Published : 20 Apr 2022 10:08 PM
Last Updated : 20 Apr 2022 10:08 PM

ஓடிடி திரை அலசல் | Veyil - வெளிக்காட்ட தவறிய உணர்வுகளின் ஒன்றுபட்ட வெளிப்பாடு!

இந்தப் படத்தில் பேசுகின்ற மொழியும், நடித்திருக்கும் நடிகர்களும் உங்களுக்கு பரிச்சயமில்லாமல் இருக்கலாம். ஆனால் 1 மணி நேரம் 55 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படத்தின் ஏதாவது ஒரு காட்சி, உங்கள் வாழ்க்கையில் நடந்திருக்கும். இந்தத் திரைப்படத்தின் தலைப்பான 'வெயில்' என்பது இங்கு ஒளியை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. வெளிக்காட்டிக் கொள்ளாத தனது உணர்வுகளால் இருள் சூழும் முதன்மைக் கதாபாத்திரத்தின் வாழ்வில் படரும் ஒளியே 'வெயில்'. Veyil - இந்த மலையாள மொழித் திரைப்படம் இப்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

கணவனை இழந்த தாய் ராதாவால் (ஸ்ரீரேகா) வளர்க்கப்படும் இரண்டு மகன்களின் கதை. மூத்த மகன் சித்தார்த் என்ற சித்து (ஷேன் நிகம்), இளைய மகன் கார்த்திக் (சயீத் இம்ரன்). இந்தக் குடும்பத்தின் வாழ்வாதார பிரச்சினை, மகன்களின் கல்வி, எதிர்காலம், விருப்பு வெறுப்புகள் குறித்து கவலை கொள்ளும் தாய். படிப்பில் கவனமில்லாமல் சுற்றித் திரியும் மூத்த மகன், நேர்மாறான குணாதிசயங்களுடன் இளைய மகன். இந்த இருவரும் ஸ்ருதி (சோனா ஒலிக்கல்) என்ற ஒரே பெண்ணை காதலித்தால் என்ன நடந்திருக்கும் என்று நம்மை யோசிக்க வைத்துவிட்டு, கதையோடு பயணிக்கும் மனநிலை பிறழ்வு கொண்ட ஒரு கதாபாத்திரத்தை கையாண்டு யாரும் எதிர்பார்க்காத க்ளைமாக்ஸில் முடித்திருப்பது இந்தப் படத்தின் தனிச்சிறப்பு.

இவர்கள் தவிர இந்தப் படத்தில் ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பல கதாப்பாத்திரங்கள் அவர்களுக்கான வேடத்தை சிறப்பாக செய்துள்ளனர். ஷரத் மேனன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவு அத்தனை குளுமையாக்கி கடவுளின் தேசத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷாஜ் மொஹ்மத். படத்தில் நாம் மேலும் ஒன்றிப்போக காரணமாயிருந்தது பாடல்கள். இசையமைப்பாளர் பிரபல பின்னணி பாடகர் பிரதீப் குமார். The Hey song.... Pacha rap song.... என படத்தில் வரும் எல்லா பாடல்களும் ரசிக்கும்படியாக உள்ளது. நான் தமிழ்ப் படங்களில் பிஸியான பாடகர் என்பதை மலையாள தேசத்துக்கு சொல்லிவிடவோ என்னவோ, The Hey song பாடலை தமிழில்,

"நீயில்லா நேரம்
எங்கும் போவதில்ல
என்ன சொல்ல

தீர்வில்லா தீவே
ஒன்ன காணவில்ல
எங்கே செல்ல

நான் கண்ண மூடவில்ல
உன் நெழலும் தெரியவில்ல
ஏன் ஏன் ஏன்
இந்த கோபம் உள்ள" என்று ஒருமுறை அவரே பாடியிருப்பது சிறப்பு.

இந்தப் படத்தில் வரும் காதல் காட்சிகள் இளமையாக இருக்கிறது. அதிலும் வளர் இளம் பருவத்து காதல் நினைவுகள் என்றால் சொல்லவா வேண்டும். படத்தின் பெரும்பாலான காட்சிகள் வளர் இளம் பருவத்து காதல் நினைவுகளை அழகாய் சுமந்து நிற்கிறது. பள்ளியில் தன்னுடன் படிக்கும் பெண்ணைக் காதலிக்கும் ஹீரோ. தான் பார்ப்பது அவளுக்குத் தெரிய வேண்டும் என்ற உள்மனது ஆசையை மறைத்து அவளுக்கு தெரியாதது போல் பார்த்து ரசிப்பது. சட்டென திரும்பிப் பார்க்கும் அவளது ஒற்றைப்பார்வையில் பற்றிக்கொள்ளும் தீயின் கனலை தகிக்க முடியாமல் பரிதவிப்பது. காரணம் இல்லாமல் அந்தப் பெண் மீது கோபம் கொள்வது. வீட்டில் உள்ள காசை திருடி அவளுக்கு ஏதாவது வாங்கித்தர முயற்சிப்பது என காதல் காட்சிகளில் சித்துவாக வாழ்ந்திருக்கிறார் ஷேன் நிகம்.

செல்போனில் இன்டர்நெட்டின் ஆதிக்கம் தொடங்குவதற்கு முன்பு, காதல் வளர்க்கும் மையங்களாக இருந்த பிரவுசிங் சென்டர் காட்சிகள் இந்தப் படத்தில் மிக மிக நாகரிகமாக கையாளப்பட்டிருக்கிறது. காதல் சமிக்ஞைகளைத் தெரிந்துகொள்ளும் பெண்ணின் வீட்டில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளால் ஏற்படும் பிரிவு, அதனைத் தொடர்ந்து திருவிழாவில் காதலியை சந்திக்கும் செல்வது, முதல் முறையாக புடவைக் கட்டிய காதலியைப் பார்த்து ரசிப்பது என பல்வேறு காதல் சார்ந்த உணர்வுகளை படம் முழுக்க வழிந்தோடச் செய்து நம்மை வலிக்கி விழச் செய்திருக்கிறார் இயக்குநர்.

வளர் இளம் பருவத்து காதலை கதைக்களமாக்குவதை மலையாள திரையுலகம் தொடர்ந்து கையாண்டு வருகிறது. குடும்பம், காதல், உறவுகள் என்று எளிய மனிதர்களின் சுக துக்கங்களை சுமந்து நிற்பதாலோ என்னவோ, மொழியே புரியாவிட்டாலும் இதுபோன்ற திரைப்படங்கள் நம்மை இளக வைத்துவிடுகின்றன. அதே நேரம், வளர் இளம் பருவத்தில் எடுக்கப்படும் ஹீரோவான சித்து கதாப்பாத்திரம் எடுக்கும் தவறான முடிவுகளால் அவருக்கு ஏற்படும் விளைவுகள் குறித்தும் இந்தப் படம் பேசுகிறது.

கணவனை இழந்து ஒரு தாய் பிள்ளைகளை வளர்க்க படும் வேதனைகளையும், என்னதான் உதவாக்கரையான மூத்த மகனை திட்டிக் கொண்டே இருந்தாலும், வீட்டில் கோபித்துக்கொண்டு வெளியேச் சென்றுவிடும் அவனது வருகையை எதிர்நோக்கும் தாயின் பாசம் பற்றியும் இந்தப் படம் பேசுகிறது. இந்தக் காட்சியின்போது "அவனுக்கு என்ன வேணும் அதை எப்படி கேட்டு வாங்கணும்னு அவனுக்குத் தெரியும், ஆனால் உனக்கு கேட்கத் தெரியாது, அதனால்தான் நான் உங்கிட்ட பாசமாக நடந்துகொள்வேன்" என்று இளைய மகனிடம் கூறும் அம்மா கதாபாத்திரம், எனக்கு அவனை (மூத்த மகன்) பார்க்கனும், நீ போய் அவனை கூட்டிட்டு வா என்று சொல்லும் இடம் அபாரம்.

மனநிலை பிறழ்வு கொண்ட மகனை வைத்துக்கொண்டு கஷ்டப்படும் தாய், தனது இயலாமையால் ஒரு கட்டத்தில் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துவிட, அந்த மனநிலை பிறழ்வு கொண்டவரின் வாழ்க்கை என்ன ஆகிறதென, காதல், பாசம், கோபம், இரக்கம், தியாகம், என வெவ்வேறு மனிதர்கள் வெளிக்காட்டும், வெளிக்காட்ட தவறிய உணர்வுகளின் ஒன்றுபட்ட வெளிப்பாடுதான் இந்த 'வெயில்' திரைப்படம்.

கடந்த பிப்ரவரி 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம் ஏப்.15 முதல் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஸ்லோ பர்னிங் வகை ஃபேமிலி மெலோ டிராமா சஷ்பென்ஸ் நிச்சயமாக ரசிக்கும்படியாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x