Last Updated : 01 Nov, 2023 02:33 PM

 

Published : 01 Nov 2023 02:33 PM
Last Updated : 01 Nov 2023 02:33 PM

ஓடிடி திரை அலசல் | Kaala Paani - பெருந்தொற்று பின்னணியில் மனிதம் பேசும் அட்டகாச வெப் சீரிஸ்!

கரோனா போன்ற பெருந்தோற்றை அடிப்படையாகக் கொண்டு உலகம் முழுவதும் ஏராளமான படைப்புகள் சமீபகாலத்தில் வெளியாகியிருந்தாலும் இந்தியாவிலிருந்து நேர்த்தியான திரைக்கதையுடனும், உணர்வுபூர்வமான ககாபாத்திர வடிவமைப்புடனும் மனிதம் பேசும் படைப்பாக வெளியாகியிருக்கிறது ‘காலா பாணி’ இந்தி வெப் தொடர். தமிழிலும் காணக் கிடைக்கிறது.

கதை 2027-ஆம் ஆண்டில் நடக்கிறது. அந்தமான் தீவில் சுற்றுலா பயணிகளுக்கான ஒரு மாபெரும் திருவிழாவை அரசு ஏற்பாடு செய்கிறது. தீவில் மர்ம நோய் ஒன்று மெல்ல பரவிக் கொண்டிருப்பதை தனது ஆய்வின் மூலம் கண்டறிகிறார் தலைமை மருத்துவ அதிகாரி சவுதாமினி சிங் (மோனா சிங்). அந்தமானின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் திருவிழாவால் அந்த தொற்று வேகமாக பரவக்கூடும் என்று அந்தமானின் துணை நிலை ஆளுநர் ஜிப்ரான் காத்ரியிடம் (அஷுடோஷ் கோவாரிகர்) எச்சரிக்கிறார். ஆனால், தொற்று குறித்த போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்க இயலாததால் திருவிழா நடப்பதை சவுதாமினியால் தடுக்க இயலவில்லை. சவுதாமினியின் கூற்றுப்படியே ‘LHF-27' எனப்படும் அந்தக் கொடும் தொற்று தீவு முழுக்க பரவி ஏராளாமான சுற்றுலா பயணிகளின் உயிரை குடிக்கிறது. தீவு முழுக்க கடும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

அதிகவேகமாக பரவும் அந்த தொற்றின் பிறப்பிடம் எது? அந்தமானின் பூர்வக்குடிகளான ஓராகா பழங்குடி மக்கள் தொற்றை முன்கூட்டியே கணித்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்றது எப்படி? இறுதியில் தொற்றுக்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டதா என்பதை பல்வேறு கிளைக்கதைகளுடன் சொல்கிறது ‘காலா பாணி’.

‘காலா பாணி’ என்ற பெயருக்கு ஏற்ப கதை முழுக்கவே அந்தமான் தீவில் நடக்கிறது. தொடரின் ஆரம்பத்தில் ‘காலா பாணி’ பெயருக்கான பின்னணி, காலா பாணி சிறையையும், அந்தமான் தீவையும் ஒப்பிட்டு வைக்கப்பட்டுள்ள வசனங்கள் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. பெருந்தொற்று பரவல் என்ற ஒற்றை கதைக்களத்தை கையில் எடுத்துக் கொண்டு அதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காடுகள் அழிப்பு, கார்ப்பரேட்களின் பேராசை, பூர்வக்குடிகள், சாதி ஏற்றத்தாழ்வு, உறவுச் சிக்கல்கள் என பல்வேறு அம்சங்களை எந்தவித பிரச்சார நெடியும் இல்லாமல் சிறப்பாக கையாண்டுள்ளார் இயக்குநர் சமீர் சக்சேனா.

தொடரின் ஆரம்பத்தில் வரும் தவளை - தேள் பஞ்சதந்திர கதைதான் ‘காலா பாணி’யின் அடிநாதம். அதாவது ஒருவர் பிழைக்க இன்னொருவரை பலியிடுவது. இந்த ஒற்றைவரியை தொடரில் வரும் பல கதாபாத்திரங்களுடன் நாம் ஒப்பிட்டு பார்க்க இயலும். தொடக்கத்தில் மருத்துவராக வரும் மோனா சிங்கின தோள்களில் பயணிக்கும் தொடர், அடுத்தடுத்த எபிசோட்களில் கார் டிரைவராக வரும் சுகந்த் கோயல், ஆளுநராக வரும் அஷுடோஷ் கோவாரிகர், உதவி மருத்துவராக வரும் ராதிகா மெஹ்ரோத்ரா, போலீஸ் அதிகாரியாக வரும் அமேய் வாக், கடந்த கால துயரங்களில் இருந்து மீளமுடியாமல் தவிக்கும் கேரக்டரில் வரும் ஆருஷி ஷர்மா என ஒவ்வொருவரின் தோள்களில் பயணிக்கும்படி அமைக்கப்பட்ட திரைக்கதை சிறப்பு. கதையில் யாரும் வில்லனோ, ஹீரோவா இல்லை. அவரவர்க்கான சூழலில் அனைவருமே ஒருகட்டத்தில் வில்லன்களாகவும், பிறிதொரு சூழலில் ஹீரோக்களாகவும் ஆகின்றனர்.

ஆரம்ப எபிசோட்களில் நெகட்டிவ் ஆன எண்ணத்தை பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்தும் சிரஞ்சீவி என்ற கேரக்டரில் வரும் சுகந்த் கோயல், இறுதி எபிசோட்களில் தன்னுடைய மனமாற்றத்தின் மூலம் நெகிழ வைக்கிறார். இதற்கு முன்பு சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த அவருக்கு இந்தத் தொடர் புதிய கதவுகளை திறக்கும் என்று நம்பலாம். அவருக்கு அடுத்தபடியாக தண்டனை டிரான்ஸ்பரில் அந்தமானுக்கு வந்து, அங்கிருந்து வெளியேற மனசாட்சிக்கு விரோதமான வேலைகளை செய்து நம்மை எரிச்சலூட்டும் காவல் அதிகாரியாக வரும் அமே வாக். இவரது கதாபாத்திரம் நல்லதா கெட்டதா என்று ஆங்காங்கே நமக்கு குழப்பம் ஏற்பட்டாலும் இறுதியில் அதற்கான விடையையும் அந்த கதாபாத்திரம் உணர்த்திவிடுகிறது. இவர்கள் தவிர ஆளுநராக வரும் ‘ஸ்வதேஸ்’ இயக்குநர் அஷுடோஷ் கோவாரிகர், விகாஸ் குமார், ராதிகா மெஹ்ரோத்ரா, ஆருஷி ஷர்மா என அனைவரும் நிறைவான நடிப்பை வழங்கியிருக்கின்றனர்.

திரைக்கதையில் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் எழுதப்பட்டுள்ள முன்கதையும், அதனுடன் தற்காலத்துடனான ஒப்பீடும் புதிய முயற்சி. கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் நான் லீனியர் முறையில் அடுத்தடுத்து காட்டுவது கதையின் ஓட்டத்துக்கு கைகொடுக்கிறது. தொடரின் பெரும்பலமே ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் மனதைத் தொடும் வசனங்கள்தான். தொற்று பரவல் என்ற ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு அதனை வெறும் மருத்துவ ரீதியில் காட்சிப்படுத்தாமல், மனித உணர்வுகளின் பின்னணியில் சிறப்பான வசனங்களின் மூலம் சொல்லியிருப்பதே பார்ப்பவர்களை எங்கும் திசை திரும்பாமல் வைத்திருக்க உதவுகிறது. ஓடிடியில் இருக்கும் அதீத சுதந்திரத்தை பயன்படுத்தி தகாத வார்த்தைகளையும், பாலுறவு காட்சிகளையும் அள்ளி தெளிக்காமல், அவை வைக்கப்பட வேண்டிய இடங்கள் இருந்தும் லாவகமாக தவிர்த்தது பாராட்டத்தக்கது. தாராளமாக குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கலாம்.

ரச்சிதா அரோராவின் இசையில் அவ்வப்போது வரும் அந்த தமிழ் தாலாட்டு பாடல் அருமை. பின்னணி இசையும் கதையின் ஓட்டத்துக்கு வலு சேர்க்கிறது. முன்பின் கதை சொல்லல் முறையை பார்வையாளர்களுக்கு குழப்பாமல் கடத்தியதில் தேவ் ராவ் ஜாதவின் எடிட்டிங் உதவியுள்ளது.

இறுதி எபிசோடில் பல கதாபாத்திரங்களுக்கு வலுக்கட்டாயமாக முடிவுரை எழுதியது போன்ற உணர்வு எழுவதை தவிர்த்திருக்கலாம். கடைசியில் வைக்கப்பட்டுள்ளது இரண்டாம் சீசனுக்கான குறியீடா அல்லது இத்துடன் தொடர் முடிந்துவிட்டதா என்ற குழப்ப நிலையிலேயே பார்வையாளர்களை விட்டிருப்பது ஏமாற்றம். எனினும், ஒரு விறுவிறுப்பான ச்ர்வைவல் த்ரில்லர் சீரிஸை ‘பிங்கே வாட்ச்’ செய்ய விரும்புபவர்கள் தாராளமாக குடும்பத்துடன் பார்க்கலாம். ‘காலா பாணி’ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணக்கிடைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x