Published : 05 Sep 2021 12:20 PM
Last Updated : 05 Sep 2021 12:20 PM
ஒரு வங்கி.... 8 கொள்ளையர்கள்.... அவர்களை ஒருங்கிணைத்து வழிநடத்தும் ஒரு தலைவன். இதுதான் ‘மனி ஹெய்ஸ்ட்’ தொடரின் கதைக்களம். 2017ஆம் ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகத் தொடங்கிய இந்தத் தொடர் இன்று வரை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் ஃபேவரிட் தொடர்களில் ஒன்றாக இருக்கிறது. இதுவரை நான்கு சீசன்களாக வெளியான இத்தொடரின் ஐந்தாம் மற்றும் இறுதி அத்தியாயத்தின் முதல் பகுதி (5 எபிசோட்கள்) தற்போது வெளியாகிவிட்டது. நீண்ட நாட்களாக இதற்காகக் காத்திருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை ‘மனி ஹெய்ஸ்ட்’ தொடரின் இந்த அத்தியாயம் பூர்த்தி செய்ததா என்று பார்க்கலாம்.
போலீஸ் பிடியில் இருந்து ரக்கேலை மீட்கும் கொள்ளையர்கள் அவரை ராயல் மின்ட் வங்கிக்குள் அழைத்துச் செல்கிறார்கள். ரக்கேல் மீட்கப்பட்ட மகிழ்ச்சியில் இருக்கும் ப்ரொஃபஸரை துப்பாக்கி முனையில் பிடிக்கிறார் நிறைமாத கர்ப்பிணியான இன்ஸ்பெக்டர் அலிசியா. அவரைக் கட்டிவைத்து அவர்களின் திட்டம் குறித்துக் கேட்டு ப்ரொஃபஸரை சித்ரவதை செய்கிறார். வங்கியின் உள்ளே பிணைக்கதிகளாக இருக்கும் ஆர்டுரோ, வங்கியின் கவர்னர் உள்ளிட்ட சிலரை வைத்துக் கொள்ளையர்களிடமிருந்து தப்பிக்க திட்டம் தீட்டுகிறார். வங்கிக்கு வெளியே அலிசியாவிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றிய காவல் அதிகாரி டமாயோ வங்கிக்குள் ராணுவத்தை எப்படியாவது அனுப்ப முயன்று கொண்டிருக்கிறார். இறுதியில் அவரவரது எண்ணங்கள் நிறைவேறியதா என்பதை பரபர ஆக்ஷன் காட்சிகளுடன் சொல்லியிருக்கிறது ஐந்தாவது சீசனின் முதல் பகுதி.
கடந்த ஆண்டே வெளியாகியிருக்க வேண்டிய இந்த சீசன் கரோனா அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இந்த ஆண்டு வெளியாகியிருக்கிறது. தொடர் ஆரம்பிக்கும்போதே பரபரப்பும் தொற்றிக் கொள்கிறது. அந்த இடத்திலும் சலிக்காத ஆக்ஷன் காட்சிகள், பதைபதைக்க வைக்கும் இசை, சீட்டின் நுனிக்குக் கொண்டுவரும் காட்சியமைப்பு என முந்தைய சீசன்களில் இருந்த அனைத்து அம்சங்களும் இதிலும் உண்டு.
தன்னுடைய பதவி பறிபோன வெறுப்பில் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கும் அலிசியா, திட்டங்களைத் தொலைநோக்குடன் வகுக்கும் ப்ரொஃபஸர், முதல் சீசனிலிருந்து இந்த சீசன் வரை ரசிகர்களின் வெறுப்பைச் சம்பாதித்து வரும் ஆர்டுரோ, டோக்யோ, ரியோ, பெர்லின், ரக்கேல் என அனைத்து நடிகர்களின் சிறப்பான நடிப்பு இத்தொடரின் பெரும் பலம் என்று சொல்லலாம். குறிப்பாகக் கடந்த சீசனில் திருநங்கையாக அறிமுகமான ஜூலியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர்.
முதல் எபிசோடிலிருந்தே பெர்லின் மற்றும் அவர் மகன் குறித்த ஃப்ளாஷ்பேக் காட்சிகளையும், வங்கிக் கொள்ளை காட்சிகளையும் நான் லீனியர் முறையில் அமைத்திருப்பது தொடர் ஆக்ஷன் காட்சிகளால் சலிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. இருப்பினும் ஒரேமாதிரியான ஆக்ஷன் காட்சிகள் திரும்பத் திரும்ப வருவது போல தோன்றுவதைத் தவிர்த்திருக்கலாம். குறிப்பாக மாடியில் வெடிகுண்டு மூலம் தகர்த்து உள்ளே இறங்கும் ராணுவ அதிகாரிகள் அனைத்து வழிகளையும் அடைத்தபிறகு வரும் காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றன. ஆக்ஷன் காட்சிகளின் பின்னணியில் வரும் பாடல்கள் ஈர்க்கின்றன.
முந்தைய எபிசோட்களில் ஆக்ஷன் காட்சிகளை விட ப்ரொஃபஸரின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் அதிகம் இருக்கும். பார்வையாளர்களை யோசிக்க வைப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அவற்றோடு ஒப்பிட்டால் இதில் அது போன்ற காட்சிகள் மிகவும் குறைவு. முந்தைய சீசன்களில் இல்லாத அளவு ஆக்ஷன் காட்சிகளை நிரப்பி வைத்திருக்கிறார்கள்.
முந்தைய சீசன்களைப் போலவே இந்த சீசனும் ‘மனி ஹெய்ஸ்ட்’ ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் என்பது உறுதி. மீதி இருக்கும் ஐந்து எபிசோட்கள் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்ற அறிவிப்போடு தொடரின் முதல் பகுதியை முடித்திருக்கிறார்கள். இரண்டாம் பகுதி வெளியாக இன்னும் மூன்று மாதங்களுக்கு மேல் இருக்கும் நிலையில் ஐந்தாவது எபிசோடின் முடிவு ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்போதே எகிற வைக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT