Last Updated : 23 Apr, 2022 10:26 PM

 

Published : 23 Apr 2022 10:26 PM
Last Updated : 23 Apr 2022 10:26 PM

தெறிப்புத் திரை 3 | Cobalt Blue - அன்பும் துயரும் பிரிக்க முடியாதவை, தன்பாலின ஈர்ப்பிலும்!

அதுவரை அந்த அறையில் தேங்கியிருந்த நீல நிறம் கரைந்து ஒழுகுகிறது. அது பிரிந்துபோன உறவு ஒன்றின் நீர்த்துப் போன தடத்தின் சாயல். நீலம் எப்போதும் ஓர் அமைதியின் வண்ணம். இனிமையான தருணங்களை வெளிப்படுத்தும் நிறம். அந்த இனிமையான தருணங்கள் நீராகக் கரைவதை காட்டும் அந்த ஃப்ரேம்கள் அதி அற்புதமானவை. 'கோபால்ட் ப்ளூ' (Blue movie) படமும் அப்படித்தான். அமைதியான நதி ஒன்றின் மீது விழுந்த நிழலின் இல்லாமையை பேசுகிறது. விடியா இரவொன்றில் பாய்ச்சப்பட்ட ஒளி, கணநேரம் கடந்து வந்த திசைக்கே திரும்பியதும் சூழும் இருளைப் பற்றிய படம், நெட்ஃப்ளிக்ஸில் காணக் கிடைக்கிறது.

'கோபால்ட் ப்ளூ' பேசும் உறவு வழமையானதல்ல. அது ஹார்மோன் மாற்றத்தினால் எழுந்த உணர்ச்சிகளின் பிரதிபலிப்பு. பாலுணர்வின் பரிமாணத்தை பற்றிய திரை அனுபவம். இந்த உலகம் எப்போதும் வழமையானவர்களுக்கு மட்டுமனதல்லவே! அது வழமை தவறியவர்களுக்கும் சேர்த்துத்தான். வழமை தவறியதற்கான குற்றச்சாட்டுகளை அவர்கள் மீது வைப்பது முற்றிலும் நியாயமற்றது.

'பாவக்கதைகள்' ஆந்தாலஜியில் வரும் பாடல் ஒன்றில், 'என்ன கொற எம்பொறப்பில், அத்தனைக்கும் நான் பொறுப்பா?' என்ற வரி அழுத்தமாக எழுதப்பட்டிருக்கும்.

உண்மையில் செய்யாத தவறுக்கான பழியையும், அவதூறையும் சுமப்பவர்களில் வலிகள் இங்கே அதிகம் பதிவு செய்யபட வேண்டிய தேவை இருக்கிறது. அந்த வகையில் தன்பாலின ஈர்ப்பாளர்களின் உறவுச் சிக்கலைப் பற்றி பேசும் படம் தான், 'கோபால்ட் ப்ளூ'. நாவலைத் தழுவி அதே பெயரில் எடுக்கப்பட்ட இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கவனம் ஈர்க்கிறது.

தனாய் (நீலே மெஹெண்டலே) அவரது தங்கை அனுஜா (அஞ்சலி சிவராமன்) இருவரும் தங்களது வீட்டுக்கு வாடகைக்கு வரும் பிரதீக் பாபருடன் காதல் வயப்படுகின்றனர். இறுதியில் இருவரையும் விட்டுவிட்டு மாயமாகிவிடுகிறார் பிரதீக் பாபர். அதற்கான காரணம் எதுவும் சொல்லப்படவில்லை. அது படத்தை பாதிக்கவுமில்லை.

எழுத்தாளனாக வேண்டும் என்ற கனவோடு இருப்பவன் தனாய். தனிமை விரும்பியான அவன் தனக்கான சுதந்திரத்தைத் தேடி அலைகிறான். வீட்டிலேயே கூட அவனுக்கென தனி அறை எதும் ஒதுக்கப்படவில்லை. தான் படிக்கவும், எழுதவும், விரும்பியதை செய்யவும் அவனுக்கு வீட்டிலேயே கூட முழுச் சுதந்திரமில்லை. இதை சமூகத்தோட பொருத்தி பார்க்கலாம். தன்பாலின ஈர்ப்பாளனாக அவனுக்கான அறையை சமூகமும் ஒதுக்க மறுக்கிறது. அவன் விரும்பியவர்களை தேர்வு செய்யவும், விரும்பியதை செய்யவும் அவனுக்கு இங்கே உரிமையில்லை. 'இந்தியாவில் நாமெல்லாம் குற்றவாளிகள். நாம் பிறந்ததன் அடிப்படையில் நாம் குற்றவாளிகளாகத் தான் கருதப்படுவோம்' என படத்தில் வரும் வசனத்தைப் போலத் தான் அவனுக்கான சுதந்திரமும். தனாய்-யை பொறுத்தவரை அவன் ஒரு நீல நிற விரும்பி. உண்மையில் படத்தின் காட்சிகள் குறியீடோடும், கவித்துவமாகவும் வைக்கப்பட்டிருப்பது அத்தனை அழகாக இருக்கிறது.

குறிப்பாக தனது வீட்டுக்கு வெளியே நிற்கும் நீல நிற சைக்கிள் ஒன்றைக் காண்கிறான் தனாய். அதன் நிறம் அவனை ஈர்க்கிறது. அந்த சைக்கிள் பிரதீக் உடையது. வீட்டில் புதிதாக குடியேறிய பிரதீக் பாபருக்கும் தனாயும் ஒரே வகையான உணர்வுகளை கொண்டவர்கள் என்பதை நீல நிறத்தின் வழியே அழகாக சொல்லியிருப்பார் இயக்குநர் சச்சின் குண்டல்கர். இதுபோல பல ப்ரேம்கள் கவித்துமாக காட்சிபடுத்தபட்டிருக்கும். அவர்களின் உறவு பிரியும் போது, அந்த நீல நிறம் கரைந்து தண்ணீராய் ஒழுகும் காட்சிகள் குறியீடு மொழியின் அட்டகாசம். தனாய்-க்கும், பிரதீக் பாபருக்கும் இடையில் நிகழும் தன்பாலின ஈர்ப்புறவு காட்சிகள் இந்திய சினிமா காணாத ஃப்ரேம்கள்! இரு ஆண்களுக்கிடையேயான காதல் அவ்வளவு மென்மையான உணர்வுடன் கடத்தப்பட்டிருக்கும்.

சகோதரியாக வரும் அஞ்சலி சிவராமன் ஹாக்கி வீராங்கனை. பெண்மைக்கான வரையறைகளுக்குள் அடங்காதவராக காட்சிபடுத்தபடுகிறார். 'முடியை நீளமாக வளர்த்துக்கோ, டீ போட கத்துக்கோ' எனக் கூறும் அவளது சகோதரனின் வார்த்தைகளை லெப்ட் ஹெண்டில் டீல் செய்பவள். பிரதீக் பாபருடன் சென்றதற்கான காரணம் குறித்து கேட்கும் போது கூட, 'அவன் என்னை முடியை நீளமாக வளர்த்துகொள்ள சொல்லவில்லை' என்கிறாள். அந்த அளவுக்கு தனக்கான சுதந்திரத்தின் மீது வேட்கை கொள்பவள்.

ஆனால், இப்படியான பெண்ணியப் பார்வையில் இருக்கும் ஒரு பெண், 'டியோடரண்டை எப்படி பயன்படுத்துவது என்று தெரியவில்லை' என கூறும் காட்சி முரணாக எழுதப்பட்டிருக்கிறது. அவள் கைவிடப்படும் போது கூட முடங்கி ஓரிடத்தில் அமரவில்லை. மாறாக தன் இலக்கை நோக்கி ஓடுகிறாள். ஓரிடத்தில், தான் அணிந்திருக்கும் நகைகளை கழற்றிவிட்டு, 'என் ஹாக்கி ஸ்டிக் தான் எனக்கான நகை' என கூறும் வசனம் ஈர்க்கிறது.

இந்தப் படத்தில் ஆண், பெண் இருவரும் ஒரே நேரத்தில், ஒரே ஆணால் கைவிடப்படுகிறார்கள். கைவிடப்பட்ட நிலையில், அவர்களின் உணர்வுகள் இருவேறு பாலின அடிப்படையில் காட்சிப்படுத்தப்படுகிறது. அதை இருவரும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை, அவரவர் பார்வையிலிருந்து படம் விவரிக்கிறது. ஒரே விஷயத்தை இருவர் அணுகும் முறையும் மாறுபடுகிறது.

தனாய்க்கும் பிரதீக் பாபருக்குமான உறவு எந்தவித சமூக அழுத்தமில்லாமல் பயணிக்கிறது. வெளிப்புற அழுத்தங்கள் ஏதுமற்று நகர்கிறது. இருவருக்கும் இடையேயான உறவும், பிரிவும் கூட அவர்களுக்குள்ளேயே தொடங்கி முடிந்து விடுகிறது. படம் மன ரீதியான உணர்வுகளை அவர்களுக்குள் மட்டுமே கடத்துகிறது. 'கோபால்ட் ப்ளூ' முழுக்க முழுக்க தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்தும், அவர்களின் நெருங்கிய உறவின் சிதைவு குறித்தும் விவரிக்கிறது.

தனாய் எப்போதும் தன் வீட்டுக்கு அருகிலிருக்கும் குளத்தில் உள்ள ஆமையுடன் பேசுகிறான். உண்மையில் அங்கு ஆமை இல்லை. இருந்தாலும் தன்னுடைய எல்லா துக்கம், சந்தோஷத்தையும் அதனுடன் பகிர்ந்து கொள்கிறான். கண்ணுக்குத் தெரியாத அந்த ஆமையுடனான இந்த உறவுக்கும் பெயர் தெரியாத (பிரதீக் பாபர்) மனிதனுடனான அவனது உறவுக்கும் இடையே வரையப்பட்ட கோட்டை இணைத்து எழுதப்பட்டிருக்கும் திரைக்கதை தான் இந்த 'கோபால்ட் ப்ளூ'. இரண்டையும் இணைத்து இறுதியில் தான் எழுதிய முதல் புத்தகத்தில் அவன் இப்படி சொல்கிறான். 'To the man at the lake'!

> முந்தைய அத்தியாயம்: தெறிப்புத் திரை - 2 | கெட்டியோலானு என்டே மாலாகா - புரிதலற்ற திருமணங்களை தோலுரிக்கும் சலச்சித்திரம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x