Published : 15 Sep 2023 12:29 PM
Last Updated : 15 Sep 2023 12:29 PM
19ஆம் நூற்றாண்டில் ஜப்பான் நாட்டிலிருந்து உருவாகி உலகம் முழுவதும் பெரும் புகழ் பெற்றவை மங்கா கிராஃபிக் நாவல்கள். இதிலிருந்து வெளியான ‘நரூடோ’, ‘ஆஸ்ட்ரோ பாய்’, ‘ஒன் பீஸ்’ உள்ளிட்ட ஏராளமான தொடர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. இவை அனிமே கார்ட்டூன் தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் கூட உருவாக்கப்பட்டன. அந்த வரிசையில் மங்கா தொடரில் கிராபிக் நாவலாகவும் பின்னர் அனிமே தொடராகவும் ஆயிரம் எபிசோட்களை கடந்த ‘ஒன் பீஸ்’ என்ற படைப்பு தற்போது வெப் தொடராக வெளியாகியுள்ளது.
கடற்கொள்ளையர்களின் தலைவராக கோல்டு ரோஜர் என்பவரை ஒருவரை அரசாங்கம் தூக்கில் போடுகிறது. சாகும்முன் மக்களை பார்த்து தான் இதுவரை கொள்ளையடித்த பொக்கிஷங்கள் இருக்கும் இடம் பற்றி சொல்லிவிட்டு சாகிறார் கோல்டு ரோஜர். இதனால் அந்த ஊரில் இருந்த மக்கள் அனைவருமே கடல்கொள்ளையராக மாறி கடலை நோக்கி பயணப்படுவதுடன் கதை தொடங்குகிறது. இது நடந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு, மங்கி டி.லூஃபி என்ற சிறுவன் சிறு வயது முதலே கடற்கொள்ளையரகளின் அரசனாக வேண்டும் என்று வெறியுடன் வாழ்கிறான். அவன் எண்ணம் செயல் அனைத்தும் அதை நோக்கியதாகவே இருக்கிறது. சிறு வயதில் அவன் சாப்பிடும் ‘டெவில் ஃப்ரூட்’ என்ற பழத்தால் அவனுடைய உடல் எலாஸ்டிக் தன்மை கொண்டதாக மாறுகிறது. அவனது உடலை எவ்வளவு நீளத்துக்கு வேண்டுமானாலும் நீட்ட முடியும்.
ஆழ்கடலில் இருக்கும் ‘ஒன் பீஸ்’ என்ற ரகசிய பொருளை கண்டடைந்து கடற்கொள்ளையர்களின் அரசனாகும் நோக்கில் பயணம் மேற்கொள்ளும் லூஃபி, வழியில் கடற்கொள்ளையர்களை வேட்டையாடும் வாள் வீரன் ரொரோனா ஜோரோ, நாமி என்ற இளம்பெண், யூசுப் என்ற உண்டிவில் வீரன், சான்ஜி என்ற சமையல் கலைஞன் ஆகிய வெவ்வேறு நோக்கங்களைக் கொண்ட சிலரை தன்னுடைய கூட்டாளிகளாக சேர்த்துக் கொண்டு ‘ஸ்ட்ரா பைரேட்ஸ்’ என்ற ஒரு குழுவையும் உருவாக்குகிறான். பயணத்தினூடே சில எதிரிகளையும் எதிர்கொள்கிறான். லூஃபியின் நோக்கம் நிறைவேறியதா? ஸ்ட்ரா பைரேட்ஸ் குழுவின் பயணம் வெற்றிபெற்றதா என்பதை எட்டு எபிசோட்களாக சொல்லியிருக்கிறது ‘ஒன் பீஸ்’.
புகழ்பெற்ற ஒரு நாவலையோ அல்லது வேறு ஒரு வடிவத்தில் இருக்கும் படைப்பையோ லைவ் ஆக்ஷன் படைப்பாக திரையில் கொண்டு வருவதில் இரண்டு சவால்கள் உள்ளன. அசல் படைப்பின் நீண்டகால ரசிகர்களை அது திருப்திபடுத்தாமல் போகலாம். அல்லது அதில் புதிய தலைமுறையினரை கவரும்படியான அம்சங்கள் இல்லாமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்படலாம். ஆனால் இந்த இரண்டு சவால்களையும் வென்று அசலுக்கு பாதிப்பில்லாத வகையில் தரமான படைப்பாக வெளியாகியுள்ளது ‘ஒன் பீஸ்’ தொடர்.
1999ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை ஏறக்குறைய 20 ஆண்டுகள் 1000 எபிசோட்களாக ஒளிபரப்பாகிய அனிமே தொடரை எந்தவித குழப்பங்களோ, பெரியளவில் மாற்றங்களோ இல்லாமல் ஒரு வெப் தொடராக கொண்டு வந்ததற்கே திரைக்கதை எழுத்தாளர்கள் மேட் ஓவன்ஸ், ஸ்டீவன் மேடா இருவரையும் பாராட்டலாம். ’பைரேட்ஸ் ஆஃப் தி கர்ரிபியன்’ படங்களின் வழியே கடற்கொள்ளையர்கள் நமக்கு ஏற்கெனவே பரிச்சயம்தான் என்றாலும், ‘ஒன் பீஸ்’ கதாபாத்திரங்கள் நாம இதுவரை பார்த்தவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை.
‘ஒன் பீஸ்’ தொடர் நடக்கும் காலகட்டமே வித்தியாசமானது. நவீனமும், பழமையும் கலந்து ஒரு கற்பனை உலகமாக அது நமக்குக் காட்டப்படுகிறது. எந்தகாலகட்டத்தில் நடக்கும் கதை என்பதை யூகிக்க முடியாத ஒரு ‘யுடோபியா’ கதைக்களம். கதை முழுக்க வரும் சின்னச் சின்ன ஃப்ளாஷ்பேக் காட்சிகள் மூலம் அந்தந்த கதாபாத்திரங்களுடன் நாம் ஒன்ற முடிகிறது. குறிப்பாக ஸோரோ மற்றும் நாமியின் பின்னணி மிகவும் உணர்வுபூர்வமாக எழுதப்பட்டுள்ளன. முதலில் லூஃபியின் குழுவின் இணைய மறுக்கும் ஸோரோ மற்றும் நாமி இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக தங்களையே அறியாமல் லூஃபியின் மீது அன்பு செலுத்தும் காட்சிகளும், ஒவ்வொரு எபிசோடிலும் ஒவ்வொரு புதிய எதிரியை கொண்டு வந்த விதமும் சிறப்பு. கெக்கோ என்ற தீவில் இருக்கும் சிரப் கிராமத்தில் பட்லர் வேடத்தில் ஒளிந்துகொண்டிருக்கும் கடற்கொள்ளையனின் கதை ஒரு த்ரில்லர் படத்துக்கு ஒப்பான வகையில் படமாக்கப்பட்டுள்ளது.
முகத் தோற்றம், பேச்சு, செயல் என இளவயது சிம்புவை ஞாபகப்படுத்தும் மங்கி டி.லூபி ஆக இனாகி காட்பாய். துறுதுறுப்பு, கண்களை உருட்டி உருட்டி பேசும் குறும்பு என தொடர் முழுக்க தன்னுடைய நடிப்பால் ஈர்க்கிறார். அனிமே ரசிகர்களே மங்கி. டி.லூஃபிக்கு இதை விட சரியான ஆள் கிடைக்கமாட்டார் என்று பாராட்டும் அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஜாக் ஸ்பார்ரோ போன்ற கதாபாத்திர வடிவமைப்பு என்றாலும் தன்னுடைய தனித்துவ நடிப்பால் மிளிர்கிறார். லூஃபிக்கு அடுத்தபடியாக தொடரில் சில எபிசோட்களே வந்தாலும் அழுத்தமான நடிப்பை வழங்கியிருப்பவர் பக்கி தி கிளவுன் பாத்திரத்தில் நடித்த ஜெஃப் வார்ட். உருவ தோற்றத்தை மட்டுமே வைத்து நடிகர்களை தேர்வு செய்யாமல் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தன்மையை கருத்தில் கொண்டு அதற்கேற்ப நடிகர்களை தேர்வு செய்வு செய்துள்ளனர். இந்த காலத்துக்கு ஏற்ப மாற்றம் செய்கிறேன் என்று எந்த கதாபாத்திரத்தை குதறவில்லை.
முதல் இரண்டு எபிசோட்களில் கதைக்குள் செல்ல நேரமெடுத்தாலும், ஆழமான பின்னணிகளின் மூலம் அடுத்தடுத்த எபிசோட்கள் சூடுபிடிக்கத் தொடங்கி விடுகின்றன. தொடரின் பலமே கதை நெடுக வரும் கலகலப்பான, கலர்ஃபுல்லான காட்சியமைப்புகள் தான். எந்த இடத்திலும் தீவிரத்தன்மை வந்துவிடக்கூடாது என்ற கவனத்துடன் திரைக்கதையை அமைத்துள்ளனர். நத்தை டெலிபோன்கள், சூப்பர்பவர் தரும் டெவில் பழங்கள், சமூகத்தால் ஒடுக்கப்பட்ட மீன் மனிதர்கள் என தொடரில் சுவாரஸ்யமான ஃபேண்டஸி அம்சங்கள் அநேகம் உள்ளன.
தொடரில் சில குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. குழுவில் முக்கிய அங்கமான நாமி துரோகம் செய்தும் கூட லூஃபியும் மற்ற நண்பர்களும் அவருக்கு தேடிச் சென்று உதவுவது ஏன் என்பதற்கான விளக்கம் தெளிவாக சொல்லப்படவில்லை. அதே போல இறுதிப் பகுதில் ஆர்லாங்க் கூட்டத்தை வீழ்த்துவதற்கு லூஃபி குழுவினர் ஆயத்தமாகும் காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றன.
சோன்யா பெலோசோவா மற்றும் ஜியோனாவின் பின்னணி இசை கச்சிதம். குறிப்பாக ஒன் பீஸ் டைட்டில் இசை சில நாட்களுக்கு காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
முன்பே குறிப்பிட்டது போல புகழ்பெற்ற ஒரு படைப்பை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாக்குவது ஒரு சவால். அந்த சவாலை மிகச் சிறப்பாக கையாண்டு அசல் படைப்புக்கு நியாயம் செய்துள்ளது இந்த ‘ஒன் பீஸ்’ வெப் தொடர். தற்போது நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT