Published : 06 May 2024 05:18 PM
Last Updated : 06 May 2024 05:18 PM

Heeramandi - பாலியல் தொழிலாளிகள் வாழ்வியலுடன் விடுதலைப் போராட்ட சூழலை பேசும் சீரிஸ் எப்படி? | ஓடிடி திரை அலசல்

பாலியல் தொழில் நடக்கும் புகழ்பெற்ற ஹீராமண்டியின் ஷாஹி மஹாலின் தலைவியான மல்லிகாஜானை வென்று அந்த இடத்தைப் பிடிக்க அவரது சகோதரியின் மகள்கள் சூழ்ச்சி செய்கின்றனர். இந்தச் சூழ்ச்சிகளை மல்லிகாஜான் எப்படி எதிர்கொள்கிறார் என்பதும், அந்த நேரத்தில் மிகத் தீவிரமாக நடந்துவரும் நாட்டின் விடுதலைப் போராட்டத்துக்கு இந்தப் பெண்கள் எத்தகைய பங்களிப்பு செய்தனர் என்ற கற்பனை பீரியட் டிராமாதான் ‘ஹீராமண்டி’ இந்தி வெப் சீரிஸின் ஒன்லைன். நெட்பிஃளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது. தமிழ் டப்பிங்கும் உள்ளது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மை வாய்ந்ததாக கருதப்பெறும் தமிழ் இலக்கிய மரபில் பரத்தையர், கணிகையர், தேவதாசியர் ஆகியோரைக் காண முடிகிறது. சிலப்பதிகாரத்தின் கதை தலைவிகளுள் ஒருத்தியான மாதவி, அவளது மகளான மணிமேகலை, சுந்தரரின் மனைவியான பரவைநாச்சியார் என்று தமிழ் இலக்கிய மரபில் பிரிக்கவியலாத இடத்தைப் பெற்றவர்களாக கணிகையர், தேவதாசியர் உள்ளனர். தமிழில் தேவதாசிகளை வருணித்து ‘விறலிவிடுதூது’ என்ற இலக்கிய வகையே தோன்றியுள்ளது.

தமிழ் பண்பாட்டின் முக்கிய கண்ணிகளான பரதநாட்டியம் என்னும் பெயரிலான ‘சதிராட்டம்’, கருநாடக இசை என்னும் பெயரிலான ‘தமிழிசை’ ஆகிய கலைகளை இவர்கள் காலந்தோறும் வளர்த்தெடுத்து வந்துள்ளனர். தமிழ் பண்பாட்டு வளத்துக்கு செழுமையான பங்களித்த இவர்களைப் பற்றிய தமிழ் புலவர்களின் பார்வை கீழானதாகவே உள்ளது. இவர்களை தமிழ் புலவர்கள் ‘விலை மகளிர்’, ‘அணங்குகள்’, ‘அன்பில்லாதவர்கள்’, ‘நிலையற்றவர்கள்’ என்ற வகையில் இழிவுபடுத்தியே பாடியுள்ளனர்.

புல்லுக்கும் புழுவுக்கும் கூட கருணை காட்டச் சொல்லும் வள்ளுவர், அதில் பாதியைக் கூட மனிதப் பிறவிகளான பரத்தையர்கள் மீது காட்டாது, அவர்களை ‘அன்பின் விழையார்’, ‘பொருட்பெண்டிர்’, ‘மாயமகளிர்’, ‘வரைவின் மகளிர்’, ‘இருமனப் பெண்டிர்’ என்று திருக்குறளில் குறிப்பிட்டுள்ளது வியப்பளிக்கிறது, என்று "பத்தினிப் பெண்டிர் அல்லோம்" என்ற நூலில் அதன் ஆசிரியர் அ.கா.அழகர்சாமி, தேவதாசியர் குறித்த ஒரு மாறுபட்ட பார்வையை முன்வைத்திருப்பார்.

தமிழிலேயே அவர்களுக்கு இந்த நிலை என்றால் பிறமொழிகளைப் பற்றி யோசிக்கவே தேவையில்லை. இலக்கியத்தில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் கூட தேவதாசியர் குறித்த சித்தரிப்புகள் குறிப்பிட்ட சில படங்களைத் தவிர பெரும்பாலானவை மேற்சொன்ன கண்ணோட்டம் கொண்டதாகவே இருக்கும். நவீன காலத்தில் பாலியல் தொழிலாளிகள் என்ற பெயரில் அழைக்கப்படும் இவர்களது வாழ்க்கை அப்போது தொடங்கி இப்போது வரை அதிகம் பேசப்படுவதில்லை. அதனை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருந்த 'கங்குபாய் கத்யாவாடி' திரைப்படம் போக்கியிருந்தது.

கலவையான விமர்சனங்களைப் பெற்ற 'கங்குபாய் கத்யாவாடி' படத்தில் மும்பையின் சிவப்பு விளக்கு பகுதியில் 1960-களில் வாழ்ந்த கங்குபாய் என்பவரது வாழ்க்கையை படமாக்கியிருந்தார் பன்சாலி. தற்போது, இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு 1920-களில் லாகூரின் ‘ஹீராமண்டி’ எனுமிடத்தில் வாழ்ந்த பாலியல் தொழிலாளர்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட சம்பவங்களின் புனைவு தொகுப்பே இந்த வெப் சீரிஸ்.

ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒருங்கிணைந்த இந்தியாவின் ‘ஹீராமண்டி’யில் மல்லிகாஜான் (மனிஷா கொய்ராலா) என்பவரது தலைமையின் கீழ் பாலியல் தொழில் தடையின்றி நடந்து வருகிறது. அங்குள்ள ஷாஹி மஹாலை இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஆளும் மல்லிகாஜான் ‘ஹுசூர்’ என்று அழைக்கப்படுகிறார். தனது தாயைக் கொன்று ஹுசூர் பதவிக்கு வந்த மல்லிகாஜானை பழிவாங்க காத்திருக்கிறார் ஃபரீதன் (சோனாக்‌ஷி சின்ஹா). ஃபரீதன் மல்லிகாஜானின் சகோதரியின் மகள். அதேபோல் தன்னுடைய சொந்த பிரச்சினைகளின் காரணமாக தங்கையான வஹீதாவும் (சஞ்சீதா ஷேக்) மல்லிகாஜானை பழிவாங்க காத்திருக்கிறார். இவர்களோடு மல்லிகாஜான் அவமானப்படுத்திய பிரிட்டீஷ் காவல்துறை அதிகாரியும் சேர்ந்து கொள்கிறார்.

இதனிடையே, பாலியல் தொழிலாளியாக மாற விரும்பாத மல்லிகாஜானின் இளைய மகள் ஆலம் செப் (ஷர்மின் சேகல்) ஹீராமண்டியில் இருந்து வெளியேறுகிறார். ஆலம்செப் விடுதலைப் போராட்டத்தில் ஆயுதம் ஏந்தி போராடும் தாஜ்தார் (தாஹா ஷா பாதுஷா) உடன் காதல் கொள்கிறார். இந்த கிளர்ச்சிப் படைக்கு தன்னால் முடிந்த பொருளுதவிகளையும், தகவல்களையும் கொடுத்து விடுதலைப் போராட்டத்துக்கு உதவிகரமாக இருந்து வருகிறார் மல்லிகாஜானின் மூத்த மகள் பிப்போ (அதிதி ராவ் ஹைதாரி). மல்லிகாஜான் பழிவாங்கப்பட்டாரா? ஆலம்செப்பின் காதல் என்னவாகிறது? ஃபரீதன், வஹீதாவின் சூழ்ச்சிகள் வெற்றி பெற்றதா? தாஜ்தர், பிப்போவின் விடுதலைப் போராட்டத்தால் ஏற்படும் விளைவுகள் என்ன? - இதுதான் 8 எபிசோடுகளைக் கொண்ட 'ஹீராமண்டி' தொடரின் முதல் சீசன்.

கதாப்பாத்திரங்களின் தேர்வு, கலை இயக்கம், உடைகள், ஆபரணங்கள், என எங்கு பார்த்தாலும் பன்சாலியின் உழைப்பு பிரமிப்பைத் தருகிறது. அதேநேரம் பிரமாண்டமும் அழகியலும் சேர்ந்து, பாலியல் தொழிலாளர்களின் மீது இரக்கத்தையும், விடுதலைப் போராட்டத்தில் ஆயுதமேந்தி போராடியவர்களின் தியாகத்தையும் மனதுக்கு நெருக்கமாக கொண்டு சேர்க்க தவறி சினிமாத்தனத்துடன் நின்றுவிடும் உணர்வைக் கொடுக்கிறது.

ஆறாத காயங்களை மொழியாக கொண்டிருக்கும் பாலியல் தொழிலாளிகளின் வேதனைகளை அழுத்தமாகப் பதிவு செய்வதற்குப் பதிலாக, மயக்கும் அழகும், நவநாகரிக உடைகளும் அணிந்து மதுபோதையில் மமதையில் வலம் வந்தவர்கள் என்பதை போல் அவர்களை ஆராதிருப்பது நெருடலாக இருக்கிறது. ஆனால், விடுதலைப் போராட்டத்தில் பாலியல் தொழிலாளிகளின் பங்கும் இருந்திருக்கிறது என்பதை நிறுவ முயற்சிக்கும் பன்சாலியின் சிந்தனை பாராட்டுக்குரியது.

இந்த முதல் சீசன் முழுவதும் பார்வையாளர்களை ஆதிக்கம் செய்திருப்பவர் மனிஷா கொய்ராலாதான். தன்னைச் சுற்றி நடக்கும் வஞ்சத்தையும் பழிவாங்கத் துடிக்கும் உறவுகளையும் கையாளும் விதத்தில் அவரது தேர்ந்த நடிப்பு ஜொலிக்கிறது. அதேபோல் தனது அக்கா மகளான சோனாக்‌ஷி சின்ஹா வந்தபிறகு வரக்கூடிய காட்சிகளில் இருவரும் சிறப்பாக தங்களது பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.

அதேபோல் அதிதி ராவ் ஹைதாரி, ஷர்மின் சேகல், சஞ்சீதா ஷேக், என வெப் சீரிஸில் வரும் அனைவரும் தங்களது சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கின்றனர். உஸ்தாத் என்ற திருநர் கதாப்பாத்திரத்தில் வருபவரின் நடிப்பு அருமை. இந்த வெப் சீரிஸின் முழுமுதல் வெற்றி டெக்னிக்கல் டீமையே சேரும்.

பன்சாலியின் எழுத்துக்கும் இசைக்கும் உயிரூட்டி இருக்கிறது டெக்னிக்கல் டீம். சுதீப் சட்டர்ஜி, மகேஷ் லிமாயே, ஹுன்ஸ்டேங் மொஹபத்ரா, ரகுல் தருமன் ஆகியோரது ஒளிப்பதிவு விளக்கொளி வெளிச்சத்தைப் போல மனதுக்குள் மின்னுகிறது. பன்சாலியின் வசனங்களும், பாடல் வரிகளும் மனம் முழுவதும் பரவிக் கொள்கிறது. அந்த ‘Azadi’ பாடல் வெகுவாக ஈர்க்கிறது.

“பாலியல் தொழிலாளி மரணிப்பதில்லை விடுதலை அடைகிறாள்”, “மனைவி என்பவள் நிஜம், காதலி என்பவள் ஆசை, பாலியல் தொழிலாளி என்பவள் விருப்பம்”, “விடுதலையைப் போன்றே காதல் என்பதும் புரட்சி தீ” போன்ற வசனங்கள் ஈர்க்கிறது. நாட்டின் விடுதலைக்கு வரலாற்றுப் புத்தகங்களில் பெயர் இருப்பவர்கள் மட்டுமின்றி முகம்தெரியாத எத்தனையோ பேரின் தியாகமும் அர்ப்பணிப்பும் இருந்துள்ளதை நினைவூட்டும் கற்பனை பிரீயட் டிராமாவே இந்த ‘ஹீராமண்டி’ வெப் சீரிஸ்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x