Published : 29 Mar 2022 08:30 PM
Last Updated : 29 Mar 2022 08:30 PM
இன்றைய தலைமுறை இயக்குநர்களில் மணிகண்டன் முக்கியமானவர். இதுவரை நான்கு திரைப்படங்களை மட்டுமே இயக்கியிருக்கும்போதும், மணிகண்டனின் திரைமொழி அலாதியான ஒன்றாக இருக்கிறது. ஓர் எளிய கதைக்குள் கொஞ்சம் சிக்கல்களைப் புகுத்தி, பின் அந்தச் சிக்கல்களைப் படிப்படியாகக் கலைந்து, மீண்டும் எளிமைக்குத் திரும்பும் பயணத்தின் ஊடே அன்றாட வாழ்வின் ஏக்கங்களையும் அபத்தங்களையும் அவர் நம்முள் கடத்திவிடுவார்.
'காக்கா முட்டை' படத்தின் சிறுவர்களுக்கு பிட்சா சாப்பிட ஆசை. 'குற்றமே தண்டனை' படத்தில் நாயகனுக்குக் கண் அறுவை சிகிச்சை செய்ய ஆசை. 'ஆண்டவன் கட்டளை' படத்தின் நாயகனுக்கு வெளிநாடு செல்ல ஆசை. பாட்டி சுட்ட பீட்சாவே பரவாயில்லை என்று இறுதியில் உணரும் அந்தச் சிறுவர்கள் தொடக்கத்திலேயே அதை உணர்ந்திருந்தாலோ, கண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்று உண்மையைச் சொல்லும் மருத்துவர் தொடக்கத்திலேயே அதைச் சொல்லியிருந்தாலோ, பாஸ்போர்ட் அலுவலகத்தில் மேலதிகாரியை நாயகன் தயங்காமல் முதலிலேயே சந்தித்திருந்தாலோ இந்த மூன்று படங்களும் அங்கேயே முடிந்திருக்கும். ஆனால், அப்படி முடிக்காமல், வாழ்வின் முரண்களை மனத்தின் முரண்கள்மூலம் யதார்த்தமாக மணிகண்டன் விவரித்து இருப்பார். அதுவே மணிகண்டனின் பாணியும் கூட. ஆனால், 'கடைசி விவசாயி' திரைப்படத்தில், தன்னுடைய வழக்கமான பாணியிலிருந்து முற்றிலும் விலகி, புதியதோர் தளத்தில் பயணித்து, ஒரு படைப்பாளியாக அவர் முழுமையடைந்திருக்கிறார்.
கிராமங்களின் மறுபக்கம்
கிராமங்களை வன்முறையின் உறைவிடமாகக் காட்சிப்படுத்தும் திரைத்துறையின் போக்குக்கு முற்றிலும் மாறாக, வன்முறை துளியுமற்ற ஓர் எளிய கிராமத்தை அச்சு அசலாகக் காட்சிப்படுத்தி இருப்பதில் தொடங்கும் மணிகண்டனின் சமூக அக்கறை எவ்வித சமரசமும் இன்றி படத்தின் இறுதிவரை தொடர்கிறது. விளிம்புநிலை மனிதர்களின் நல்லியல்புகள் வேறு எந்தத் திரைப்படத்திலும் இவ்வளவு சிறப்பாக, இயல்பாக வெளிவரவில்லை என்பதே நிதர்சனம். கிராமத்து மனிதர்கள் என்கிறபோதும், இதில் எவரும் கெட்ட வார்த்தைகளை உதிர்க்கவில்லை; வசவுச் சொற்களை வீசவில்லை; சூழ்நிலைகள் நிர்ப்பந்தித்தபோதும் வன்முறையை எவரும் தீர்வாகத் தேர்வு செய்யவில்லை; பெண்களை அவமதிக்கவில்லை; முக்கியமாக மது அருந்தி ரகளையில் ஈடுபடவில்லை.
கதையே பிரதானம்
ஓர் அதிகாலை விழித்தெழும் நல்லாண்டி எனும் முதியவரின் அன்றாட நிகழ்வுகளின் வழியாகத் தொடங்கும் இந்தத் திரைப்படம், இறுதிவரை அந்த முதியவரின் அன்றாட வாழ்வை எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி பின்தொடர்ந்து செல்கிறது. திரைப்படத்தின் ஆரம்பத்திலேயே தன்னுடைய ஒளிப்படத் திறன் வழியே அந்தக் கிராமத்துக்குள் நம்மை மணிகண்டன் அழைத்துச் சென்றுவிடுகிறார். வானம் பார்த்த பூமியில் விவசாயம் பார்க்கும் அந்த முதியவரின் பார்வையின் வழியே அந்த மனிதர்களின் வாழ்வும், அந்தக் கிராமத்தின் அழகும் எளிமையும் நமக்கு உணர்த்தப்படுகின்றன. திரைப்படத்துக்காக என்று அந்தக் கிராமத்தின் அழகு கூட நமக்கு மிகைப்படுத்திக் காட்டப்படவில்லை. மயில்களின் நடனமும், சூரியனின் வண்ண வீச்சும், நிலவொளியின் அமைதியும் வெகு இயல்பாகவே கடந்து செல்கின்றன. ஓர் ஒளிப்படக் கலைஞராகத் தன்னை முன்னிறுத்த முயலாமல், கதையை மட்டும் மணிகண்டன் முன்னிறுத்தியதால் நிகழ்ந்த மாயாஜாலம் இது.
கதைக்களம்
அந்தக் கிராமத்தின் அடையாளமாகத் திகழும் பெரிய மரம் ஒன்றின் மீது இடி விழுந்துவிடுகிறது. குலச் சாமிக்குத் திருவிழா நடத்தாமல் இருந்ததன் விளைவு அது என்று பெரியவர்கள் நம்புகிறார்கள். ஊர் பஞ்சாயத்து கூடி, திருவிழா நடத்த முடிவு செய்கிறது. குலச் சாமிக்காக நெல் பயிரிடும் பொறுப்பு நல்லாண்டிக்கு வழங்கப்படுகிறது. அவரும் தனது நிலத்தில் பயிரிடுகிறார். ஒரு நாள் நிலத்தின் அருகே மயில்கள் இறந்து கிடக்கின்றன. அவற்றைத் தனது நிலத்தில் மிகுந்த மரியாதையுடன் அடக்கம் செய்கிறார். ஆனால், மயில்களைக் கொன்று புதைத்ததாக அவர் மீது வழக்குத் தொடுக்கப்படுகிறது.
மயில்களை அவர் கொல்லவில்லை என்பது நீதிபதிக்குத் தெரிந்தபோதும், அவர் சிறையில் அடைக்கப்படுகிறார். ஊர் திருவிழாவிற்காகப் பயிரிடப்பட்ட நெல் வயலைப் பராமரிக்கும் பொறுப்பு அவரைக் கைது செய்த காவலதிகாரிக்கு வழங்கப்படுகிறது. நெல் விளைந்ததா, நல்லாண்டிக்கு விடுதலை கிடைத்ததா, திருவிழா நடந்ததா போன்ற கேள்விகளுக்கான விடைகளைத் தேடிச் செல்லும் பயணமே மீதிப் படம். அந்தப் பயணமும் எவ்வித பரபரப்புமின்றி மிகுந்த யதார்த்தத்துடன் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதுவே இந்தப் படத்தின் தனித்துவ சிறப்பும் கூட. எவ்வித வசதிகளுமற்ற ஒரு சிறிய கிராமத்தையும் அதில் வசிக்கும் சில எளிய மனிதர்களையும் மட்டும் கொண்டு உலகத் தரத்திலான திரைப்படத்தை மணிகண்டன் எடுத்திருக்கிறார்.
இயல்பான நடிப்பு
நல்லாண்டி எனும் கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் மாயாண்டி அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். மண்ணின் மீதும், மனிதர்களின் மீதும், சக உயிர்களின் மீதும் பாசம்கொண்ட மனிதராக அவர் வாழ்ந்திருக்கும் விதம், இந்தப் படத்தின் நம்பகத்தன்மைக்கும், அது நம்முள் ஏற்படும் தாக்கத்துக்கும் முக்கியக் காரணம். நெல்லுக்கு என்னானதோ என்கிற அவருடைய பதைபதைப்பை நம்முடையதாக மாற்றும் அளவுக்கு அவருடைய பாத்திரமும் நடிப்பும் வீரியமிக்கதாக இருக்கின்றன. மனசாட்சிக்கு உண்மையாக இருக்கும் பெண் நீதிபதியாக நடித்திருக்கும் ரெய்ச்சல் ரெபேகா, வெகு இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். நீதிமன்றம் சம்பந்தப்பட்ட காட்சிகளை மிக யதார்த்தமாகப் படமாக்கியிருப்பது படத்தின் நம்பகத்தன்மைக்குக் கூடுதல் வலு சேர்க்கிறது. படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் நன்றாகவே இருக்கின்றன.
நேர்மறை உணர்வுகள்
சலனமின்றி தவழ்ந்தோடும் ஆழ்நதியின் பெரும் பயணத்தை அதன் கரையோர பசும் பரப்பில் அமர்ந்து மெய்சிலிர்த்து ரசிப்பதற்கு நிகரான அனுபவத்தை 'கடைசி விவசாயி' நமக்கு அளிக்கிறது; ஒருவித தியான நிலைக்கு நம்மை இட்டுச் செல்கிறது. இதன் ஆக்கமும், அது பேசும் விழுமியங்களும் நம்முள் உருவாக்கும் நேர்மறை உணர்வுகள், படம் முடிந்த பின்னரும் நிலைத்து நிற்கின்றன. விவசாயத்தைப் படத்தின் வெற்றிக்காகப் பயன்படுத்தாமல், அதனை ஆத்மார்த்தமாக மிகுந்த நேர்மையுடன் அணுகியதன் விளைவு, விவசாயத்தின் மீது படம் பார்க்கும் நமக்கு உண்மையான ஈர்ப்பு ஏற்படுகிறது. விவசாயிகளின் பிரச்சினைகளையும், அவர்களின் வாழ்வியலையும் இவ்வளவு அழுத்தமாகவும் உண்மையாகவும் எந்தத் திரைப்படமும் இதுவரை காட்சிப்படுத்தவில்லை; பேசவில்லை. தமிழ்த் திரையுலகின் ஆகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்று இது.
இப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT