Published : 29 Apr 2024 08:02 PM
Last Updated : 29 Apr 2024 08:02 PM
பழமைவாதத்தின் பெயரால் சமுகத்தில் படிந்திருக்கும் ‘ஆணாதிக்க’ அழுக்குகளை நையாண்டி மூலமாக துடைத்தெறியும் முயற்சி தான் ‘லாபத்தா லேடீஸ்’.
நிர்மல் பிரதேஷ் என்ற கற்பனையான மாநிலம் அது. 2001-ல் நடக்கும் கதையில் மிகவும் அப்பாவியான ஃபூல் குமாரியை (நிதான்ஷி கோயல்) தீபக் குமார் (ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவ்) கரம்பிடிக்கிறார். திருமணம் முடிந்து ரயிலில் இருவரும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். அந்த ரயிலில் அவர்களுக்கு அருகில் மற்றொரு திருமண ஜோடியும் அமர்ந்திருக்கிறார்கள்.
கிட்டதட்ட இரண்டு மணப்பெண்களும் ஒரேமாதிரியான நிறம் கொண்ட முக்காடு அணிந்து முகத்தை மறைத்திருக்கிறார்கள். ஊர் வந்ததும் அவசரத்தில் ரயிலில் இருந்து இறக்கும் தீபக் குமார் தவறான மணப்பெண்ணை அழைத்து வந்துவிடுகிறார். ஜோடிகள் மாற, காட்சிகளும் மாறுகின்றன. தத்தம் மனைவிகளை தொலைத்த இரண்டு கணவர்களும் காவல்நிலையத்தில் புகார் அளிக்க, இருவரும் அவரவர் கணவர்களுடன் சேர்ந்தார்களா? இல்லையா? என்பதை நகைச்சுவையுடன் சொல்கிறது படத்தின் மீதிக்கதை.
ஆழமாக எழுதப்பட்ட கதாபாத்திரங்களின் வழியே ஓர் நேர்த்தியான கதையாடலை நிகழ்த்தி சுவாரஸ்யமாக படைப்பை கொடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் இயக்குநர் கிரண் ராவ். இவரின் முன்னாள் கணவர் ஆமீர்கான் இப்படத்தை தயாரித்திருக்கிறார். எப்போதாவது கோடையில் பெய்யும் மழையாக பாலிவுட்டின் அரிய படைப்புகளை கொண்டாடித்தீர்க்க வேண்டியது ரசிகர்களின் கடமை. அப்படியான படமாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் படம் வெளியிடப்பட்டுள்ளது.
அழுத்தமான 3 பெண் கதாபாத்திரங்களின் வழியே மொத்த படத்தையும் புரிந்துகொள்ள முடியும். கணவரின் பெயரைக்கூட சொல்லக்கூடாது என்ற ஃபூல்குமாரி கதாபாத்திரம், படிப்புக்காக திருமணத்தை புறக்கணிக்க முயன்ற ஜெயா, குடும்ப வன்முறையிலிருந்து விடுப்பட்டு தனித்து வாழும் மஞ்சு மாயி. தனித்து வாழ்தலும், சார்ந்திருத்தலும், கல்வியின் மூலம் அதிகாரம் பெறுதலையும், வெவ்வேறு நிலைகளிலிருந்து பேசுகிறது படம்.
யதார்த்தமாக எளிய மக்களின் வாழ்வியலையும் அவர்களுக்குள் ஊறிக்கிடக்கும் பழமைவாதத்தையும், அதிலிருந்து வெளியேற துடிப்பவர்களின் எண்ண ஓட்டத்தையும், திருமணத்துக்குப் பின் பெண்ணை உடைமையாக்கிக கொள்ளும் ‘ஆணாதிக்க’ மனநிலையும், தூவி விடப்பட்டிருக்கும் நகைச்சுவையும் படத்தை என்கேஜிங்காக கொண்டு செல்கிறது.
முக்காடு அணிந்து பின்பற்றப்படும், திருமண சடங்குகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள், ‘வரதட்சணை வாங்காவிட்டால் ஆணுக்கு பிரச்சினை இருக்கிறது’ என புரிந்துகொள்ளப்பட்டு பேசும் வசனம், வளர்ச்சியில் பின்தங்கியிருக்கும் வட இந்திய கிராமங்கள், அப்படியான நிலப்பகுதியில் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை பெண் ஒருவர் பேசுவது கவனிக்க வைக்கிறது.
“முட்டாளாக இருப்பது வெட்கக்கேடானது அல்ல, ஆனால் ஒருவரின் அறியாமையை நினைத்து பெருமைப்படுவது அவமானம்”, “உன் மேல அன்பு வைச்சிருக்குறவங்களுக்கு அடிக்க உரிமை இருக்குன்னு கணவர் சொன்னாரு. அதான் நானும் அந்த உரிமையை பயன்படுத்துனேன்”, “மரியாதையான பெண் என்பது மிகப்பெரிய மோசடியான வார்த்தை” போகிற போக்கில் பேசும் வசனங்கள் அழுத்தம் கூட்டுகின்றன.
ஒரு காட்சியில் மூன்று பெண்கள் பேசிக்கொண்டிருப்பார்கள். அதில், “எனக்கு பிடித்த சாப்பாடு தீபக், அவரது அப்பாவுக்கு பிடிக்காது என்பதால் அதை செய்வதில்லை. எனக்கு என்ன பிடிக்கும் அப்டிங்குறதே மறந்துடுச்சு” போன்ற வசனங்கள் பிரச்சாரமாக இல்லாமல் சூழலுக்கு தகுந்தாற்போல இயல்பாக எழுதப்பட்டிருப்பது படத்தை ரசிக்க வைக்கிறது. போலவே காட்சியில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதன் மூலம் திரைநேரம் வீண்டிக்கப்படாமல் கடக்கிறது.
ஃபூல் குமாரியாக வரும் நிதான்ஷி கோயல் கதாபாத்திரத்தை உணர்ந்து மிக நேர்த்தியாக நடித்திருந்தார். அதேபோல ஜெயாவாக நடித்துள்ள பிரதீபா ரான்தா, டீ கடை நடத்தும் சைய்யா கடம் ஆகியோரின் நுட்பமான நடிப்பு கவனம் பெறுகிறது. தீபக்காக வரும் ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவ் எளிய மனிதரின் மனநிலையை படம் பிடித்து காட்டியிருக்கிறார். காவலராக வரும் ரவி கிஷணின் பங்களிப்பு மொத்த படத்துக்கும் கூடுதல் சுவாரஸ்யம். ராம் சம்பத் இசையில் இரண்டு பாடல்களும் கதையோட்டத்துடன் கலந்து கரைகின்றன. வடமாநிலத்தின் பின்தங்கிய கிராமத்தின் நெருக்கமாக படம்பிடிக்கிறது விகாஷின் கேமரா.
நாயக பிம்ப சினிமாக்களில் சிக்கி அலுப்புற்று மூச்சு மூட்டியிருக்கும் பார்வையாளர்களுக்கு மிக எளிமையான மனிதர்களின் வாழ்வியலையும், பழமைவாத, ஆதிக்க மனநிலையின் விடுபடுதலின் தேவையையும் நேர்த்தியாக பேசுகிறது இப்படம். நெட்ஃப்ளிக்ஸில் காணக்கிடைக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT