Published : 21 Feb 2022 06:40 PM
Last Updated : 21 Feb 2022 06:40 PM
திருச்சியில் நடந்த இரண்டு உண்மைச் சம்பவங்களை திரைக்கதையாக்கி, தமிழ் ரசிகர்களுக்கு புலனாய்வு த்ரில்லராக படைக்கப்பட்டிருக்கிறது 'விலங்கு' வெப் சீரிஸ்.
திருச்சி வேம்பூர் எனும் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ. பரிதி. தனது மனைவியின் பிரசவத்துக்காக விடுமுறை எடுக்க இருக்கும் நிலையில், பாதி சிதைந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்ட தகவல் பரிதிக்கு வருகிறது. இறந்தது யார் என விசாரித்து கொண்டிருக்கும்போதே சடலத்தில் இருந்த தலை காணாமல் போகிறது. தலையின் தேடலுக்கு இடையில் அப்பகுதி எம்எல்ஏவின் மைத்துனரும் கொலையாகி கிடக்க்கிறார். இந்த இரண்டு கொலைகளும் ஏன் நடந்தன, கொலையாளி யார், அந்த தலை எப்படி காணாமல் போனது என்ற கேள்விகளுக்கு விடையை தேடுவதுதான் 'விலங்கு' வெப் சீரிஸின் கதையும் களமும்.
மொத்தம் ஏழு எபிசோடுகள். வேம்பூர் போலீஸ் ஸ்டேஷன், அதன் காவலர்கள், கைதிகள், அங்கு வழக்கமாக நடைபெறும் பணிகள் என நிதானமாக தொடங்கும் முதல் எபிசோட் திரில்லர் வெப் சீரிஸுக்கே உரித்தான ஒரு பரபரப்பான மர்மங்களுடன் முடிகிறது. ஒவ்வொரு எபிசோடும் இதே பரபரப்பை முடிவாக கொண்டுள்ளன.
போலீஸ் எஸ்.ஐ பரிதியாக விமல் நடித்துள்ளார். ஃபீல்ட் அவுட் நடிகராக முத்திரை குத்தப்பட்ட நிலையில், நிச்சயம் இந்தத் தொடர் விமலுக்கு கம்பேக்தான். தனது முந்தையை தோல்விகளை மனதில் கொண்டு நிறைய உழைப்பை கொடுத்துள்ளார். ஆனாலும், அவரின் பழைய சாயல் அவரைவிட்டு போகவில்லை. சில இடங்களில் போலீஸ் எஸ்.ஐயாக கவர்ந்தாலும், பல இடங்களில் 'களவாணி' விமலை நினைவுபடுத்துகிறார்.
இதேபோல் விமலின் மனைவியாக இனியா. அவ்வப்போது வரும் தோற்றம்தான் இவருக்கு, எனினும் தனது நடிப்பால் கவனம் பெறவைக்கிறார். போலீஸ் கதைகளில், காவலர்களின் பணி வாழ்க்கை, மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலைப்படுத்துவதற்கு தான் பெரும்பாலும் குடும்ப காட்சிகள் வைக்கப்படும். அதே பாணி தான் இங்கும். ஆனால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியுள்ளார் இனியா. கதாபாத்திரங்களின் தேர்வுதான் இந்த 'விலங்கு' கதைக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. காவலர்களாக மறைந்த நடிகர் என்.ஆர்.மனோகர், முனீஷ்காந்த் என தொடரில் எண்ணற்ற காதாபாத்திரங்கள். ஒவ்வொருவரும் நிறைவான பணியை செய்துள்ளனர்.
இவர்கள் அனைவரையும்விட அதிக கவனம் பெறுபவர்கள் பாலசரவணன் மற்றும் புதுமுக நடிகர் ரவி. பெரும்பாலும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலேயே நடித்துவந்த பாலசரவணனுக்கு இதில் நகைசுவையே கிடையாது. கைதிகளுக்கு தெர்ட் டிகிரி (third-degree) டிரீட்மென்ட் அளிக்கும் கண்டிப்பான கருப்பு என்ற கான்ஸ்டபிள் பாத்திரம். காமெடி இல்லாத சீரியஸ் முகம், உடல் பாணி என கருப்பாக வரும் ஒவ்வொரு பிரேமிலும் நடிப்பால் கவனம் ஈர்த்துள்ளார். இனி காமெடி வேடங்களை தவிர்த்து இதுபோன்ற உறுதுணை கதாபாத்திரங்கள் செய்தால் பால சரவணன் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராகலாம்.
விலங்கின் மற்றொரு முக்கிய முகம் கிச்சா கேரக்டரில் வரும் ரவி. இவர் ஒரு புதுமுக நடிகர். ஆனால், அந்த மாதிரியான எந்த அறிகுறியும் இல்லாமல், தனது நடிப்பால் தொடரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி செல்கிறார் கிச்சா. ஸ்டேஷனில் வேலை செய்யும் எடுபிடியாக அப்பாவித்தனம் காட்டுவதிதில் தொடங்கி தொடரின் இரண்டாவது பாதி முழுக்க அவரே நிறைந்து இருக்கிறார். ஒளிப்பதிவு, எடிட்டிங், என தொழில்நுட்ப பணிகளும் சிறப்பாக அமைந்துள்ளன.
வெப் சீரிஸ் ஃபார்மெட் என்று வரும்போது, குறிப்பாக மர்டர் மிஸ்டரியே அதற்கான சரியான தேர்வாக இருக்கிறது. ஏனென்றால், ஓர் இயக்குநருக்கு இதுபோன்ற களத்தில் குற்றம், விசாரணை நடைமுறைகள், தான் சொல்ல வரும் கருத்தை விவரிக்க போதுமான சுதந்திரம் இருக்கும். மேலும் வன்முறை காட்சிகளை காண்பிப்பதற்கு எல்லையே இருக்காது. இந்த கண்ணோட்டமே விலங்கு தொடரிலும் காண முடிகிறது. ஒரு முழு திரைப்படத்துக்கு ஏற்ற கதைக்களமாக இருந்தாலும், இந்த கண்ணோட்டத்திலேயே அவற்றை வெப் சீரிஸாக எடுத்துள்ளார்கள்.
குற்றவாளியிடம் உண்மையை வரவழைக்க, வன்முறையே விசாரணைக்கு ஒரே வழி என்று சித்திரித்து ஏகப்பட்ட வன்முறை காட்சிகளை புகுத்தி 'விசாரணை' படத்தை நியாபகப்படுத்தியுள்ளார் இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ். விசாரணை கதைக்களமும், விலங்கின் கதைக்களமும் வன்முறைக்கான பாதைகளை வேறுபடுத்துகிறது. அந்த வகையில், அதிகப்படியான போலீஸ் ஸ்டேஷன் வன்முறைக் காட்சிகள், அதிலும் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான வழிமுறைகள் என்பது சோர்வை கொடுக்கின்றன.
சில இடங்களில் நம்ப முடியாத வகையில் லாஜிக் மீறல்கள். நடைமுறையில் இருக்கும் காவலர்களின் அதிகாரங்கள் மற்றும் அவர்களின் டெக்னிக்குகளை இன்னும் கொஞ்சம் ஆராய்ந்து செய்திருக்கலாம் என்று எண்ண வைக்கிறது. அதேபோல் தேவையற்ற நிறைய காட்சிகள் திரைக்கதையில் சேர்த்துள்ளார் இயக்குநர். திரைப்பட கண்ணோட்டத்தில் இல்லாமல் இது ஒரு வெப் சீரிஸ் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால், அந்தக் குறைகள் பெரிதாக தெரியாது.
பொதுவாக ஒரு க்ரைம்-த்ரில்லர் கதையில் நாயகர்களின் உடல்மொழி, அவர்கள் புலனாய்வு செய்யும் விதம் என்பது மிக முக்கியம். ஆனால், இது எதுவுமே இல்லாமல், மனிதாபிமானம் நிறைந்த போலீஸாக விமல் கேரக்டர் காண்பிக்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் வழக்கமான போலீஸ் கதாபாத்திரங்களுக்கு மாறானது இது. தொடக்கத்தில் இது சலிப்பை ஏற்படுத்துவதாக எண்ண வைக்கிறது. ஆனால், இறுதியில் அவரின் இந்த மனிதாபிமான அணுகுமுறையே அனைத்து மர்மங்களையும் அவிழ்க்கிறது. இது ஏற்றுக்கொள்ளும்படியாக தோணாவிட்டாலும், அதை தனது திரைக்கதையால் நியாயப்படுத்தியுள்ளார் இயக்குநர்.
மேலும், வில்லனின் கொடூரமான செயல்களை நியாயப்படுத்தாமல், அவர் எங்கிருந்து வருகிறார், ஏன் அவர் சட்டவிரோதமாக மாறுகிறார் என்பது போன்ற காட்சிகள் விலங்கின் வெற்றிக்கு பக்கபலமாக இருக்கிறது.
க்ரைம் - திரில்லர் தொடராக இருந்தாலும், அதனுள் வட்டார மக்களின் கலாச்சாரங்கள், பேச்சுவழக்குகளை முழுக்க பயன்படுத்தியிருப்பது ரசிக்க வைத்துள்ளது. குறிப்பாக சாதி அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு எதிராக காட்டப்பட்டுள்ள காட்சிகள், தமிழக காவல்துறையில் இருக்கும் சாதிய அடிப்படையிலான தகவல்களை ரியால்ட்டிக்கு ஏற்றாற்போல் கொடுத்து அப்ளாஸ் அள்ளுகிறார் இயக்குநர்.
குறைகள் பல இருந்தாலும், அதனை மறக்கடிக்கும் வகையில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் திரைக்கதையால் தனது முந்தையை தோல்வியை சரிகட்டியுள்ளார் இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ். இந்தியாவில் இன்வஸ்டிகேட்டிவ் (புலனாய்வு) திரில்லர் பாணியிலான வெப் சீரிஸ்கள் பழக்கம்தான் என்றாலும், தமிழில் வெளிவந்துள்ள 'விலங்கு' பார்வையாளருக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்க முயல்கிறது. இந்த தொடர் Zee ஓடிடி தளத்தில் காண கிடைக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT