Published : 30 Nov 2022 02:57 PM
Last Updated : 30 Nov 2022 02:57 PM
போலீஸ் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க ‘கம்பெனி’ படத்தில் நடிகர் மோகன்லாலின் நடிப்பின் நுட்பங்களை பயன்படுத்த முயற்சித்திருக்கிறேன் என நடிகர் விவேக் ஓப்ராய் தெரிவித்துள்ளார்.
‘தாராவி பேங்க்’ என்ற வெப் தொடரில் பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடித்துள்ளார். எம்எக்ஸ் ஒரிஜில் இணைய தொடரான இது மும்பையின் தாராவி பகுதியில் நடைபெறும் குற்றச்செயலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ள விவேக் ஓப்ராய் தனது கதாபாத்திரம் குறித்து பேசுகையில், நடிகர் மோகன்லாலின் நடிப்பின் நுணுங்கங்களை இந்த கதாபாத்திரத்திற்காக பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விவேக் ஓப்ராய் பேசுகையில், "சிலருடைய நடிப்பு மட்டும்தான் உங்கள் மனதில் வாழ்நாள் முழுக்க பதிந்திருக்கும்.
'கம்பெனி' என்னுடைய முதல் படமாக இருந்தாலும் அதுதான் நான் பல விஷயங்களைக் கற்றுக் கொண்ட களம். அஜய் தேவ்கனில் இருந்து மோகன்லால் வரையும் பல சிறந்த நடிகர்களுடன் வேலை பார்த்து நான் நிறையக் கற்றுக் கொண்டேன். உண்மையச் சொல்ல வேண்டும் என்றால் 'தாராவி பேங்க்' வெப் தொடரில் நடிப்பதற்காக வீரபள்ளி ஸ்ரீனிவாசன், ஐபிஎஸ் மும்பையின் இணை கமிஷனராக மோகன்லால் சார் நடித்தக் காட்சிகளை நான் மீண்டும் பார்த்தேன். ஒவ்வொரு காட்சிகளையும் அவர் அதில் எப்படி அணுகினார் என்பது எனக்குத் தெளிவாக நினைவில் உள்ளது. மோகன்லால் அந்த நடிப்பு அவருடைய தேர்ந்த அனுபவத்தில் இருந்து வந்ததால் எந்தவொரு சிரமமும் இல்லாமல் அவர் சிறப்பாக நடித்திருந்தார்.
அவர் அந்த கதாபாத்திரத்தை அணுகிய விதம், அதற்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டது, படப்பிடிப்பில் அவர் நடந்து கொண்ட விதம் என எல்லா விஷயங்களுமே எனக்கு நினைவில் இருக்கிறது. அவருடைய சில நுட்பங்களை நானும் இதில் பயன்படுத்த முயற்சி செய்திருக்கிறேன். ஏனெனில், மும்பை போலீஸ் ஃபோர்சில் உள்ள பலரும் எனக்குத் தெரியும். மேலும் அவர்களுடைய வழிகாட்டுதலும் எனக்கு உதவியாக இருந்தது. உண்மையில் இதில் கடினமான ஒரு விஷயம் என்னவென்றால், சரியான விதத்தில் நம்பும்படியாக என் நடிப்பை வெளிப்படுத்துவது, அது உயிரோட்டமாக திரையில் கொண்டு வருவது போன்ற விஷயங்கள்தான். மோகன்லால் போல அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறேன் என நம்புகிறேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT