Published : 25 May 2023 03:39 PM
Last Updated : 25 May 2023 03:39 PM
எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீரின் ‘நீலவெளிச்சம்’ சிறுகதையை தழுவி 1964-ல் வெளியான மலையாளத் திரைப்படம் 'பார்கவி நிலையம்'. சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் திரைப்படத்தை தற்போதைய சூழலுக்கேற்ற வகையில் ரீமேக் செய்து ஆஷிக் அபு இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது 'நீலவெளிச்சம்'. நீண்ட நாட்களாக பராமரிப்பின்றி பூட்டிக்கிடக்கும் வீடுகளில் நிறைவேறாத ஆசைகளுடன் இறந்துபோன ஆத்மாவுடன் நிதானமாக உட்கார்ந்து பேசி ஓர் உரையாடலை நடத்தியிருக்கிறார் இயக்குநர்.
முகமது பஷீரின் கதைக்கரு சிதையாமல் இப்படத்தை கவனமாக கையாண்டிருக்கிறார் இயக்குநர் ஆஷிக் அபு. கைவிடப்பட்ட வீடொன்றில் இருப்பதாக நம்பப்படும் பார்கவியுடன் எழுத்தாளர் நடத்தும் உரையாடலே அதற்கு சாட்சி. அந்த வீட்டின் எல்லா இடங்களிலும் நிழல்போல் பரவியிருக்கும் பார்கவியிடம் பேசுவது போல எழுத்தாளர் தனக்குத்தானே பேசிக் கொள்ளும் காட்சிகள், பார்கவி கதாப்பாத்திரத்தின் மீது எழுத்தாளர் கொண்டிருக்கும் பிணக்கத்தை சொல்லியிருக்கிறது. இந்தப் பிணக்கம் உருவமற்ற அந்தக் கதாப்பாத்திரத்தின் மீது பயத்தைக் குறைத்து அக்கதாப்பாத்திரத்தை அறிந்து கொள்ளும் ஆவலைத் தூண்டியிருக்கிறது. இந்த ஆவல், வைக்கம் முகமது பஷீர் அவரது கதைகளில் வரும் கதாப்பாத்திரங்களோடு எத்தனை தீர்க்கமான உரையாடலை நிகழ்த்தியிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
கடற்கரை கிராமம் ஒன்றின் ஒதுக்குப்புறமாக அமைந்திருக்கிறது பார்கவி நிலையம் என்ற பாழடைந்த பங்களா. பார்கவி (ரீமா கல்லிங்கல்) என்ற இளம்பெண்ணின் ஆவி உலவுவதாக அவ்வூர் மக்களால் நம்பப்படும் அந்த வீட்டில் வாடகைக்கு குடியேறுகிறார் எழுத்தாளர் (டொவினோ தாமஸ்) ஒருவர். தனது காதலன் சசிகுமாரின் (ரோஷன் மேத்யூ) பிரிவு தாங்காமல், பார்கவி தற்கொலை செய்துகொள்கிறாள். பார்கவியின் இந்த கதையை எழுத தொடங்கும்போது, அக்கதையில் பல மறைக்கப்பட்ட உண்மைகள் எழுத்தாளருக்கு தெரிய வருகிறது.
பார்கவி யார்? சசிகுமாரும் அவளும் எப்படி காதலர் ஆகிறார்கள்? இந்தக் காதலுக்கு பிரச்சினையாக இருப்பது யார்? சசிகுமார் எப்படி இறந்து போனார்? பார்கவி இறந்து போவதற்கான காரணம் என்ன? எழுத்தாளருக்கு இந்த உண்மைகள் எப்படி தெரிய வருகிறது? - இவற்றுக்கான தீர்க்கமான முடிவுகளே படத்தின் திரைக்கதை. வைக்கம் முகமது பஷீரின், சிறுகதையுடன் கூடுதல் திரைக்கதை எழுதியிருக்கிறார் ஹிரிஷிகேஷ் பாஸ்கரன். படத்தில் எழுத்தாளரான டொவினோ தாமஸ் தான் எழுதிய கதையை பார்கவிக்கு படித்துக் காட்டும் அத்தனையும் கவிதைகளாய் பூத்திருக்கிறது.
இந்தப் படம் ஒரு சஸ்பென்ஸ் க்ரைம் டிராமா. திகிலூட்டும் காட்சிகள் பயத்தைக் கொடுப்பதற்கு பதில் ரசிக்கும் வகையில் இருப்பதற்கு படத்தின் ஒளிப்பதிவும், இசையும், கலை இயக்கமும் உதவியிருக்கிறது. வெள்ளி நிலா, இரவு நேர கடல், செடி கொடுகள் மண்டிக்கிடக்கும் கிணறு, ஒட்டடைப்படிந்த வீடு, காற்றை வீட்டுக்குள் கூட்டிவரும் ஜன்னல்கள், டார்ச் விளக்கு, சிம்னி விளக்கு, சைக்கிள், கிராமஃபோன் என படத்தில் ஒவ்வொரு பார்க்கும் ஒவ்வொரு ஃப்ரேமையும் கிரீஷ் கங்காதாரனின் கேமரா ஒளிப்பதிவு செய்திருக்கும் விதம் கொள்ளை அழகாக இருக்கிறது.
நீல வெளிச்சத்தை ரிவீல் செய்யும் காட்சியும், ஜன்னலை திறந்துவைத்துவிட்டு சிம்னி விளக்கொளியில் முகம் பார்க்கும் கண்ணாடி முன் அமர்ந்து டொவினோ தாமஸ் கதையெழுதும் சீனும் அம்புட்டு அழகாக இருக்கிறது. இந்தப் படத்தின் ஒரிஜினல் வெர்ஷனை இயக்கியவர் ஏ.வின்சென்ட். ஒளிப்பதிவாளரான இவர் இயக்குநராக அறிமுகமான படம் 'பார்கவி நிலையம்' தான். படத்தின் ஒரிஜினல் இசையமைப்பாளர் எம்.எஸ்.பாபுராஜின் பாடல்களை கொஞ்சமும் கெடாத வகையில் ரீமிக்ஸ் செய்துள்ளனர் இசையமைப்பாளர்களான பிஜி பாலும், ரெக்ஸ் விஜயனும். அதிலும் சில காட்சிகளில், குறிப்பாக காற்றில் படபடக்கும் ஜன்னலில் வளைவு கொண்டியின் சப்தம், அலையோசை, என பல நுண்ணிய சத்தங்களின் ஒலிப்பதிவு ரசிக்க வைத்திருக்கிறது.
வைக்கம் முகமது பஷீரை படித்தும், அவரது கதைகளை கேட்டும் ரசித்தவர்கள் அவரது இளம்வயது தோற்றத்தை உருவகப்படுத்திக் கொண்டால் எப்படியிருக்கும்? அப்படித்தான் இருக்கிறார் டொவினோ தாமஸ். படம் முழுக்க வெள்ளை வேட்டியும் ஜிப்பாவும் அணிந்து கொண்டு, பீடியை ரசித்து இழுத்தபடி (புகைப்பிடித்தல் தீங்கு விளைவிக்கும்) பேனாவும் எழுத்துமாக, பார்கவிக்கான கதையின் வழியே தனது இனம்புரியாத எண்ணத்தை வெளிப்படுத்த தவிக்கும் எழுத்தாளனாக அவரது நடிப்பு அத்தனை திருப்தியாக இருக்கிறது.
ரீமா கல்லிங்கலும், ரோஷன் மேத்யூவும் 60-70களின் காலத்தை பிரதிபலிக்கும் காதலர்களாக அழகு சேர்க்கின்றனர். மதில் சுவரின் இருவேறு பக்கத்தில் இருந்தும் காதலை பரிமாறிக் கொள்ளும் காட்சிகளிலும், கண்களால் காதலை கடத்திக் கொள்ளும் காட்சிகளிலும் இருவரும் மிளிர்கின்றனர். ரீமா கல்லிங்கலின் உறவுக்காரராக வரும் ஷான் டாம் சாக்கோவும் தனது நேர்த்தியான வில்லத்தனத்தில் அசத்தியிருக்கிறார்.
தற்கொலை செய்துகொண்ட பெண்களின் ஆவிகள் வெள்ளைப் புடவையில் இறந்துபோன இடத்தைச்சுற்றியே இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் சுற்றி வரப்போகிறது என்ற லாஜிக்கான கேள்வி படம் பார்க்கும் பலருக்கு வரும். இந்தக் கேள்விக்கு 1964-ல் வெளிவந்த பார்கவி நிலையத்தின் ரீமேக்தான் நீலவெளிச்சம் என்பதுதான் பதிலாக இருக்க முடியும். இந்தப் படம் சீட்டின் நுனிக்கு பார்வையாளர்களை கொண்டு வராது, நீட்டி அமர்ந்து உட்கார்ந்து லேசான திகிலுடன் மெல்லிய புன்னகையுடன் பார்த்து ரசிக்கவைக்கும் ஸ்லோ சஸ்பென்ஸ் மெலோ டிராமா. கடந்த ஏப்ரல் மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் மே 23-ம் தேதி முதல் அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT