Published : 25 Feb 2025 02:26 PM
Last Updated : 25 Feb 2025 02:26 PM

சினிமா காதலர்கள் தவறவிடக் கூடாத 10 ‘அனிமே’ படங்கள் @ ஓடிடி

உலகம் முழுவதுமே 2டி, அனிமேஷன் படங்களுக்கென்று தனி ரசிகர் கூட்டம் இருப்பதை நாம் அறிவோம். ஆனால் வெகுஜன தமிழ் ரசிகர்களுக்கு பெரியளவில் தெரியாத ஒரு உலகம் உண்டு என்றால் அது ‘அனிமே’ உலகம் தான். ஜப்பானில் தயாரிக்கப்படும் இவற்றுக்கு உலகம் முழுவதும் பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. ‘மாங்கா’, ‘ஜிப்லி ஸ்டுடியோஸ்’ அனிமே படங்கள் உலக அளவில் பிரபலமாக இருப்பவை.

‘அனிமே’ என்றதும் சிறு பிள்ளைகள் பார்க்கும் கார்ட்டூன் வகை படங்கள் என்று இவற்றை நினைத்துவிடக்கூடாது. திரைப்படங்கள், வெப் தொடர்களை போலவே இவை மிகவும் உணர்வுபூர்வமாகவும், அட்டகாசமான திரைக்கதையுடனும் உருவாக்கப்படுபவை. குறிப்பாக ‘அனிமே’ படங்களின் பிதாமகன் என்று அழைக்கப்படும் ஹாயோ மியாஸாகியின் படங்கள் பல்வேறு விருதுகளை குவித்தவை. ஹாலிவுட்டால் கூட இன்னும் ஜப்பானிய அனிமேவின் தரத்துக்கு நிகராக வரமுடியவில்லை என்று சினிமா ரசிகர்கள் சொல்வதுண்டு.

அந்த வகையில் ‘அனிமே’ படங்களை பார்க்க விரும்பும் சினிமா காதலர்கள் தவறவிடக்கூடாத 10 படங்களை இங்கே பார்க்கலாம்:

1) Grave of the Fireflies (1988): எந்த உணர்வுகளையும் முகத்தில் பிரதிபலிக்க முடியாத ஒரு கார்ட்டூனால் நம்மை அழவைக்க முடியுமா என்று நீங்கள் நினைக்கலாம். அதற்கான பதில்தான் இந்த படம். இரண்டாம் உலகப் போரில் சிக்கி சீரழிந்த ஜப்பானின் நிலையை ஒரு சிறுவன் மற்றும் அவனது தங்கையின் பின்னணியில் சொல்லி நம்மை கலங்க வைத்துவிடும் படைப்பு. நெட்ஃப்ளிக்ஸில் காணக்கிடைக்கிறது.

2) My Neighbour Totoro (1988): மேலே குறிப்பிட்ட அனிமே ‘பிதமகன்’ மியாசாகியின் படைப்பு. மியாசாகியின் படங்கள் அனைத்துமே மனிதத்தை வலியுறுத்துபவை. உணர்வுபூர்வமானவை. அந்த வகையில் உடல்நலக்குறைவால் அவதிப்படும் தாய்க்காக தந்தையுடன் நகரத்திலிருந்து கிராமத்துக்கு வரும் இரண்டு சகோதரிகளை பற்றிய படம் ‘My Neighbour Totoro’. நெட்ஃப்ளிக்ஸில் காணக்கிடைக்கிறது.

3) Akira (1988): எதிர்காலத்தில் நடக்கக்கூடிய சயின்ஸ் பிக்‌ஷன் வகை படமான இது உலகப் புகழ்பெற்ற மாங்கா சீரிஸ் படங்களில் ஒன்று. இப்படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் பிரபலமான ‘பைக் ஸ்லைடு’ ஷாட், அதன் பிறகு வெளியான பல்வேறு அனிமேஷன் படங்களில் இடம்பெற்றது. அமேசான் ப்ரைமில் காணக்கிடைக்கிறது.

4) Spirited Away (2001): மியாசாகியின் மற்றொரு படைப்பு. பெற்றோருடன் பிக்னிக் செல்லும் சிறுமி ஒருத்தி, வேறொரு உலகத்துக்குள் புகுந்து விடுவது போன்ற கதை. சுயம் அறிதல், உறவுச் சிக்கல், நட்பு என பல தளங்களில் மிக நுட்பமான திரைக்கதை மூலம் பார்ப்பவர்களின் மனதை தொடக்கூடிய படம் இது. நெட்ஃப்ளிக்ஸில் காணக்கிடைக்கிறது.

5) Whisper of the Heart (1995): மியாசாகியின் எழுத்தில் யோஷிஃபுமி கோண்டோ இயக்கிய இப்படம் புத்தகங்களை விரும்பு இருவருக்கும் இடையிலான காதலை பற்றி பேசுகிறது. இப்படத்தின் தொடர்ச்சியாக ‘தி கேட் ரிட்டர்ன்ஸ்’ என்ற படமும் வெளியாகியுள்ளது. நெட்ஃப்ளிக்ஸில் காணக்கிடைக்கிறது.

6) Wolf Children (2012): தன் கணவனின் மரணத்துக்கு பிறகு தனி ஒரு பெண்ணாக இரு குழந்தைகளை வளர்க்கும் தாயை பற்றிய கதை இது. அந்த இரு குழந்தைகளும் ஓநாய் உருவத்துடன் இருப்பது சிக்கலை மேலும் அதிகரிக்கிறது. தாய்மையை மிகவும் உணர்வுபூர்வமாக பேசிய படங்களில் இதுவும் ஒன்று. படம் முழுக்க வரும் கவிதை போன்ற காட்சியமைப்புகள் நிச்சயம் பார்ப்பவர்களின் மனதை கொள்ளை கொள்ளும். அமேசான் ப்ரைமில் காணக்கிடைக்கிறது.

7) In This Corner of the World (2016): மீண்டும் ஒரு மாங்கா திரைப்படம். ஜப்பானில் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அமெரிக்க ஆக்கிரமிப்பு பின்னணியில் சொல்லப்படும் கதை. சூஸு என்ற இளம்பெண்ணின் பார்வையில் சொல்லப்படும் கதை யுத்தத்தின் கொடூரத்தை நம் கண் முன்னால் கொண்டு வரும். அமேசான் ப்ரைமில் காணக்கிடைக்கிறது.

8) The Tale of the Princess Kaguya (2013): ஸ்டூடியோ ஜிப்லி படங்களில் ஒன்றான இது பண்டைய ஜப்பானிய நாட்டுப்புற கதையை அடிப்படையாக கொண்டு உருவானது. வயதான மனிதர் ஒருவர் உள்ளங்கை அளவே இருக்கும் சிறு குழந்தை ஒன்றை கண்டெடுப்பதிலிருந்து தொடங்கும் படம், ஒரு மாயாஜால உலகுக்கு நம்மை இட்டுச் செல்லும். நெட்ஃப்ளிக்ஸில் காணக்கிடைக்கிறது.

9) Princess Mononoke (1997): ஹாயோ மியாசாகியின் படங்களில் இருக்கும் தனித்துவமே அவற்றில் இடம்பெறும் வினோத உயிரினங்களும், கனவு போன்ற உலகங்களும் தான். அவரது படங்களை தொடர்ந்து பார்ப்பவர்களால் எப்போதும் அந்த கதாபாத்திரங்களை மறக்க முடியாது. அதீத கிரியேட்டிவிட்டு அவரது சிந்தனைகளில் வெளிப்படும். அப்படியான அம்சங்கள் நிறைந்த ஒரு படம்தான் இது. மனிதகுலத்துக்கும் இயற்கை உலகத்துக்கும் இடையிலான மெல்லிய சமநிலையை பின்னணியாக கொண்ட இப்படம் ஒரு கிளாசிக். நெட்ஃப்ளிக்ஸில் காணக்கிடைக்கிறது.

10) The Boy And The Heron (2023): கடந்த ஆண்டு சிறந்த அனிமேஷன் படத்துக்கான பிரிவில் ஆஸ்கர் வென்ற படம். மியாசாகி கடைசியாக இயக்கிய படம். இரண்டாம் உலகப் போர், மாயாஜால உலகம், வினோத உயிரினங்கள் என மியாசாகியின் முந்தைய படங்களில் அனைத்தும் இதிலும் உண்டு. ஆனால் தனித்துவமான திரைக்கதையும், உணர்வுபூர்வமான காட்சிகளும் பார்ப்பவர்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். நெட்ஃப்ளிக்ஸில் காணக்கிடைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x