Published : 18 Jun 2024 09:05 AM
Last Updated : 18 Jun 2024 09:05 AM
ஜீ 5 தளத்தில் வெளியான வசந்தபாலனின் ‘தலைமைச் செயலகம்’ வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அரசியல் த்ரில்லர் என்றாலும் ‘டர்ன் அண்ட் ட்விஸ்ட்’ என்ற வழக்கமான ‘வெப் சீரிஸ் பார்முலா’வுக்குள் சிக்காமல் நம்பகத் தன்மையோடு நகரும் திரைக்கதை, இத்தொடரின் பலம். “ஏன் அரசியல் தொடர்?” என்ற கேள்வியுடன் வசந்தபாலனிடம் பேசினோம்.
“இந்த தொடரை தயாரிச்ச ராதிகா மேடம், அரசியல்ல பெண்களுக்கான அதிகாரம் பற்றி ஒரு ஐடியா சொல்லி, அதை வெப் தொடரா இயக்கணும்னு சொன்னாங்க. அவங்க கொடுத்த லைன் நேரடி அரசியலா இருந்தது. இதை அப்படியே பண்ண முடியாது. வேறொரு கதை பண்றேன்னு சொன்னேன். சரின்னாங்க. நான் பண்ணிட்டு வந்து கொடுத்தேன். அதுதான் ‘தலைமைச் செயலகம்’”
அரசியல் படங்கள்னா நையாண்டியை மையமா வச்சு பண்றதுதான் வழக்கம்…
நான் யாரையும் காயப்படுத்தாம கதை பண்ணலாம்னு யோசிச்சேன். எமோஷனல் தொடரா உருவாக்க நினைச்சோம். ஒரு முதல்வரா இருந்து அவர் மனநிலையை பார்த்தா எப்படி இருக்கும்? அவர் மகளா இருந்து, மருமகனா இருந்து பார்த்தா எப்படி இருக்கும்னு நினைச்சு அந்தக் கதாபாத்திரங்களை வடிவமைச்சேன். அதோட கொற்றவை கதாபாத்திரத்தோட நீள அகலம் எப்படி இருக்குங்கறதையும் பதிவு பண்ண விரும்பினேன். அது சரியா அமைஞ்சது. நாற்காலிக்கான அதிகாரப் போட்டி பற்றி நிறைய படங்கள், வெப் தொடர்கள் வந்திருக்கு. ஆனா, இவ்வளவு யதார்த்தமாக யாரும் சொன்னதில்லை அப்படிங்கிறதைத்தான் இந்தத் தொடருக்கான வெற்றியா பார்க்கிறேன்.
ட்விஸ்ட்-தான் த்ரில்லர் கதைகளுக்கான பலம்னு சொல்வாங்க…
இதுலயும் சில சின்ன சின்ன ட்விஸ்ட் இருக்கு. ஆனா, கொற்றவை யார் அப்படிங்கறதுதான் இந்தக் கதையில பெரிய ட்விஸ்ட். தொடர்ந்து படங்கள் பார்க்கிற பார்வையாளர்கள் முதல் சீன்லயே அதை கண்டுபிடிச்சிட முடியும். அதனால ஆரம்பிக்கும்போதே ஒரு ட்விஸ்ட், டைட்டில் முடிஞ்சதும் ஒரு ட்விஸ்ட், 10 நிமிடம் கழிச்சு ஒரு ட்விஸ்ட் அப்படிங்கற த்ரில்லருக்கான விதிக்குள்ள போகலை. நான் எமோஷனை நம்பினேன். எல்லா காட்சியும் முக்கியம்னு நினைச்சேன். அது சரியா பார்வையாளர்கள்ட்ட சேர்ந்திருக்கு.
நடிகர்களை எப்படி தேர்வு பண்ணுனீங்க?
முதல்ல, முதல்வர் கேரக்டரை சரத்குமார் பண்றதா இருந்தது. பிறகு மோகன்பாபு, பசுபதின்னு நிறைய பேரை யோசிச்சு, கிஷோரை முடிவு பண்ணினோம். அவர் அந்த கேரக்டருக்கு சரியா பொருந்தினார். அதே போல கொற்றவை கேரக்டருக்கு, ஒரு குழந்தைக்கு தாயா நடிக்கிற திராவிட முகம் தேவைப்பட்டது. அதுக்கு ஸ்ரேயா ரெட்டி பொருத்தமா இருந்தாங்க. நாங்க ரொம்ப மெனக்கெட்டது துர்கா கேரக்டருக்குத்தான். கொற்றவைக்கும் அவருக்கும் கொஞ்சம் முக ஒற்றுமை தேவைப்பட்டது. அதனால நிறைய தேடி கனி குஸ்ருதியை தேர்வு பண்ணினோம். சந்தானபாரதி, பரத், ஆதித்யா மேனன், ரம்யா நம்பீசன், கவிதா பாரதியில இருந்து ஒவ்வொருவரும் அந்தந்த கதாபாத்திரங்களா மாறியிருந்தது, இந்த தொடரோட வெற்றிக்கு பலம்னு நம்பறேன்.
நிறைய விஷயங்கள், நிஜ சம்பவங்களை பிரதிபலிக்கிற மாதிரி இருக்கே?
பார்வையாளர்களை நம்ப வைக்கவும் கதைக்குள்ள இழுக்கவும் சில நிஜ சம்பவங்களுக்கு தொடர்புடைய விஷயங்களை வைக்க வேண்டியிருக்கு. கொஞ்சம் பொய், கொஞ்சம் உண்மை கலந்து அதை சரியான அளவுல கொடுத்திருக்கோம்.
அரசியல்வாதின்னா கெட்டவரா காட்டுற வழக்கம்தான் சினிமாவில் இருக்கு. நீங்க அதை வேண்டாம்னு தவிர்த்தீங்களா?
அப்படியில்ல. நான் இதுல சொல்ல வந்தது ஊழல் பண்ணினதால மட்டும் ஒருத்தர் கெட்டவனாகிட முடியாது என்பதைத்தான். ஜனநாயகம் அப்படிங்கற சிஸ்டத்துல ஊழல்ங்கிறதும் இன்னைக்கு ஒரு பகுதியாகவே இருக்கு. அதை மட்டுமே காரணமா வச்சு ஜனநாயகத்தையே அழிக்க முயற்சிக்கிறதை ஏத்துக்க முடியாதுங்கறது தான் இந்த வெப் தொடரோட நோக்கம். கதையில அதுக்கான நியாயம் இருக்கு.
இயக்குநராக இந்த தொடருக்கான ‘ரெஸ்பான்ஸ்’ உங்களுக்கு எப்படி இருந்தது?
ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் என்ன வரவேற்பு இருக்குமோ, அது கிடைச்சது. நான் இயக்கிய ‘அங்காடி தெரு’வுக்கு கிடைச்ச அளவுக்கு நிறைய பாராட்டுக்கள். இதுவரை என்னிடம் பேசாத தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், அரசியல்வாதிகள், அப்புறம் ஒரிஜினல் தலைமைச்செயலகத்துல இருந்தும் பாராட்டு கிடைச்சது. இது மகிழ்ச்சியா இருக்கு..
அடுத்து சினிமாவா, வெப் தொடரா?
ஸ்கிரிப்ட் எழுதிட்டிருக்கேன். முடிவாகலை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT