Published : 28 May 2022 07:58 PM
Last Updated : 28 May 2022 07:58 PM
போத்தனூர் தபால் நிலையத்துக்கான பணத்தை மீட்டு சேர்க்கும் முயற்சிக்கு இடையில் அரங்கேறும் 'த்ரில்லர்' சம்பவங்களே படத்தின் ஒன்லைன்.
1990-களில் நிகழ்கிறது கதை. கோயம்புத்தூர் மாவட்டம் போத்தனூரில் உள்ள தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக இருக்கிறார் வெங்கட் ராமன். அவரது மகன் பிரவீன் கம்பியூட்டர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு தொழில் செய்ய வங்கிகளில் லோனுக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
அந்தக் காலக்கட்டத்தில் மக்கள் தங்கள் பணத்தை தபால் நிலையங்களில் செலுத்துவது வழக்கம். அந்த வகையில், போத்தனூர் தபால் நிலையத்திற்கு வந்த மக்களின் பணம், பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக அருகிலுள்ள வங்கியில் செலுத்தப்பட்டு பாதுகாக்கப்படும்.
இப்படியான நடைமுறை பின்பற்றபடும் வேளையில், ஒருநாள் போத்தனூர் தபால் நிலையத்துக்கு வழகத்துக்கு அதிகமான பணம் வர, அந்தப் பணத்தை அவர்கள் வங்கியில் செலுத்த மறந்துவிடுகின்றனர். இதனிடையே, காணாமல் போகும் அந்தப் பணத்தை யார் திருடினார்கள்? எப்படி திருடினார்கள்? - இவை மட்டுமல்லாமல், அதை வெங்கட்ராமனின் மகன் பிரவீன் எப்படி கண்டுபிடித்தார் என்பதுதான் 'போத்தனூர் தபால் நிலையம்' படத்தின் கதை. இந்த படம் ஆஹா ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.
இந்தப் படத்தை எழுதி, இயக்கி, நடித்துள்ளார் பிரவீன். வெளிநாட்டில் வேலை பார்த்து கோயம்புத்தூர் திரும்பிய வெளிநாட்டு மாப்பிள்ளை கெட்டப்புக்கு பொருந்தி போகிறார். ஆனால், நடிப்பில் அவர் கடக்க வேண்டிய தூரம் நிறையவே இருக்கிறது. கோபம், காதல், காமெடி, ஆக்ஷன் காட்சிகளில் அவர் முகத்தில் காணப்படும் உணர்ச்சிகளின் வறட்சியை திரையில் காட்டிக்கொடுக்கிறது.
பிரவீனின் அப்பாவாக நடித்திருக்கும் ஜெகன் கிரிஷ் நடிப்பில் மிரட்டுகிறார். நம்மில் ஒருவராக, நம் பக்கத்துவிட்டு அங்கிளைப்போல காட்சி தருவதால், அவரது வருத்தம், கவலை, நம்மை எளிதில் ஆட்கொண்டுவிடுகிறது. நாயகியாக வரும் நடிகை அஞ்சலி ராவை எங்கே சென்றாலும் செட் பிராபர்டி போல அழைத்துச் செல்கிறார்கள். பிரச்சினைக்குரிய இடங்களில் மட்டும் பெண் என்பதால் விலக்கிவிடப்படுகிறார். காமெடியன் என்ற பெயரில் வரும் வெங்கட் சுந்தரின் கதாபாத்திரத்தை எழுதிய விதத்தில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும் காமெடியை சேர்த்திருந்தால் ரீச் ஆகியிருக்கும்.
1990-களில் பயன்படுத்தப்பட்ட பேனா தொடங்கி, நியூஸ் பேப்பர், ரேடியா, பணம் என அந்தக் காலக்கட்டத்தை கண்முன் நிறுத்தியதன் மூலம் கலை ஆக்கத்தின் மெனக்கெடலை புரிந்துகொள்ள முடிகிறது. கதைக்களமும், பரிச்சயமில்லாத நடிகர்களும், படமாக்கப்பட்ட விதமும் படத்திற்கு பலம்.
அதேபோல, போத்தனூர் தபால் நிலையம், அதற்கு கொடுக்கப்பட்ட டீடெய்லிங் அந்தக் காலக்கட்டத்தை கண்முன் நிறுத்துகிறது. படத்தில் வரும், வங்கி மேனேஜர் கைவிரல் சூப்புவதை, நாயகன் வெளியில் சொல்வதால் லோன் மறுக்கப்படுகிறது என்ற காரணத்தை கடைசிவரை ஜீரணிக்க முடியவில்லை. லோன் மறுக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டு இந்தக் காட்சியை பொருத்தியிருப்பதாகத்தான் பாரக்க முடிகிறது.
ரெட்ரோ எஃபெக்ட் மூலமாக சில காட்சிகள் வித்தியாசமாக முயன்றிருந்தாலும், அது இயக்குநருக்கு சரிவர கைகூடவில்லை. குறிப்பாக த்ரில்லர் படத்தில் வரும் காமெடி ட்ராக்குகள் படத்தின் நகர்வுக்கு பெரிதும் உதவும். 'சூதுகவ்வும்' 'ஜில் ஜங் ஜக்' படங்கள் காமெடி ட்ராக்குகளுடன் கூடிய விறுவிறுப்பால் ரசிக்க வைக்கும். இந்தப் புள்ளியில் 'போத்தனூர் தபால் நிலையம்' தேங்கி விடுகிறது. நகைச்சுவை காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படம் இன்னுமே ரசிக்க வைத்திருக்கும்.
தவிர, படத்தில் கொலை, கொள்ளை சம்பவங்களில் காவல்துறையின் நீடித்த மௌனம், யூகிக்ககூடிய காட்சிகள், லாஜிக் ஓட்டைகள், படத்திற்கு மைனஸ். விறுவிறுப்பை சுவாரஸ்யத்துடன் கூட்டியிருக்கலாம். சில இடங்களில் நாடக பாணியில் சொல்லப்பட்ட, ஒரு நீண்ட குறும்படத்துக்கான உணர்வும் எழுவதை தவிர்க்க முடியவில்லை. சுகுமாறன் சுந்தரின் கேமரா புதிய கோணங்களின் மூலம் சில இடங்களில் கவனிக்க வைக்கிறது. அதேபோல, படத்தின் பின்னணி இசை, எடிட்டிங் படத்திற்கு பலம் சேர்க்கிறது.
மொத்தத்தில் வித்தியாசமான முயற்சிக்கு பாராட்டுகள் என்றாலும், திரைக்தையில் அந்த வித்தியாசத்தையும், சுவாரஸ்யத்தையும் கூட்டியிருந்தால், 'போத்தனூர் தபால் நிலையம்' கவனத்திற்குரிய படைப்பாக மாறியிருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment