Published : 22 Mar 2022 06:16 PM
Last Updated : 22 Mar 2022 06:16 PM
ஒரு மெலோ டிராமா வகை கதையில் ஒரு சஸ்பென்ஸ் வைத்து, அதை ஆரம்பத்திலேயே பார்வையாளர்களுக்கு சொல்லிவிட்டு, வர்க்க நிலை சிக்கலுக்குள் நடக்கும் மனப் போராட்டங்களை லாவகமாகக் கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறது 'ஜல்சா' (Jalsa) என்னும் இந்தித் திரைப்படம். (ஸ்பாய்லர்கள் சிலவற்றை உள்ளடக்கிய திரைப் பார்வை கட்டுரை இது.)
இருள் சூழ்ந்து நீளும் அந்தச் சாலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக விழுந்து கிடக்கும் வெளிச்சங்களை விருட்டெனக் கடந்துச் செல்கிறது ஒரு டூவீலர். பனியோ, பயமோ தெரியாமலிருக்க வண்டி ஓட்டும் இளைஞனை இறுகப் பற்றியிருக்கிறாள் இளம்பெண் ஆலியா. யாருமற்ற மேம்பாலத்தின் கீழ் டூவீலர் இளைப்பாற, பாலத்தின் மேலே தனது ஃபாலோயர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஒய்யாரமாக நடந்துவரும் ஆலியாவை, அவளது ஸ்மார்ட்போனில் படம்பிடிக்கிறான் காதலன். அவளது அழகில் கிறங்கியவன் எல்லை மீறத் தயாராகும்போது அவனிடம் கோபித்துக்கொண்டு பாலத்திலிருந்து கீழே ஓடி வருகிறாள் ஆலியா. இதோடு படத்தில் நடித்தவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என திரையில் காட்டப்பட்டு வந்த அனைவரது பெயரும் முடிவுக்கு வருகிறது.
சரியாக இந்தக் காட்சிகள் முடியும் 7 நிமிடம் 30-வது விநாடியில், காதலன் மீதிருந்த கோபத்தில் சாலையை மறந்த ஆலியா மீது வேகமாக வந்த கார் ஒன்று மோதுகிறது. இதில் சில அடிதூரத்துக்கு தூக்கி வீசப்பட்ட ஆலியா , ரத்த வெள்ளத்தில் குற்றுயிராய் உயிருக்காக போராடுகிறாள். இது நடந்த சில மணித்துளிகள்தான், காதலன் பைக்கை எடுத்துக் கொண்டு அங்கிருந்து பறந்து விடுகிறான். சில நிமிடங்களில் அந்தக் காரும் சென்றுவிடுகிறது. அங்கிருந்துதான் இந்தப் படம் தொடங்குகிறது.
இந்திப் படம், படத்தின் பெயர் 'ஜல்சா'. இது போதாதா? தார்ப்பாய் கட்டி மறைத்து விடப்பட்டுள்ள நம் மனத்திரை மீதி கதையை முடிவு செய்துகொள்ள. ஆனால், அப்படி எளிதில் கணித்துவிடும் வாய்ப்பை இந்தப் படம் யாருக்கும் கொடுக்கவில்லை. மாறாக, இரு வேறு வர்க்கப் படிநிலைகளில் வாழும் இரண்டு தாய்களின் பாசப் போராட்டத்தை மையமாகக் கொண்டு , நம் மனங்களை பதற்றத்துடன் க்ளைமாக்ஸ் காட்சி வரை நகர்த்தி, இறுதிக் காட்சியில் இதமாக வருடியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் திரிவேணி .
தமிழில் வெளிவந்த 'காற்றின் மொழி' திரைப்படத்தின் கதையாசிரியரான சுரேஷ் திரிவேணிதான் இத்திரைப்படத்தின் இயக்குநர். இப்படத்தின் திரைக்கதையை இவருடன் சேர்ந்து பிரஜ்வால் சந்திரசேகர், அப்பாஸ் தலால் மற்றும் ஹுசைன் தலால் ஆகியோர் எழுதியிருக்கின்றனர். கவுரவ் சட்டர்ஜியின் பின்னணி இசையும், சவுரப் கோஸ்வாமியின் ஒளிப்பதிவும் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன. அதேபோல் படத்தின் கதாப்பாத்திரத் தேர்வுகள். இவர்கள்தான் இந்தக் கதையை பார்வையாளர்களிடம் எளிதில் கடத்திக்கொண்டு சேர்த்திருக்கின்றனர். இந்தக் கதையில் வரும் கதாப்பாத்திரங்களை வெறுமனே ஸ்கிரீன் ஆப்ஜெக்டாக கையாளாமல், அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து மெருகேற்றியிருக்கிறார் இயக்குநர்.
பிரபலமான பத்திரிகையாளர் மாயா மேனன் (வித்யா பாலன்). இவரது வீட்டு சமையலர் ருக்ஷனா (ஷெபாஃலி ஷா). மாயா மேனன் எடுத்த இன்டர்வியூவில் பதில் சொல்ல முடியாமல் நீதிபதி எழுந்தோடிய வீடியோ வைரலாகி, வியூஸ்களை குவித்து வரும்.
மாயா மேனனின் வயதான தாய் மற்றும் மாற்றுத்திறனாளி மகன் ஆயுஷ் ஆகியோரை கவனித்துக் கொள்ளும் ருக்ஷனா மீது ஆயுஷ் மிகுந்த பாசம் வைத்திருக்கிறார். ருக்ஷனாவின் கணவர் மொஹ்மத் சினிமாத் துறையில் வேலை செய்கிறார். இவர்களது மகள் ஆலியா, மகன் இமாத்.
வைரலும், வியூசும் தந்த மிதப்பில் லேசான போதையில் காரை ஓட்டி வருபவர் மாயா மேனன்தான். இது படம் தொடங்கிய அரை மணி நேரத்தில் நமக்கு தெரிந்துவிடும். இந்தப் படத்தில் வரும் கதாப்பாத்திரங்களுக்கு எப்படி தெரிகிறது, யார் மூலம் தெரிகிறது, அதனை சரிகட்ட என்னென்ன வேலைகள் செய்யப்படுகிறது, இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது. உண்மையை மறைக்க என்ன உத்தி கையாளப்படுகிறது என்பதையெல்லாம் சஸ்பென்ஸ் குறையாமல் சுவாரசியமாக சொல்லியிருக்கிறது இந்தப் படம்.
வித்யா பாலனின் நடிப்பும், உடல் மொழியும் படம் முழுக்க அவரை ரசிக்க வைக்கிறது. படத்தில் அவருக்கு எண்ணிக்கையில் குறைவான காஸ்ட்யூம்கள்தான். எல்லா உடைகளும் அத்தனை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹைடெக் மற்றும் எலைட் பத்திரிகையாளராக, மாற்றுத்திறனாளி மகனிடம் பாசங்காட்டும் தாயாக, வயதான தாயோடு சண்டையிடும் மகளாக, வேலைக்கார ருக்ஷனாவை திட்டும் பணக்கார முதலாளியாக, புதிதாக வேலைக்கு சேர்ந்த பயிற்சி பத்திரிகையாளரைக் கண்டிக்கும் மூத்த பத்திரிகையாளராக என ஒவ்வொரு ஃபிரேமிலும் மாயா மேனனாக வித்யா பாலன் வியக்க வைக்கிறார்.
வித்யா பாலன் அந்த எக்ஸ்ட்ரீம் என்றால், இந்தப் பக்கம் ஷெபாஃலி ஷாவோ ருக்ஷானாவாகவே வாழ்ந்திருக்கிறார். நடுத்தர வர்க்கத்து பெண்ணாக, தனது இரண்டு குழந்தைகளின் மேல் அக்கறைக் கொண்ட அம்மாவாக , மாயா மேனனின் மாற்றுத்திறனாளி மகன் ஆயுஷின் அன்பை பெற்ற ருக்ஷானா, மகளின் காதலன் யாரென்று தெரியாமல் மெக்கானிக் ஷெட்டில் வீரம் காட்டும் வேங்கையாக, மகளின் நிலைக்கு காரணம் யார் என்ற உண்மை தெரிந்த பின்னர் உறைந்து நிற்கும் உயிராக, இப்படி பல காட்சிகளில் தனது முக பாவனைகள் மூலம் நம் கண்களை அகல விரியவைத்து கவனத்தை ஈர்த்து விடுகிறார் ஷெபாஃலி ஷா.
இவர்கள் தவிர பயிற்சி பத்திரிகையாளர் ரோஹினியாக வரும் விதார்தி பண்டி , ஆயுஷாக வரும் சூர்யா கசிபட்லா, வித்யா பாலனின் அம்மா ருக்மணியாக வரும் ரோஹினி ஹட்டங்கடி, அந்த ரெண்டு போலீஸ்காரர்கள் என அனைவருமே தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.
ஒரு மெலோ டிராமா வகையான கதையில் ஒரு சஸ்பென்ஸ் வைத்து, அதை ஆரம்பத்திலேயே பார்வையாளர்களுக்கு சொல்லிவிட்டு, இந்த வர்க்க நிலை சிக்கலுக்குள் நடக்கும் மனப் போராட்டங்களை லாவகமாகக் கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறது இத்திரைப்படக்குழு. அதிலும் படத்தின் கடைசி 10 -15 நிமிடங்கள் நம்மை மேலும் பரபரப்பாகி விடுகிறது.
இந்தத் திரைப்படம் வெறுமனே பொழுதுபோக்கு தன்மையோடு மட்டும் தன்னை சுருக்கிக் கொள்ளாமல், டிரங் அண்ட் டிரைவ், சோஷியல் மீடியா மோகம், செய்த தவறை மூடிமறைக்க முயலும் மனோபாவம், விளிம்பு நிலை மக்களின் விசுவாசம் என பல்வேறு மனசாட்சிக்கு நெருக்கமான விஷயங்களைப் பேசியிருக்கிறது. மொத்தத்தில் 'ஜல்சா' மனசாட்சியின் நியாயத் தராசு. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் மார்ச் 18-ம் தேதி வெளியான இத்திரைப்படம் நிச்சயம் ரசிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT