Last Updated : 22 Apr, 2024 02:46 PM

 

Published : 22 Apr 2024 02:46 PM
Last Updated : 22 Apr 2024 02:46 PM

Ripley: கருப்பு - வெள்ளையில் கலை நயத்துடன் ஓர் அட்டகாச த்ரில்லர் | ஓடிடி திரை அலசல்

1955-ஆம் ஆண்டு பேட்ரிசியா ஹைஸ்மித் எழுத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட ‘தி டேலன்டட் மிஸ்டர் ரிப்ளி’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு 1999-ஆம் ஆண்டு அதே பெயரில் ஒரு படத்தை இயக்கினார் ஆண்டனி மிங்கெல்லா. மேட் டேமன், ஜூட் லா உள்ளிட்டோர் நடித்த இப்படத்தை தழுவி தற்போது வெளியாகியுள்ள வெப் தொடர் ‘ரிப்ளி’ (Ripley).

முதல் எபிசோடின் தொடக்கத்தில் ரோம் நகரில் ஒரு மனிதனின் உடலை ஒருவர் படிக்கட்டுகளின் வழியே ரத்தம் சொட்டச் சொட்ட இழுத்துச் செல்வது போல காட்டப்படுகிறது. கட் செய்தால், 60-களில் நியூயார்க்கில், ஓர் இருளடைந்த அபார்ட்மென்ட்டில் சின்னச் சின்ன வங்கி மோசடிகளை செய்து வரும் டாம் ரிப்ளி (ஆண்ட்ரூ ஸ்காட்) நமக்கு அறிமுக செய்யப்படுகிறார். ஒரு ப்ரைவேட் டிடெக்டிவ் மூலமாக ரிப்ளியை கண்டுபிடிக்கும் தொழிலதிபர் ஒருவர், தனது பணத்தை இத்தாலியில் ஊதாரித்தனமாக செலவு செய்து சுற்றிக் கொண்டிருக்கும் தனது மகனை அங்கு சென்று அழைத்து வருமாறு ரிப்ளியிடம் கோரிக்கை வைக்கிறார். அதற்கான முழு செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும் கூறுகிறார்.

போலீஸிடமிருந்து மறைந்து வாழும் ரிப்ளி இதனை ஒரு வாழ்நாள் வாய்ப்பாக கருதி, உடனடியாக சம்மதிக்கிறார். இத்தாலியில் உள்ள அத்ரானி என்ற ஓர் அழகிய கடற்கரை நகரத்துக்குச் செல்லும் அவர், அங்கு தனது காதலியுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து, தனது தந்தையின் பணத்தை ஜாலியாக செலவு செய்து கொண்டிருக்கும் டிக்கீயை சந்திக்கிறார். அவருடன் தான் யார் என்பதை சொல்லாமல் எதேச்சையாக பழகத் தொடங்கும் ரிப்ளி மெல்ல டிக்கியின் நெருங்கிய நண்பனாக மாறுகிறார்.

பணக்கார வாழ்க்கை மீது மோகம் கொள்ளும் ரிப்ளி, டிக்கீயை ஒரு தங்க முட்டையிடும் வாத்தாக பார்க்கிறார். சொகுசு வாழ்க்கைக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராகும் அவர், சிலபல சதி வேலைகளையும் செய்கிறார். இதனைத் தொடர்ந்து நடக்கும் சில அதிர்ச்சிகரமான சம்பவங்களும், அதற்கு ரிப்ளியின் எதிர்வினைகளுமே இத்தொடரின் மீதிக்கதை.

இந்த வெப் தொடரின் இயக்குநர் ஸ்டீவன் ஸைல்லியன், இத்தொடர் உருவாவதற்கு காரணமாக அமைந்த நாவலின் அட்டைப் படம் கருப்பு - வெள்ளையில் இருந்ததால், இந்த மொத்த வெப் தொடரையும் கருப்பு - வெள்ளையில் எடுக்க விரும்பியதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதுவே இத்தொடரின் முதல் எபிசோடிலிருந்து இறுதி வரை நம்மை கட்டிப் போடும் ஒரு முக்கிய காரணியாக அமைந்து விட்டது என்று சொல்லலாம்.

ராபர்ஸ் எல்ஸ்விட்டின் ஒளிப்பதிவில் கருப்பு வெள்ளையிலும் கூட இத்தாலியின் அழகு கண்களில் ஒற்றிக் கொள்ளும் வகையில் இருக்கிறது. தொடர் முழுக்க கருப்பு வெள்ளையிலேயெ படமாக்கப்பட்டிருப்பது நம்மை ஒருவித சீரியஸ் மனநிலையிலேயே வைத்திருக்க உதவுகிறது. கிட்டத்தட்ட ஒரு ஹிட்ச்காக் படம் பார்ப்பதைப் போல.

மிக மிக பொறுமையாக, நேரம் எடுத்துக் கொண்டு கதாபாத்திரங்களின் தன்மைகளையும், கதைக்களத்தின் தீவிரத்தையும் நமக்கு உணர்த்துகிறார் இயக்குநர். திடீர் திருப்பங்களோ, அதிர்ச்சி மதிப்பீடுகளோ இல்லையென்றாலும் கதையில் வரும் அடுத்தடுத்த சம்பவங்கள் நமக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதேபோல எட்டு எபிசோடுகளையும் எழுதியிருக்கும் ஸ்டீவன் ஸைல்லியன், தனது கதை சொல்லல் முறைக்கு துணையாக தொடர் முழுக்க ஓவியங்கள், சிற்பங்கள், கட்டிடக் கலை என ஏகப்பட்ட குறியீடுகளையும் பயன்படுத்தியுள்ளார்.

இது முழுக்க முழுக்க ரிப்ளி ஆக நடித்திருக்கும் ஆண்ட்ரூ ஸ்காட்டின் ஒன் மேன் ஷோ என்று தான் சொல்ல வேண்டும். வஞ்சகத்துக்கு உருவம் இருந்தால் அது இத்தொடரில் இருக்கும் ஆண்ட்ரூ ஸ்காட் போலத்தான் இருக்கும். ஏற்கெனவே ஷெர்லாக் வெப் தொடரில் மெயின் வில்லனாக நடித்து பாராட்டப்பட்ட ஆண்ட்ரூ ஸ்காட்டுக்கு இது அடுத்தகட்ட பாய்ச்சல். மற்ற கதாபாத்திரங்கள் யாவும் நினைவில் கூட இல்லாத வகையில் தனது அசுரத்தனமான நடிப்பால் கலக்கியிருக்கிறார்.

குறையென்று பார்த்தால், ரிப்ளி செய்யும் திருட்டுத்தனங்கள் அனைத்தும் எப்படி அவருக்கு எந்த சிக்கலும் இல்லாமல் கைக்கூடி வருகின்றன என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. உதாரணமாக டிக்கியைப் போல வாழ்ந்து கொண்டிருக்கும் ரிப்ளியின் போட்டோவை டிக்கியின் காதலியிடம் கேட்க வேண்டும் என்ற யோசனை ஒரு போலீஸ்காரருக்கு கூட தோன்றவில்லை என்பதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

அடர்த்தியான காட்சியமைப்பு, ஆழமான வசனங்கள் என சமீப ஆண்டுகளில் வெளியான முக்கியமான படைப்புகளில் ஒன்று இந்த ‘ரிப்ளி’. ஆண்ட்ரூ ஸ்காட்டின் நடிப்புக்காகவும், வியக்க வைக்கும் ஸ்டீவன் ஸைல்லியனின் புத்திசாலித்தனமான திரைக்கதைக்காகவும் அவசியம் பார்க்கலாம். நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இத்தொடர் காணக் கிடைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x