Last Updated : 01 Jan, 2023 07:17 PM

2  

Published : 01 Jan 2023 07:17 PM
Last Updated : 01 Jan 2023 07:17 PM

ஓடிடி திரை அலசல் | A YAK IN THE CLASSROOM - பூடான் திரைப்படம்: மலையுச்சி கிராமத்தின் ஒரு மெல்லிய ராகம் 

உலகின் பார்வையிலிருந்து சற்றே ஒதுங்கிய பூடான் நாட்டிலிருந்து வந்துள்ள ஒரு வித்தியாசமான படம் இது. படத்தின் பெயரோ 'ய யாக் இன் தி கிளாஸ்ரும்'. அதாவது 'வகுப்பறையில் ஒரு எருமை மாடு'. வகுப்பறையில் சாதாரணமாக படிக்காத மாணவனை ''எருமைமாடு'' என்று ஆசிரியர் திட்டுவார். அல்லது ''எருமை மேய்க்கத்தான் லாயக்கு'' என்பார். அந்த அர்த்தத்திலா இந்த படத்தின் தலைப்பு உள்ளது என்று பார்த்தால் நிச்சயம் இல்லை.

இது உண்மையிலேயே வகுப்பறையில் ஓரமாக எருமைமாடு ஒன்று கட்டிப்போடப்பட்டிருப்பதைத்தான் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. வெளியூரிலிருந்து ஒரு புதிய ஆசிரியர் கிராமத்திற்கு வருகிறார் என்று ஆரம்பிக்கும் வழக்கமான ஒரு கதைதான் இது வென்றாலும் அந்தப் படங்களுக்கும் இதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. மின்சாரம் இல்லாமல் வெளி உலக வாழ்க்கையில் என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்றே தெரியாத சில மலைக்கிராமங்கள் பூடானில் இன்றும் உள்ளதை எடுத்துக்காட்டுகிறது இத்திரைப்படம்.

டோர்ஜி உக்யென் என்ற இருபது வயது இளைஞர். அவர் தலைநகர் திம்புவில் தனது பாட்டியுடன் வசிப்பவர். அவருக்கு இசையில் மிகுந்த ஆர்வம் உண்டு. ஆஸ்திரேலியாவுக்கு சென்று பெரிய பாடகராக வரவேண்டுமென்ற ஆசையும் அவருக்கு இருக்கிறது. இதற்கிடைப்பட்ட காலங்களில் அவர் ஆசிரியர் பயிற்சியும் பயின்றுவருகிறார்.

இந்நிலையில்தான் பயிற்சிக்காலம் முடிய இன்னும் ஓராண்டு இருக்கும்நிலையில் ஒப்பந்தத்தின்படி அவர் ஆறுமாதம் தொலைதூர கிராமத்தில் பள்ளி மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க அனுப்புகிறது அரசாங்கம். தொலைதூரம் என்றால் சாதாரண தொலைதூரம் அல்ல... உலகிலேயே மிகவும் தொலைதூர கிராமம் அது. அந்த கிராமம் உள்ள இடம் உயரம், 15 ஆயிரம் அடி...உயரத்தில். அதனால்தான் அவர் மறுக்கிறார். குளிர் அதிகம் இருக்கும் என்று இவர் கூற குளிர்காலத்தில் பள்ளி விடுமுறை விடப்படும் அப்போது நீங்கள் திரும்பிவிடலாம் என உயர் அதிகாரி விளக்கங்கள் அளித்தபிறகு கட்டளையை மறுக்கமுடியவில்லை. வேண்டா வெறுப்பாக ''சரி'' என்று ஏற்றுச் செல்கிறார்.

உக்யென் மனவருத்தத்துடன் மலைகளின் மேல் 8 நாட்களில் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்கிறார். அவர் மலைக்குச் சென்ற அனுபவம் எப்படிபட்டதாக இருந்தது, பிடித்ததா? அந்த ஊர் பள்ளியில் அவர் ஒழுங்காக பாடம் நடத்தினாரா என்பதை இத்திரைப்படம் ஒரு அழகிய வண்ண ஓவியமாக தீட்டப்பட்டுள்ளது.

அந்த கிராமத்தில் அவர் தங்குவதற்காக மரப்பலகைகள் பதிக்கப்பட்ட கரடுமுரடான மண்வீட்டைத்தான் காட்டுகிறார்கள். அங்கு பல வீடுகளும் அப்படித்தான். மின்சாரம் இல்லை. வீட்டுக்குள் தண்ணீர் குழாய் இணைப்பு இல்லை. பள்ளியில் மாணவர்களுக்கு எழுதிக்காட்ட கரும்பலகையும் இல்லை. ஒரு கட்டத்தில் அவர் பாட்டு கேட்டுக்கொண்டிருந்த அவரது ஹெட்ஃபோன்கள் பேட்டரியும் தீர்ந்துவிட கொஞ்சநஞ்சம் மகிழ்ச்சியும் துண்டிக்கப்பட்டதாக வருந்துகிறார். 'திரும்பிப் போய்விடலாமா' - என்றுகூட நினைக்கிறார்.

ஹெட்போனை தூக்கியெறிந்த பிறகுதான் உண்மையான இயற்கை ஒலிகளில் மனம் லயிப்பதை உணர்கிறார். மலைக்குருவிகள், பறவைகளின் மென்மையான கீச்சிடல்கள், ரீங்காரங்கள் முதல் எருமை மேய்ப்பவர்கள் அவர்கள் உலாவும்போது பாடும் நாட்டுப்புற பாடல்கள் வரை கேட்கத் தொடங்குகிறார். அவருக்கு நண்பர்களாகிவிடும் கிராமத்து அண்டை வீட்டுக்காரர்கள் ஆஷா, மிச்சென், பாட்டியிடம் வளரும் பெம் ஜாம் எனும் மாணவி, அவள் தன்னை மாணவர்களின் கேப்டன் என அழைத்துக்கொள்வதோடு, புதிய ஆசிரியருக்கு பள்ளியின் சின்னச்சின்ன நடைமுறைகளை அழகுற எடுத்துச்சொல்லும் பொறுமை, குழந்தைகளின் அன்பு, அறையை வெப்பமாக்கிக்கொள்ள சாணம் தேடி மலைப்பாறைகளின் பல்வேறு பகுதிகளில் செல்லும்போது அங்கு காணும் இமய மலைச்சிகரங்களின் உச்சியழகு.... வெண்பனி மூட்டம், அங்கே ஒரு அழகிய பெண்குரலில் அந்த இனிமையான பாடல்... பிறகு அவருக்கும் கிராமிய பாடல்களை சொல்லித்தரும் கிராமத்தின் சிறந்த பாடகர்களில் ஒருவரான சால்டடன் என்ற பெண், அறையில் இரவை வெப்பமாக்கிக்கொள்ள சாணம் தேடி அலையாமல் வீட்டிலேயே கிடைக்க சால்ட்டன் என்ற பெண் கொண்டு வந்து பள்ளியில் கட்டிப்போட்டிருக்கும் எருமை மாடு, என அவர் கிராமத்தின் பல்வேறு வகைகளிலும் மனதை பறிகொடுக்கிறார். ஒரு கட்டத்தில் அவர் இங்கேயே தங்கிவிடலாம் என்று நினைக்கும்போதுதான் குளிர்காலம் தொடங்கிவிடுகிறது. குளிர்காலம் தோறும்பள்ளி மூடப்பட்டுவிடும். அவர் ஊர் திரும்பியே ஆக வேண்டும்.

இயக்குநர் பாவோ சோய்னிங் டோர்ஜி நண்பர் ஒருவர் ஆசிரியராக சில காலம் இருந்த அந்த கிராமத்தைப் பற்றி அவரிடம் கேட்டறிந்ததை வைத்து இக்கிராமத்திற்கு வந்து இப்படத்தை எடுத்துள்ளார். வெளியிலிருந்து வருபவர்களுக்கு அக்கிராம மக்கள் அளிக்கும் விருந்தோம்பல், மேய்ச்சலை பிரதான தொழிலாகக் கொண்ட எண்ணி 56 பேர் மட்டுமே உள்ள கிராம மக்களின் உண்மையிலேயே மிகவும் எளிமையான பண்புநலன்கள், மின்சாரம், சினிமா, டிவி, செல்போன் என்றால் என்னவென்றே தெரியவில்லையென்றாலும், நாடோடி பாடல்களைப் பாடியவண்ணம் மாடு மேய்க்கும் அவர்கள் இசையார்வம், அறையை சூடாக்கிக்கொள்ள ஒரு ஓரமாக அமைக்கப்பட்டுள்ள கணப்படுப்பில் மாடுகளின் காய்ந்த சாணத்தைக்கொண்டு நெருப்பை மூட்டி இரவின் குளிர்ச்சியை எதிர்கொள்வது போன்ற பல முக்கிய பழக்கவழக்கங்களை இப்படத்தில் சேர்த்துள்ளார். உண்மையான மக்களையே அவர்கள் வாழ்க்கைப் பின்னணி, அவர்கள் பிரச்சினைகளை கதைபோக்கில் சேரும்விதமாக பேசவைத்து இப்படத்தில் தோன்ற வைத்துள்ளார். கிராமத்தில் மின்சாரம் இல்லாததால் சூரிய சக்தியின் துணைகொண்டே இயல்பான வெளிச்சப் பின்னணியில் மொத்தப் படத்தையும் எடுத்துள்ளார் இயக்குநர் பாவோ சோய்னிங் டோர்ஜி.

இப்படத்தில் வகுப்பறையில் ஆசிரியர் பாடம் எடுக்கும்போது ஒரு காட்சி முக்கியமானது. அதாவது ''ஏ ஃபார் ஆப்பிள்'', ''பி ஃபார் பால்'' (Ball) இதையெல்லாம் என்னவென்று கேட்கிறார். மாணவர்களும் சொல்கிறார்கள். ''சரி சி ஃபார் கார்'' என்கிறார். ''கார் என்றால் என்ன தெரியுமா'' என்று கேட்கிறார்... ''தெரியாது'' என்கிறார்கள். ''கார் எப்படியிருக்கும் தெரியாது யாராவது பார்த்திருக்கிறீர்களா'' என்று கேட்கிறார்கள். அனைத்து மாணவர்களும் ''தெரியாது நாங்கள் பார்த்ததில்லை'' என்கிறார்கள். ஒரு கணம் சுதாரித்துக்கொண்டு ''சரி, சி ஃபார் கவ்'' (Cow) என்று கூறிவிட்டு ''கவ் னா என்ன தெரியுமா'' என்று கேட்கிறார். ''தெரியும் கவ்னா மாடு'' என்கிறார்கள். ''சரி மாடு என்ன கொடுக்கும்'' என்று அவர் கேட்க ''கவ் பால் கொடுக்கும்'' என்று அனைத்து மாணவ, மாணவிகளும் உற்சாகமாக குரல் எழுப்ப அப்போது அந்த புதிய ஆசிரியர் மட்டுமல்ல நாமும் அம்மக்களின் உண்மையான வாழ்வாதாரத்தை, அவர்கள் வெளிஉலகிலிருந்து எவ்வளவு துண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் புரிந்துகொள்கிறோம்.

முதல்நாள் அன்று தூங்கி எழுந்திருக்க காலதாமதம் ஆனநிலையில் 9 மணிக்கு வந்து எழுப்பும் பெம் ஜாம் என்ற மாணவி தான் தான் பள்ளியின் கேப்டன் என்கிறார். மேலும் பள்ளி வழக்கமாக 8.30க்கு தொடங்கிவிடும்... என்று கூறி சிரிக்கிறார். அந்த பூஞ்சிரிப்பில் நம் மனங்கவரும் அச்சிறுமிக்கு உண்மையிலேயே சினிமா என்றால் என்னவென்று தெரியாது. மேலும் தன்னைப்பற்றி ஆசிரியர் அறிமுகப்படுத்திக்கொள்ளும்போது, தன் தாய் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாகவும் தந்தை ஒரு குடிகாரர் என்றும் பாட்டிதான் வளர்க்கிறார் என்று கூறுவதெல்லாம் அப்பெண்ணின் உண்மையான பின்னணியே ஆகும். இப்படித்தான் அனைவரையும் இயக்குநர் பயன்படுத்தியுள்ளார்.

இப்படத்தில் இன்னொரு சிறந்த காட்சி... சால்ட்டன் என்ற பெண் மலைப்பகுதியில் பள்ளி ஆசிரியருக்கு தான் பாடும் பாடல்களை சொல்லித்தருகிறார். இவரும் ஒரு பாடகர் என்பதே நண்பர்கள் அவருக்கு அனுப்பிவைத்த கிதார் வைத்து மாணவர்களுடன் நடனமாடி பாடும்போதுதான் பின்னர் தெரியவருகிறது. மாடு மேய்க்க வந்த இடத்தில் தானே இனிய பாடல்களை பாடித் திரியும் அப்பெண்ணின் மீது லேசான ஈர்ப்பும் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் குளிர்காலம் வர இவர் புறப்படும் நாளும் வருகிறது. அவர்கள் இம்முறை குறுக்கே கழிகள் கட்டப்பட்டுள்ள அப்பெண் அந்தப்பக்கம், இவர் இந்தப் பக்கம் நின்றபடியே பேசுகிறார்கள். ''நான் ஊருக்கு கிளம்பறேன். உங்க பாடல்களுக்கு நன்றி. மாணவர்கள் இப்போதுதான் எழுத படிக்க கற்றுக்கொண்டுள்ளார்கள். இந்த நேரத்தில் நான் இவர்களை பிரிந்து செல்வது வருத்தமாக உள்ளது'' என்பார். அதற்கு அப்பெண்மணி ''குளிர்காலம் முடிந்தபிறகு வேறு ஆசிரியரை இப்பள்ளிக்கு அனுப்புவார்கள். அப்போது அந்த மாணவர்கள் மேலும் நன்கு பயில்வார்கள் வருத்தம் வேண்டாம்..'' என்று சிரித்தபடியே எந்த சலனமுமின்றி பேசுவார்....

பிரிந்து செல்லும் ஆசிரியருக்கு மக்கள் அவருக்கு முதல் நாள் அன்று அளித்ததைப் போல அரிசி ஒயின் விருந்தளித்து விடை அளிக்கிறார்கள். அவர் அனைவரிடமும் வருத்தத்தோடு விடைபெற்று செல்கிறார். பாதிவழியில் மாடுமேய்க்கும் சால்ட்டன் என்ற பெண் ஓடிவருகிறார். வெண்பட்டு அங்கி ஒன்றை அவருக்கு பரிசளிக்க அதைப் பெற்றுக்கொண்டு மிக்க நன்றி என்று கூற அவர் சென்றுவிடுவார். இவர் மனதிலிருந்து எதையோ இழந்ததுபோல வரும்போது நடைபயண இடத்திலிருந்து அழைத்துவந்த உள்ளூர்வாசிகளின் துணையோடு அதேபோல வந்த வழியே மலை நடுவே உள்ள ஒரு சிறிய நகரத்தை நோக்கி மலையிலிருந்து இறங்கிச் செல்வார்.

சிலநாட்களில் தன்விருப்பப்படியே ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் ஆசிரியர் அங்கு பொழுதுபோக்கு மன்றங்களில் பாடும் பாடல்களை மக்கள் அலட்சியமாகக் கேட்க... சிறிது நேரம் நிறுத்திவிட்டு லுனானா கிராமத்தின் சால்ட்டன் பெண்ணின் கிராமிய நாடோடிப் பாடல்களை பாடத் தொடங்குகிறார்... ரசிகர்கள் ஆரவாரித்து வரவேற்கின்றனர்.

இப்படம் வெளிவந்த பிறகு பூடான் அரசு இந்த ஊரை பற்றி கேள்விப்பட்டு கிராமத்திற்கு மின்சாரம் வழங்கியுளளது. இப்படத்தை சிறந்த ஆஸ்கருக்கான வெளிநாட்டு விருதுக்காக பூடான் தேர்வு செய்து அனுப்பியது.... உலகின் பல்வேறு விருதுகளையும் இப்படம் பெற்றுவருகிறது. சில்லிடும் அழகிய சிறகுகளுடன் தாழப்பறந்துசெல்லும் மழைக்கால குருவிகளின் மெல்லிய கீச்சிடல்களைப்போல மலையுச்சி கிராமத்தின் மெல்லிய ராகமாய் மனதில் நீங்காமல் நிறைந்துவிட்டது 'லுனானா ய யாக் இன் தி கிளாஸ்ரும்' திரைப்படம். இத்திரைப்படம் தற்போது அமேஸான் பிரைமில் பார்க்கக் கிடைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x