Published : 23 Jan 2023 05:49 PM
Last Updated : 23 Jan 2023 05:49 PM
சான் பிரான்சிஸ்கோ: வருவாய் மற்றும் சந்தாதாரர்களை அதிகரிக்கும் நோக்கில் விளம்பரத்துடன் கூடிய கட்டண சந்தாவை கடந்த அக்டோபர் மாதம் சில நாடுகளில் அறிமுகம் செய்திருந்தது நெட்ஃப்ளிக்ஸ். இந்நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் லாக்-இன் பாஸ்வேர்டை பயனர்கள் பிறரிடத்தில் பகிர்வது விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தெரிகிறது. இதனை அந்நிறுவனத்தின் புதிய நிர்வாகிகள் உறுதி செய்துள்ளனர்.
அமெரிக்க நாட்டின் ஓடிடி ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃப்ளிக்ஸ், உலகம் முழுவதும் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் வெப் சீரிஸ், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் மாதிரியான கன்டென்டுகளை ஸ்ட்ரீம் செய்து வருகிறது. 1997-ல் நிறுவப்பட்ட இந்நிறுவனம் கடந்த 2007 முதல் ஸ்ட்ரீமிங் சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு அதன் சந்தாதாரர்களை பெருமளவு இழந்தது.
நெட்ஃப்ளிக்ஸ் லாக்-இன் பாஸ்வேர்டை பிறருடன் பயனர்கள் பகிர்வது கட்டுப்படுத்தப்படும் என கடந்த ஆண்டு அந்நிறுவனம் அறிவித்தது. படிப்படியாக பல்வேறு நாடுகளில் இது நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என அப்போது சொல்லப்பட்டது. இந்த சூழலில் இது விரைவில் உலகம் முழுவதும் அமலுக்கு வர உள்ளதாக புதிய நிர்வாகிகளான கிரெக் பீட்டர்ஸ் மற்றும் டெட் சரண்டோஸ் தெரிவித்துள்ளனர். இதில் இந்தியாவும் அடங்கும் என தெரிகிறது.
அதனால், இந்தத் தளத்தில் கன்டென்ட்டுகளை பார்க்க பயனர்கள் கட்டணம் செலுத்துவது கட்டாயமாகிறது. இருந்தாலும் இதற்கான கட்டணம் எவ்வளவு என்பது உறுதிபட தெரியவில்லை. உத்தேசமாக இந்தத் தொகை ரூ.250 வரையில் இருக்கலாம் என தகவல். வரும் மார்ச் முதல் இது நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.
இதன் மூலம் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் தங்களுக்கு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் ஒரு பகுதியாகவே பாஸ்வேர்ட் பகிர்வு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை எப்படி அந்நிறுவனம் கண்காணிக்க உள்ளது என்பது குறித்த விளக்கம் ஏதும் இல்லை. ஐபி அட்ரஸ், டிவைஸ் ஐடி மற்றும் அக்கவுண்ட் ஆக்டிவிட்டி மூலம் இது கண்காணிக்கப்படும் எனத் தெரிகிறது.
நெட்ஃப்ளிக்ஸ் சந்தாதாரர்களை அதிகரிக்கக்கூடிய நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் என அந்நிறுவனம் கருதுகிறது. இந்தியாவில் ரூ.149, ரூ.199, ரூ.499 மற்றும் ரூ.649 என நெட்ஃப்ளிக்ஸ் சந்தா உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT