Published : 17 Oct 2021 03:06 AM
Last Updated : 17 Oct 2021 03:06 AM
தென்கொரியாவின் ‘ஸ்குயிட் கேம்' திகில் தொடர், உலகில் அதிகம் பேர் விரும்பி பார்க்கும் இணைய தொடராக முதலிடத்தைப் பிடித்துள்ளது.
தென்கொரியாவின் சிரன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஸ்குயிட் கேம் என்ற திகில் தொடர் கடந்த செப்டம்பர் 17-ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியானது. உலகம் முழுவதும் நெட்பிளிக்ஸுக்கு 20.9 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். இதில் 11.1 கோடி பேர் ஸ்குயிட் கேம் தொடரை விரும்பி பார்க்கின்றனர். இதன்மூலம் இந்த தொடர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மேலும் உலகில் அதிகம் பேர் விரும்பி பார்க்கும் இணைய தொடராகவும் உருவெடுத்துள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் பல்வேறு உள்ளூர் தொடர்களை, ஸ்குயிட் கேம் பின்னுக்குத் தள்ளியுள்ளது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் இந்த தொடருக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. குஜராத்தின் அமுல்நிறுவனம் அண்மையில் ஸ்குயிட் கேம்தொடர்பான் கார்ட்டூன் விளம்பரத்தை வெளியிட்டது. மும்பை போலீஸார் தங்களது சமூக வலைதள பக்கத்தில் ஸ்குயிட் கேம் தொடர் வீடியோவை வெளியிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
கதையின் கரு
வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத 456 பேர், ரூ.289 கோடி பரிசுத் தொகைக்கு ஆசைப்பட்டு ஒரு கும்பலின் வலையில் சிக்குகின்றனர். அந்த கும்பல், 456 பேரையும் மிகப்பெரிய சிறையில் தள்ளி, சிறுவர்களுக்கான விளையாட்டுகளில் பகடைக் காய்களாக ஈடுபட செய்கிறது.
தொடரின் முதல் விளையாட்டின் பெயர் ‘ரெட் லைட், கிரீன் லைட்'. திறந்தவெளியில் நிற்கும் ராட்சத சிறுமி பொம்மை, ‘ரெட் லைட்' என்று கூறியபடிநாலாபுறமும் திரும்பும். அப்போது கைதிகளிடம் சிறிய அசைவுகள் தெரிந்தால்கூட அவர்களை ஈவு இரக்கமின்றி சுட்டு வீழ்த்திவிடும். இதேபோல தொடரின் பல்வேறு திகில் விளையாட்டுகள் பார்வையாளர்களை மிரள செய்கின்றன.
இந்த தொடரை எழுதி இயக்கி வரும்வாங் டாங் யக் கூறும்போது, "திரைப்படமாக தயாரிக்க கதை எழுதினேன். ஆனால் எந்த நிறுவனமும் எனது கதையை திரைப்படமாக்க விரும்பவில்லை. அதன்பிறகு தொலைக்காட்சி நிறுவனங்களை அணுகினேன். ஆனால் அந்த நிறுவனங்களும் விரட்டியடித்தன. சுமார் 10 ஆண்டுகளாக தொடர் புறக்கணிப்பை சந்தித்தேன். இப்போது நெட்பிளிக்ஸில் எனது கதை, இணைய தொடராக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது" என்றார்.
கடும் எதிர்ப்பு
அமெரிக்கா, பிரிட்டன், தென்கொரியாவில் ஸ்குயிட் கேம் தொடருக்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வன்முறை நிறைந்த இந்த தொடரை பள்ளி மாணவ, மாணவியர் பார்க்கக்கூடாது என்று அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தாலும் சர்வதேச அரங்கில் ஸ்குயிட் கேம் கோலோச்சி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment