Published : 04 Jan 2024 02:57 PM
Last Updated : 04 Jan 2024 02:57 PM
பான் இந்திய சினிமாக்களின் தாக்கத்தால் துப்பாக்கி குண்டுகள், பீரங்கி சத்தங்கள் என பான் இந்தியா மோகத்தில் மூழ்கியிருந்த பாலிவுட் உலகம் தற்போது மெல்ல தன்னுடைய இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியிருக்கிறது. ஆக்ஷன் படங்கள் ஒருபுறம் வந்து கொண்டிருந்த ‘லன்ச் பாக்ஸ்’, ‘சார்’, ‘மை நேம் இஸ் கான்’ என மனதை வருடும் மெல்லிய கதைகளை தேர்ந்தெடுத்து ஜெயித்த பாலிவுட் உலகம், பான் இந்தியா படங்களின் வருகையால், சரியான கதைக்களங்கள் இன்றி ரொம்பவே ஆடிப் போயிருந்தது. அந்த குறையை போக்க வந்த படம்தான் ‘12த் ஃபெயில்’. கடந்த அக்டோபரில் திரையரங்கில் வெளியாகி வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகி பாராட்டுகளை குவித்து வருகிறது.
வழிப்பறி கொள்ளையர்களுக்கு பேர்போன சம்பல் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் மனோஜ் குமார் சர்மா (விக்ராந்த் மாஸ்ஸே). தேர்வில் ஆசிரியர்களே மாணவர்களுக்கு காப்பி அடிக்க உதவி செய்யும் ஒரு பாரம்பரியத்தை கொண்ட பள்ளியில் படிக்கும் அவர், ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் அறிவுரையின் படி நேர்மையாக படித்து +2 பாஸ் ஆகிறார். அதே அதிகாரியைப் போல தானும் ஒரு போலீஸ் ஆக வேண்டும் என்கிற கனவோடு டெல்லி ஓடிவரும் அவருக்கு, சில நண்பர்கள் கிடைக்கின்றனர். அவர்களது உதவியுடன் நாட்டின் மிகப்பெரிய தேர்வான சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிக்கிறார். குடும்பச் சூழலை கருத்தில் கொண்டு மாவு மில், டீக்கடை, நூலகம் என பல இடங்களில் வேலை செய்து கொண்டே படிக்கும் அவர், இறுதியில் தனது கனவை அடைந்தாரா இல்லையா என்பதை மிக உணர்வுபூர்வமாகவும், சுவாரஸ்யமான திரைக்கதையுடனும் சொல்லி இருக்கிறது ‘12த் ஃபெயில்’.
இந்தியில் ராஜ்குமார் இரானி இயக்கிய ‘முன்னாபாய் எம்பிபிஎஸ் (தமிழில் ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’), ‘த்ரீ இடியட்ஸ்’ (தமிழில் ‘நண்பன்’) ஆகிய படங்களை தயாரித்து எழுதிய விது வினோத் சோப்ராவின் அடுத்த படைப்பு. நீண்ட வருடங்களுக்கு ஓர் இயல்பான வட இந்திய கிராமம். கடைசியாக அமேசான் ப்ரைமில் வெளியான ‘பஞ்சாயத்’ வெப் தொடரில் இத்தகைய கிராமத்தை பார்த்திருப்போம். எந்த ஓர் அடிப்படை வசதியும் இல்லாத, துப்பாக்கிகள் சர்வ சாதாரணமாக புழங்கக் கூடிய ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், தனது தந்தைக்கு நேர்ந்த அவமானத்துக்கு பதிலாக துப்பாக்கியை தூக்காமல், கல்வியை தேர்வு செய்யும் ஒரு உண்மைக் கதையை கற்பனை கலந்து திரையில் தந்திருக்கிறார் விது.
ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் குமார் சர்மாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு அசோக் குமார் பதக் எழுதிய புத்தகத்தை தழுவி இப்படம் உருவாகியிருக்கிறது. கல்வியில் பின்தங்கிய சமூகம், வெற்றிக் கனியை பறிக்கப் போராடும் இளைஞர், ஏழ்மை என்றவுடன் சோக வாத்தியங்களை ஓங்கி ஒலிக்கச் செய்து நெஞ்சைப் பிழியாமல் மிக இயல்பாகவும், அதே நேரம் உணர்வுபூர்வமாகவும் காட்சிகள் நகர்கின்றன.
ஒரு காட்சியில் மகனிடம் ‘நம்மால் இந்த சண்டையில் ஜெயிக்க முடியாது’ என்று மனம் நொந்து பேசும் தந்தையிடம் ‘ஆனால் நாம் தோல்வியையும் ஏற்றுக் கொள்ள தேவையில்லை’ என்று மகன் சொல்லும் காட்சி நெகிழ வைக்கிறது. படம் முழுக்க இது போல நம்மை நெகிழ வைக்கும் காட்சிகள் ஏராளம் உள்ளன.
இன்னொரு பக்கம் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் கிராமத்து பின்னணி கொண்ட மாணவர்களிடம் காட்டப்படும் பாகுபாட்டையும் படம் தோலுரிக்கிறது. படத்தின் பல்வேறு இடங்களில் அப்துல் கலாமும், அம்பேத்கரும் அடிக்கோடிட்டு காட்டப்படுகின்றனர்.
நாயகனாக விக்ராந்த் மாஸ்ஸேவின் திரை வாழ்வில் இது மிக முக்கியமான படம். ஒரு நேர்மையான அதிகாரியை வியந்து பார்க்கும் மாணவனாக, டெல்லிக்கு வந்து இரவு பகலாக அல்லல்படும் இளைஞனாக, தன்னோடு எல்லா வகையிலும் உறுதுணையாக நிற்கும் பெண்ணின் பால் ஈர்க்கப்படும் காதலனாக நுணுக்கமான உணர்வுகளை வெளிப்படுத்தி கவர்கிறார்.
டெல்லிக்கு வரும் நாயகனுக்கு தோள் கொடுத்து உதவும் நண்பனாக வரும் ஆனந்த் ஜோஷி, எந்த சூழலில் நாயகனை குறைத்து மதிப்பிடாத நாயகி பாத்திரத்தில் நடித்துள்ள மேதா ஷங்கர், தான் தோற்றாலும் அதை பற்றி கவலைப்படாமல் தன்னுடைய அடுத்த தலைமுறையின் வெற்றிக்கு உழைக்கும் கவுரி பைய்யாவாக வரும் அன்ஷுமான் புஷ்கர், ஹீரோவின் அம்மாவாக வரும் கீதா அகர்வால் என படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மனதை விட்டு அகல மறுக்கின்றன.
இப்படம் ஒரு ஏழை இளைஞனின் வெற்றியை பற்றி மட்டும் பேசவில்லை. அது நம் தாயின் தியாகங்களை நினைவூட்டும், நம் தந்தையின் போராட்டங்களை நினைவூட்டும், நம்மோடு எப்போதும் துணை நிற்கும் நண்பர்களை கண்முன் கொண்டு வரும். நம்மை புன்னகைக்கவும், சில இடங்களில் குமுறி அழவும் வைக்கும்.
எந்தச் சூழல் வந்தாலும் கல்வியே நமக்கான ஆயுதம் என்பதை மிக ஆணித்தரமாக, எந்த இடத்திலும் சுவாரஸ்யம் குன்றாத திரைக்கதையின் வாயிலாக சொல்லியிருக்கிறது இந்த ’12த் ஃபெயில்’. இப்படம் ஹாட்ஸ்டார் தளத்தில் காணக்கிடைக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT