Published : 09 Nov 2023 12:38 PM
Last Updated : 09 Nov 2023 12:38 PM
சென்னை: “வட சென்னை மக்கள் மீதான ஸ்டீரியோடைப்பை உடைக்கும் முயற்சி தான் இந்த சீரிஸ். வட சென்னை மக்கள் இப்படியில்லை என்பதைத்தான் சொல்கிறோம்” என ‘லேபில்’ இணைய தொடர் குறித்து அதன் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் தெரிவித்துள்ளார்.
ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள இந்தத் தொடர் ஹாட்ஸ்டார் ஓடிடியில் நாளை (நவ.10) வெளியாகிறது. இந்நிலையில் இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய வெப்சீரிஸின் இயக்குநர் அருண்ராஜா காமராஜ், “லேபில் என் மூன்றாவது படைப்பு ஒவ்வொன்றிலும் கற்றுக்கொண்டு வருகிறேன். இதில் என்னை ஈஸியாக வைத்துக்கொண்டவர் ஒளிப்பதிவாளர் தினேஷ். அவர் தான் எனக்காகச் சேர்த்து உழைத்தார். எனக்குக் கிடைத்த கிஃப்ட் அவர். அவருக்கு நன்றி. இந்த சீரிஸில் வேலை பார்த்த அனைவரும் என்னை மிகவும் நம்பினார்கள், எல்லோரும் சினிமாவில் சாதித்தவர்கள், அவர்கள் தரும் உழைப்பைச் சரியாக எடுத்துக்கொண்டாலே போதும்.
இந்த சீரிஸ் நன்றாக உருவாகக் காரணம், என் டைரக்சன் டீம் தான். என்னையே அவர்கள் தான் பார்த்துக்கொள்கிறார்கள். ஜெய் இந்த படைப்பின் மூலம் நண்பராகக் கிடைத்துள்ளார். இதற்கு முன் 'வேட்டை மன்னன்'-ல் அஸிஸ்டெண்டாக இருந்த போது அவர் நடிகராக இருந்தார். இப்போது அவரை இயக்கும்போது எனக்காகக் கூடுதலாக உழைத்தார். எங்கள் டீமில் நிறைய இழப்பு நேர்ந்திருக்கிறது அதைத்தாண்டி, உங்களுக்காக இந்த சீரிஸை உருவாக்கியுள்ளோம். உங்கள் கைதட்டல்களில் தான் எங்கள் மகிழ்ச்சி இருக்கிறது. உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
அவரிடம் சீரிஸில் பயன்படுத்தப்பட்டுள்ள கெட்ட வார்த்தைகள் குறித்து கேட்டபோது, “வார்த்தைகளுக்கான அர்த்தங்களை கற்பிப்பது நாம் தானே. உங்கள் வண்டியில் யாராவது இடிக்க வந்தால் என்ன வார்த்தையை பயன்படுத்துவீர்களோ அதைத்தான் பயன்படுத்தியுள்ளோம். சக மனிதர்களுக்கு வரும் கோவம் தான் அந்த வார்த்தைகள். வட சென்னை மக்கள் மீதான ஸ்டீரியோடைப்பை உடைக்கும் முயற்சி தான் இந்த சீரிஸ். வட சென்னை மக்கள் இப்படியில்லை என்பதைத்தான் சொல்கிறோம்” என்றார்.
நடிகர் ஜெய் பேசியதாவது, “பொதுவாக படவிழாக்களை டிவியில் பார்க்கும்போது, படம் பற்றி எல்லோரும் பேசுவதைப்பார்த்தால், கொஞ்சம் ஓவராகப் பேசுவதாக தோன்றும், ஆனால் இதில் வேலை செய்து, முடித்தபோது தான் அதன் அர்த்தம் புரிந்தது. மிக மிக முக்கியமான படைப்பு, அந்த உழைப்பு மிகப்பெரியது. அவ்வளவு டீடெயிலாக உருவாக்கியுள்ளார்கள். எனக்கு மிக முக்கியமான சீரிஸாக இது இருக்கும். எல்லோரும் ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT