Published : 20 Sep 2023 05:54 AM
Last Updated : 20 Sep 2023 05:54 AM
டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது, பிஜாய் நம்பியாரின் ‘காலா’ வெப் தொடர். தமிழில் ‘டேவிட்’,‘சோலோ’படங்களை இயக்கியவர் பிஜாய் நம்பியார். கருப்புப் பணம் தொடர்பான கதை என்பதால், ‘காலா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் அவினாஷ் திவாரி, நிவேதா பெத்துராஜ், அனில் சரண்ஜீத், ரோஹன் வினோத் மெஹ்ரா உட்பட பலர் நடித்திருக்கின்றனர். இதில் நடித்தது பற்றி நிவேதா பெத்துராஜிடம் பேசினோம்.
எப்படி கிடைச்சது இந்த வாய்ப்பு?
எனக்கு கொஞ்சம் பக்தி அதிகம். நான் காலபைரவர் கோயிலுக்கும் காள ஹஸ்தி கோயிலுக்கும் போயிட்டு, மும்பையில ஒரு விளம்பர பட ஷூட்டிங்குக்குப் போனேன். அப்ப வந்த வாய்ப்புதான் இந்த வெப் தொடர். அதாவது நாளைக்கு விளம்பர ஷூட்டிங். இன்னைக்கு ஒரு கால் வந்தது. ‘மும்பை வர முடியுமா? ஒரு கதை சொல்லணும்’னு சொன்னாங்க. நான் மும்பையிலதான் இருக்கேன்னு சொன்னேன். உடனே வந்தாங்க. என் முன்னால ஒரு பைலை வச்சதும், நான்அதைத் திருப்பிப் பார்த்தேன். முதல் பக்கத்திலேயே ‘காலா’ன்னு தலைப்பு இருந்தது. ஆஹா அருமையா இருக்கேன்னு வேற எதுவுமே தோணலை. மனசுக்குள்ளேயே ஓகே சொல்லிட்டேன். பிறகுதான் கதையை படிச்சுப் பார்த்தேன்.
இதுல, உளவுத்துறை அதிகாரியா நடிச்சிருக்கீங்க...
ஆமா. இந்த கதை கருப்புப் பணம்,ரிவர்ஸ் ஹவாலா பற்றி பேசற கதை.அப்பா -மகன் உறவு பற்றியும் பேசும்.நான் லீனியரா கதை சொல்லப்பட்டிருக்கும். இதுல உளவுத் துறை அதிகாரியாகவும் ஹீரோ அவினாஷ் திவாரியின் காதலியாகவும் நடிச்சிருக்கேன். ரொம்ப ஆக்ரோஷமான கேரக்டர். இதுக்கு முன்னால 2 படங்கள்ல, போலீஸா நடிச்சிருக்கேன். இதுல உளவுத்துறை அதிகாரிங்கறதால, உத்தேசமாகத்தான் அந்த கேரக்டரை பண்ணினேன். நான் என்ன பண்ணினேனோ அதைதான் அவங்களும் எதிர்பார்த்தாங்க.
இந்த வெப் தொடர்ல ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இருக்குது. ஏதும் பயிற்சி எடுத்தீங்களா?
இதுக்கு முன்னால இப்படியொருஆக்ஷன் காட்சியில நடிச்சதில்லை.ஒரு காட்சியில, ஹீரோ அவினாஷ் திவாரி, என் முகத்துல குத்தறமாதிரி நடிக்கணும். ஆனா நிஜமாகவே மூக்குல குத்திட்டாரு. சரியானவலி. ரத்தம் வந்துடுச்சு. ஷுட்டிங் ஸ்பாட் பரபரப்பாகி எல்லோரும் என்னாச்சுன்னு வந்துட்டாங்க. அப்படி ரத்தம் சிந்தி நடிச்சிருக்கேன். எல்லாம் அனுபவம் தானே.
இந்தி மொழி பிரச்சினையா இருந்ததா?
ரொம்ப கஷ்டமாயிருந்தது. ஷூட்டிங் ஸ்பாட்ல எனக்கு கையெல்லாம் வியர்க்கும். இந்த வசனத்தை சரியா பேசிடணும்னு நினைச்சுட்டே இருப்பேன். அக்கம் பக்கத்துல இருக்கிற வங்களோட பேசினா வசனம் மறந்துடும்னு யார்கிட்டயும் பேசவும் மாட்டேன். சில நேரம் கேமரா பின் பக்கமா , அதாவது முகத்துக்கு நேரா இல்லாம இருந்தா, பிட் அடிக்கிற மாதிரி கையில எழுதி வச்சு பேசிட்டே நடப்பேன். ஏன்னா, ஒரு அதிகாரியா ரொம்ப போல்டா பேசணும். அதுதான் கஷ்டமா இருந்தது.
பிஜாய் நம்பியார் இயக்கத்துல நடிச்சது பற்றி?
அவர் எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சிருக்கார். ஒவ்வொருத்தரோட பலமும் அவருக்குத் தெரியும். அதோடகதையிலயும் பெரிய ரிசர்ச் பண்ணிடுவார். ஒரு சந்தேகம் கேட்டா, அதுக்கு தெளிவான பதில் கிடைக்கும். ‘அப்புறம் சொல்றேன், கேட்டு சொல்றேன்’ அப்படிங்கற விஷயமே அவர்ட்ட இருக்காது. நான் டாப் ஹீரோக்கள் படங்கள்ல இங்க நடிச்சதில்லை. ஆனா, நான்நடிச்ச முதல் படத்துல இருந்து எல்லாத்தையும் பாலோ பண்ணியிருக்கார். அவர் இயக்கத்துல நடிச்சது நிஜமாகவே வித்தியாசமா இருந்தது.
தமிழ்ல இருந்து தெலுங்கு, அப்படியே இந்திக்குப் போயாச்சு. திரும்பவும் தமிழுக்கு வர்ற வாய்ப்பு இருக்கா?
ஏன் வரமாட்டேன்? இப்ப நான் நடிச்சிருக்கிற ‘பருகு’ங்கற தெலுங்கு வெப் தொடர் ரிலீஸ் ஆக இருக்கு. தமிழ்ல நடிச்சிட்டிருந்தபோது, சில ஹீரோக்களே, ‘ஏன் தெலுங்குல நடிக்க மாட்டேங்கிறீங்க?’ன்னு கேட்டாங்க. பிறகுதான் அங்க போனேன்.தெலுங்கு சினிமாவுல ஹீரோயின்களுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுங்கிறாங்க. அந்த ‘கம்போர்ட்’ எனக்கு பிடிச்சிருக்கு. தமிழ்ல சில படங்கள்ல நடிக்கப் பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்கு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment