Published : 18 May 2023 03:49 PM
Last Updated : 18 May 2023 03:49 PM
நகர்ப்புற காதலையும் அதைச் சுற்றி நடக்கும் சிக்கல்களையும் பேசும் ‘மாடர்ன் லவ்: சென்னை’ ஆந்தாலஜி தொடர் இன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது. இதில் மூன்றாவது படமாக இடம்பெற்றிருப்பது கிருஷ்ணகுமார் ராம்குமாரின் ‘காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்கற எமோஜி'.
சிறு வயது முதல் டிவியில் காதல் படங்களாக பார்த்து சினிமா பைத்தியம் முற்றி அதில் வருவது திகட்ட திகட்ட காதலித்தே தீர வேண்டும் என்ற லட்சியத்துடன் திரிகிறார் மல்லிகா (ரிது வர்மா). சினிமாவில் குறிப்பாக தமிழ் காதல் படங்களில் வரும் லூசு ஹீரோயின் போல தன்னை கற்பனை செய்து கொண்டு தனக்காக காதலைத் தேடுகிறார். பள்ளி வாழ்க்கையில் ஒரு காதல், கல்லூரி வாழ்க்கையில் ஒரு காதல் என அவரது அடுத்தடுத்த காதல்கள் தோல்வியை தழுவுகின்றன. இறுதியில் தனது லட்சியத்தை நாயகி அடைந்தாரா என்பதற்கான விடையே ‘காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்கற எமோஜி'.
படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை ரிது வர்மாவை சுற்றியே கதை நகர்கிறது. காதலை தேடித் திரியும் பெண்ணின் பார்வையிலிருந்து பேசும் ‘ஓம் ஷாந்தி ஒஷானா’ டைப் கதை. எனினும் ஒரு திரைப்படத்துக்கு தேவையான அழுத்தமான பாத்திரப் படைப்புகளோ, திரைக்கதையோ இல்லாமல் தனித் தனி காட்சிகளின் தொகுப்பு போல நகர்கிறது. பலவீனமான காட்சியமைப்புகளால் பல இடங்களில் கைகள் ஃபார்வேர்டு பட்டனைத் தேடுகின்றன. படம் முழுக்க வரும் கவுதம் மேனன் படங்கள் உள்ளிட்ட பல படங்களின் ரெஃபரென்ஸ் ஐடியாக்கள் வித்தியாசமான முயற்சி என்றாலும், அவை படத்தின் ஓட்டத்துக்கு எந்த விதத்திலும் உதவவில்லை.
மல்லிகாவாக ரிது வர்மா பொருந்திப் போகிறார். ஒரு சில இடங்களில் ஓவர் ஆக்டிங் உணர்வு எழுவதை தவிர்க்க முடியவில்லை. படத்தில் உள்ள மற்ற கதாபாத்திரங்கள் அனைவரிடமும் ஏதோ ஒரு செயற்கைத்தனம் துருத்திக் கொண்டு தெரிகிறது. படத்தின் இறுதியில் வரும் வைபவ் மட்டும் விதிவிலக்கு. ஜி.வி.பிரகாஷின் இசையும் பாடல்களும் கவனிக்க வைக்கின்றன.
தமிழ் சினிமாவில் ஹீரோயின்களுக்கு காதல் தோல்வி பாடல்கள் இல்லாதது குறித்து நாயகி பேசுவது, காதலியிடம் நீங்க என்ன ஆளுங்க என்று காதலன் கேட்பது போன்ற ஒரு சில காட்சிகள் ரசிக்க வைத்தாலும், ஒரு முழு படமாக ஈர்க்க தவறுகிறது ‘காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்கற எமோஜி'.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT