Published : 07 Jan 2024 07:04 AM
Last Updated : 07 Jan 2024 07:04 AM
‘சேரனின் ஜர்னி’ வெப் தொடர், வரும் 12-ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. சரத்குமார், பிரசன்னா, ஆரி அர்ஜுனன், கலையரசன், திவ்ய பாரதி, காஷ்யப் பார்பயா, ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடித்திருக்கும் இந்த வெப்தொடருக்கு சத்யா இசை அமைத்திருக்கிறார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சினிமாவில் யதார்த்தத்தோடு சமூக விஷயங்களைப் பேசிய இயக்குநர் சேரன், இதில் என்ன சொல்லப் போகிறார்? அவரிடம் கேட்டோம்.
மக்கள் இன்னைக்கு அதிகம் பார்க்கிற விஷயமா வெப் தொடர்கள் இருக்கு. நீங்க வெப் தொடர் இயக்க அதுதான் காரணமா?
உண்மைதான். சினிமா மட்டுமில்லாம வெப் தொடர்கள்லயும் பணியாற்றணும்னு எனக்கு ஆசை. சினிமாவுல இரண்டு, இரண்டரை மணி நேரத்துல கதை சொல்றோம்னா, வெப் தொடர்ல ஒரு பெரிய கதையை, விரிவா,அழுத்தமா சொல்றதுக்கு வாய்ப்புகள் இருக்கு. அதை நான் பயன்படுத்திக் கிட்டேன்.
பெரும்பாலான வெப் தொடர்கள் ஹாரர், திரில்லர், சஸ்பென்ஸ் கதைகளை உள்ளடக்கியதாகத்தான் இருக்கு. ஓடிடி தளங்களே அப்படிப்பட்ட கதைகளைத்தான் கேட்கிறதா சொல்றாங்க. உங்க ‘ஜர்னி’ எப்படி இருக்கும்?
அதை பிரேக் பண்ற வெப் தொடரா இது இருக்கும். நான் சோனி லிவ் நிறுவனத்துக்கு கதை சொல்லும் போதே உங்க ஸ்டைல்ல எடுங்கன்னு தான் சொன்னாங்க. அதனால இது அந்த வகைக்குள்ள வராது. இது எல்லாருக்குமான கதை. யாராவது ஒருத்தர் இந்தக் கதையை கடந்து போயிருப்பாங்க. யாராவது ஒருத்தர் இதுக்குள்ளயே இருப்பாங்க. யாராவது ஒருத்தர் இதுக்கு ஆசைப்பட்டுக்கிட்டு இருப்பாங்க.
டிரெய்லர் பார்த்தா 5 பேரோட ‘ஜர்னி’ மாதிரி தெரியுதே? யார் அந்த 5 பேர்?
நம்ம அரசியல் அமைப்புல தெரிஞ்சோ தெரியாமலோ நடந்த தவறுகள் தனி மனிதனை எப்படி பாதிச்சிருக்கு அப்படிங்கறதை சொல்றதுக்கு கூட்டம் சேர்த்து போராட, எனக்கு கூட்டம் கிடையாது. கொடி பிடிச்சுப் போராட, கொடி கிடையாது. நானா குரல் கொடுத்தா, என்குரலை கேட்கிறவங்க கிடையாது. அப்பஒரு தனி மனிதன் இந்த அமைப்புகளால, சட்டங்களால, திணிப்புகளால எவ்வளவு பாதிக்கப்படுறான் அப்படிங்கறதை பிரதிபலிக்கிறவங்கதான் இந்த 5 கேரக்டர்கள். பிரசன்னா, ஆரி அர்ஜுனன், கலையரசன், காஷ்யப், திவ்யபாரதி இவங்கதான் அந்த 5 பேர்.
விவசாயம் தொடர்பான கதைன்னும் சொல்றாங்களே?
அதை மட்டுமே பேசற தொடர் இது இல்லை. விவசாயம் திரும்பத் திரும்ப சொல்லப்பட வேண்டிய விஷயம். அது ரொம்ப முக்கியமானது. அதனால விவசாயமும் கதைக்குள்ள இருக்கு. இதுவரை விவசாயம் பற்றி நிறைய படங்கள்ல பேசியிருக்காங்க. அது ஆண்களுக்கு மட்டுமே சொந்தமானதுங்கற மாதிரி காண்பிச்சிருக்காங்க. முதன்முறையா இதுல ஒருபெண், விவசாயத்தைப் பற்றி பேசறாங்க.இன்னும் சொல்லப் போனா, விவசாயம் பற்றி பேச ஆணை விட தகுதியானவங்க பெண்தான். ஏன்னா, நிலத்துக்கும் தாய்மை இருக்கு. பெண்ணுக்கும் தாய்மை இருக்கு. அந்த வகையில ஒரு பெண்ணின் பார்வையில விவசாயத்தை பேசும் கேரக்டரா திவ்ய பாரதி நடிச்சிருக்காங்க.
ஓடிடி தொடர்கள்ல பாலியல் தொடர்பான காட்சிகள், ஆபாச வசனங்கள் அதிகமா இருக்கு அப்படிங்கற விமர்சனங்கள் இருக்கு...
இது, நான் இயக்கும் வெப் தொடர்.இதுல அப்படி எதுவும் இருக்காது.குடும்பத்தோட பார்க்கணுங்கறதுக்காகத்தான் எடுக்கிறோம். ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒவ்வொரு ஸ்டைல்இருக்கு. நான் எப்போதும் மக்களுக்கான படங்களை, அவங்களுக்குத் தேவையான படங்களைத்தான் கொடுத்துட்டு வந்திருக்கேன். இதுவும் அப்படித்தான் இருக்கும். வழக்கமான வெப் தொடர் விஷயங்களை பிரேக் பண்ற மாதிரி இருக்கும்.
உங்களோட 5 கேரக்டருக்கும் பிரசன்னாவுல இருந்து காஷ்யப் வரை தேர்வு பண்ண ஏதும் காரணம் இருக்கா?
அவங்ககிட்ட இருக்கும் தனித்தன்மைதான் காரணம். ஒவ்வொருத்தர் கிட்டயும் ஒரு ஸ்பெஷல் விஷயம் இருக்கு. இந்த வெப் சீரிஸ்ல இரண்டு போர்ஷன் ஆங்கிலத்திலேயே பண்ணியிருக்கோம். ஒரு போர்ஷன் இந்தியிலயே வரும். இந்திப் படங்கள்லநடிச்சுட்டு வர்ற காஷ்யப், அதுலநடிச்சிருக்கார். அவர் பகுதி முழுவதும் இந்தியிலதான் இருக்கும். பிரசன்னா பகுதி அமெரிக்காவுல நடக்கும். இந்த தொடர் நிச்சயமா உங்களை யோசிக்க வைக்கும், கேள்வி கேட்க வைக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT