Published : 18 Oct 2023 08:20 PM
Last Updated : 18 Oct 2023 08:20 PM
அருண்ராஜா காமராஜ் இயக்கும் ‘லேபிள்’ வெப் சீரிஸ் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘கனா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் கடந்தாண்டு மே மாதம் வெளியான படம் ‘நெஞ்சுக்கு நீதி’. உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்திருந்த இப்படம் இந்தியில் வெளியான ‘ஆர்டிக்கள் 15’ படத்தின் அதிகாரபூர்வ தழுவலாக வெளியாகி வரவேற்பை பெற்றது.
இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அருண்ராஜா காமராஜ் அடுத்ததாக இணையத் தொடர் ஒன்றை இயக்கியுள்ளார். ‘லேபிள்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடரில் ஜெய், தன்யா ஹோப், மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தத் தொடருக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுத்தாளராக பங்களித்துள்ள இத்தொடருக்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தத் தொடர் விரைவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்த வெப்சீரிஸின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ட்ரெய்லர் எப்படி?: வட சென்னை மக்கள் மீதான தவறான முத்திரையை மாற்றியமைக்கும் வகையில் வெப் சீரிஸ் உருவாகியுள்ளதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. ‘இந்த ஏரியாக்காரன்னா இப்படிதான்ன்னு லேபிள் ஒட்டிட்றாங்க’ என்ற ‘லேபிள்’ஐ கிழிக்க முயன்று ‘அங்க எல்லாரும் அப்டி இல்லல்ல மிஸ்’ என சிறுவன் பேசும் வசனம் அழுத்தம் கூட்டுகின்றது. வழக்கறிஞராக ஜெய் பேசும் வசனங்களும் ஈர்க்கின்றன.
‘நான் தப்பு பண்ணனா இல்லையான்னு முடிவு பண்றதுக்கு என் ஏரியா பேர் போதும்னு முடிவு பண்றாங்கன்னா, மாத்த வேண்டியது ஏரிய பேரல இல்ல... அந்த எண்ணத்த’ என்ற வசனங்கள் வெப் சீரிஸின் அடர்த்தியை உணர்த்துகின்றன. ‘நெஞ்சுக்கு நீதி’ படம் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை பேசிய அருண்ராஜா வடசென்னையை பின்னணியாக கொண்ட கதையுடன் வெப்சீரிஸில் நுழைந்திருக்கிறார். ட்ரெய்லர் நம்பிக்கை கொடுக்கிறது. வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை. ட்ரெய்லர் வீடியோ:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT