில் தற்போது ‘மகாராஜா’ படம் வெளியான நாளிலிருந்து இன்று வரை ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

வடமாநில ரசிகர்களிடையே ‘மகாராஜா’ படம் இந்த அளவுக்கு வரவேற்பை பெறுவதற்கான காரணம், கடந்த சில ஆண்டுகளாக இந்தி திரையுலகில் நிலவும் ‘கன்டென்ட்’ வறட்சி என்று கூட சொல்லலாம். ரூ.500 கோடி, ரூ.600 கோடி பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் எல்லாம் தொடர்ந்து ஏமாற்றியதன் எதிரொலியாக நல்ல திரைக்கதையில், எளிதில் தொடர்புப்படுத்திப் பார்க்கக் கூடிய உள்ளடக்கத்துடன் ஒரு படம் வெளியாகும்போது அது அவர்களிடையே பாசிட்டிவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

’பாகுபலி’, ‘கேஜிஎஃப்’ போன்ற படங்களுக்குப் பிறகு பான் இந்தியா என்ற வார்த்தை பிரபலமானது. இவை வடமாநிலங்களில் பெற்ற வரவேற்பைக் கண்டு ஏங்கிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த பாலிவுட் உலகம், பூனையைப் பார்த்து புலி சூடுபோட்டுக் கொண்ட கதையாக ‘பிரம்மாஸ்திரா’, ‘டைகர் ஜிந்தா ஹை’, ‘ஆதிபுருஷ்’ போன்ற படங்கள் வடமாநிலங்களிலேயே தடுமாறின.

’பாகுபலி’, ‘கேஜிஎஃப்’ போன்ற படங்கள் பெற்ற பரவலான வரவேற்புக்குக் காரணம் வெறும் பட்ஜெட் மட்டுமே அல்ல. அதில் பார்வையாளர்களுக்கு இருந்த எமோஷனல் தொடர்பும், விறுவிறுப்பான திரைக்கதையும்தான் என்பதை இந்தி இயக்குநர்கள் புரிந்துகொள்ளவில்லை. அந்தக் குறையை தீர்க்கவும் கூட தென்னிந்திய இயக்குநர்களான அட்லீயும், சந்தீப் ரெட்டி வங்காவும் தான் வரவேண்டியிருந்தது.

இப்படியான ‘வறண்ட’ சூழலில், வடமாநில ரசிகர்கள் எதிர்பார்க்கும் விறுவிறுப்பு, ஆக்‌ஷன், அதிர வைக்கும் ட்விஸ்ட் ஆகிய அம்சங்களை தாங்கி வெளியான ‘மகாராஜா’ அவர்களது மனக்குறைக்கு பெரும் தீனியாக அமைந்தது. அதன் விளைவாக சமூக வலைதளங்களில் எங்கு திரும்பினாலும் ‘மகாராஜா’வையும், விஜய் சேதுபதியின் நடிப்பையும் பாராட்டி மீம்ஸ்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

பான் இந்தியா திரைப்படம் என்பது அதன் பட்ஜெட்டோ, அதில் இடம்பெற்றிருக்கும் பிரம்மாண்ட காட்சியமைப்புகளோ அல்ல. மொழி, இன வித்தியாசமின்றி எளிய மக்களை கூட சென்றடையக்கூடிய தரமான உள்ளடக்கமே ஒரு படத்தை பான் இந்தியா படமாக மாற்றுகிறது என்பதற்கு ‘மகாராஜா’ படமே சாட்சி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x