Published : 22 Jul 2024 03:37 PM
Last Updated : 22 Jul 2024 03:37 PM
சென்னை: “இன்றைக்கு ஓடிடி தளங்களைப் பொறுத்தவரை விதிமுறைகள்தான் உண்டு. சென்சார் இதில் தலையிட முடியாது. இதனால் புதிய சிந்தனைகளை சொல்வதற்கு இந்த ஓடிடி தளங்கள் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது” என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரியார் திடலில் ‘பெரியார் விஷன்’ என்ற புதிய ஓடிடி தளத்தில் அறிமுக விழா நடைபெற்றது. திராவிடர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் கனிமொழி எம்.பி, சத்யராஜ், கீ.வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வில் பேசிய நடிகர் சத்யராஜ், “சினிமாவில் சென்சார் போர்டு பெரும் பிரச்சினையாக உள்ளது. ‘பராசக்தி’ தொடங்கி ‘தோழர் சேகுவேரா’ என்று ஒரு படம் நடித்துள்ளேன். அதுவரை சென்சார் போர்டால் பெரும் பிரச்சினைகள் நீடித்துக் கொண்டேயிருக்கிறது. ‘பராசக்தி’ படத்தில் வெட்டப்பட்ட வசனங்கள் அளவில்லா வசனங்கள்.
அதேபோல எம்ஜிஆர் நடித்த ‘அன்பே வா’ படத்தில், ‘உதயசூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே’ என்ற வரி இடம்பெற்றிருக்கும். ஆனால் சென்சாரில் ‘உதயசூரியன்’ நீக்கப்பட்டு ‘புதிய சூரியன்’ என மாற்றப்பட்டது. இன்றைக்கு ஓடிடி தளங்களைப் பொறுத்தவரை விதிமுறைகள்தான் உண்டு. சென்சார் இதில் தலையிட முடியாது. இதனால் புதிய சிந்தனைகளை சொல்வதற்கு இந்த ஓடிடி தளங்கள் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.
‘பெரியார்’ படம் டிஜிட்டல் செய்யப்பட்டுள்ளது. தற்போது படத்தை வெளியிட்டால் பரபரப்பாக இருக்கும். அன்று வெளியாகும்போது கலவரம் இருக்கும் என நினைத்தோம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இன்றைக்கு சமூக வலைதளங்கள் பெரிய அளவில் வளர்ந்துள்ளது” என்றார்.
‘பெரியார் விஷன்’ ஓடிடி தளத்தில் படங்கள், ஆவணப் படங்கள், அரசியல் தலைவர்களின் பேட்டிகள், பெரியாரின் வரலாறு உள்ளிட்டவை இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT