Last Updated : 21 Aug, 2023 02:29 PM

 

Published : 21 Aug 2023 02:29 PM
Last Updated : 21 Aug 2023 02:29 PM

Guns & Gulaabs Review | ரத்தமும் பகடியும் கலந்த நாஸ்டால்ஜியா அனுபவம்!

‘தி ஃபேமிலிமேன்’, ‘ஃபார்சி’ தொடர்களின் மூலம் சர்வதேச தரத்திலான வெப் தொடர்கள் இந்தியாவிலும் சாத்தியப்படுத்திய ராஜ் & டிகேவின் அடுத்த படைப்பாக வெளிவந்துள்ளது ‘கன்ஸ் & குலாப்ஸ்’ வெப் சீரிஸ்.

குலாப்கன்ஜ் என்னும் எழில் மிகுந்த ஒரு மலைகிராமம். இறந்துபோன கேங்ஸ்டரான தனது தந்தையின் நிழலிருந்து தப்பித்து தனக்கென ஓர் இடத்தை உருவாக்க நினைக்கும் டிப்பு (ராஜ்குமார் ராவ்), ஊரையே ஆட்டிப் படைக்கும் ஓபியம் போதைப்பொருள் விற்பன்னரான தனது தந்தையின் இடத்தைப் பிடிக்கத் துடிக்கும் ஜுக்னு (ஆதர்ஷ் கவுரவ்), குலாப்கன்ஜ் கிராமத்தில் கேங்க்ஸ்டர்களுக்கும் போலீஸுக்கும் இருக்கும் சமநிலையை உடைக்கும் புதிய போதைப் பொருள் தடுப்பு அதிகாரி அர்ஜுன் வர்மா (துல்கர் சல்மான்), சாவே இல்லாதவர் என்று மக்களால் நம்பப்படும் கூலிப்படை கொலையாளி ஆத்மாராம் (குல்ஷன் தேவய்யா)... இவர்களைச் சுற்றித்தான் இந்தத் தொடர் முழுவதும் நகர்கிறது. வெவ்வேறு பாதைகளையும் பின்னணிகளையும் கொண்ட இவர்கள் நால்வரும் ஒரே புள்ளியில் இணைவதை ரத்தமும், பகடியும் தெறிக்கும்படி சொல்லியிருக்கிறார்கள் இயக்குநர்கள் ராஜ் & டிகே.

தொடரின் முதல் எபிசோட் தொடங்கும்போது ஊரின் மிகப் பெரிய கேங்க்ஸ்டர் ஒருவரின் தலைமை அடியாளும், ராஜ்குமார் ராவின் தந்தையுமான பாபு டைகரை அவரது எதிரிகள் சிலர் ஓபியம் தோட்டத்தில் வைத்து வெட்டிக் கொள்கின்றனர். கழுத்து வெட்டப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடும் நிலையில் இருக்கும் பாபு டைகர் வாயில் சிகரெட்டை வைத்து ஊதுகிறார். கழுத்தில் இருக்கும் வெட்டுக் காயம் வழியாக புகை வெளியேறுகிறது. தொடரில் இருக்கும் ரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகளுக்கு இது ஒரு பதம்.

கதை 90களின் தொடக்கத்தில் நடப்பதால் தொடர் முழுக்க ஏராளமான நாஸ்டால்ஜியா அம்சங்கள் சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளன. சச்சின் டெண்டுல்கரின் அறிமுகம், கபில் தேவ், உலக மயமாக்கலுக்கு முன்பு அமெரிக்க பானங்களின் வருகைக்கு முன்பு ஆதிக்கம் செலுத்தி வந்த கேம்பகோலா, கோல்டுஸ்பாட் உள்ளிட்ட குளிர்பானங்கள், லவ் லெட்டர்கள், டெலிபோன் பூத், ஜாவா புல்லட் ஆகியவை தொடர் முழுக்க கேமியோ செய்துள்ளன. ஒவ்வொரு எபிசோடுக்கும் அப்போது இந்தியில் பிரபலமாக இருந்த பாடல் வரிகள் அல்லது பட வசனங்கள் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளன. வில்லனாக வரும் குல்ஷன் தேவய்யாவின் ஹேர்ஸ்டைல் கூட சஞ்சய் தத்தின் ‘கல் நாயக்’ கதாபாத்திரத்தை நினைவூட்டுவதாக உள்ளது.

குலாப்கன்ஜ் கிராமம் அதனை ஒட்டியுள்ள ஷெர்பூர் என்ற கிராமம் இரண்டுக்குமே ஓபியம் உற்பத்திதான் பிரதான தொழில். இரண்டு கிராமத்தினருக்கும் இடையே இருக்கும் தொழில்போட்டியால் இரண்டுக்கும் நடுவே இருக்கும் ஒரு உணவகத்தில் ‘சம்சாரம் அது மின்சாரம்’ பாணியில் கோடு போடப்பட்டு ஒரு பக்கம் குலாப்கன்ஜ் மக்கள் இன்னொரு பக்கம் ஷெர்பூர் மக்கள் என பயன்படுத்துகின்றனர். இது போல தொடர் முழுக்க சின்னச் சின்ன சுவாரஸ்யங்கள் தூவப்பட்டுள்ளன.

தொடரின் பாசிட்டிவ் விஷயங்களில் ஒன்று அதன் நடிகர்கள் தேர்வு, கேங்ஸ்டராக மாறினாலும் அப்பாவித்தனம் மாறாத ராஜ்குமார் ராவ், நேர்மையான அதிகாரியாக இருந்தாலும் குடும்பத்துக்காக பாதையை மாற்றும் துல்கர் சல்மான், தோற்றத்திலேயே பயமுறுத்தும் குல்ஷன் தேவய்யா என ஒவ்வொருவரும் போட்டிபோட்டு நடித்துள்ளனர். தொடரில் குறிப்பிடத்தகுந்த நடிப்பு ஆதர்ஷ் கவுரவ் உடையது. தந்தையின் நிழலிலேயே சுற்றிக் கொண்டிருக்கும் அவர், திடீரென தந்தை படுத்த படுக்கையானதும் அவரது இடத்தை தக்கவைக்க அல்லாடும் காட்சிகளில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இவரது கதாபாத்திரம் நல்லதா கெட்டதா என்ற குழப்பம் கடைசிவரையில் நீடிக்கிறது.

நடுவில் துல்கரின் மகளாக அவரும் ஜ்யோஸ்னா - நன்னு பள்ளிப் பருவ காதல் காட்சிகள் ‘க்யூட்’ ரகம். பள்ளி மாணவர்களாக வரும் சிறுவர்களும், ஆசிரியையாக வரும் டி.ஜே.பானுவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

மன் பன்ட்டின் பின்னணி இசை தொடருக்கு பெரும் பலம். 80,90களின் பாலிவுட் இசையை கச்சிதமாக மீளுருவாக்கம் செய்திருப்பது காட்சிகளுடன் ஒன்ற உதவுகிறது. தொடரின் மற்றொரு பாசிட்டிவ் அம்சம், தொடக்கம் முதல் இறுதி வரை வரும் பகடி. சீரியசான காட்சிகளுக்கு நடுவே வரும் பகடியான காட்சிகளும், ஸ்பூஃப் போன்ற காட்சியமைப்புகளும் திரைக்கதை சலிப்படையச் செல்லாமல் செல்ல உதவுகின்றன. குறிப்பாக ராஜ்குமார் ராவ் ‘ஸ்பானர்’ டிப்புவாக மாறும் காட்சிகள் சிறப்பு.

தொடரில் குறைகள் இல்லாமல் இல்லை. இரண்டு கொலைகளை செய்துவிட்டு ராஜ்குமார் ராவ் ஜாலியாக சுற்றித் திரிகிறார். போலீஸ்காரர்களுக்கு ஊரில் வேலையே இல்லாதது போல காட்டப்பட்டிருப்பது நெருடல். அதே போல கடைசி எபிசோடில் கதாபாத்திரங்களுக்கு அவசரகோலத்தில் முடிவுரை எழுதப்பட்டிருப்பது அப்பட்டமாக தெரிகிறது. இறுதியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியை ஒரே இடத்தில் அடைபட்டு பின்னர் நாயகனால் காப்பாற்றப்படுவது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. ஓரிரு எபிசோட்களில் வரும் தேவையற்ற காட்சிகளை கத்திரி போட்டிருந்தால் கடைசி எபிசோடை ஒரு திரைப்படம் போல நீட்டியிருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது.

‘கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூர்’ பாணியிலான ரத்தம் தெறிக்கும் வன்முறை கொண்ட கேங்க்ஸ்டர் படங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்றால் இப்படம் நிச்சயம் உங்களை கவரும். ‘தி ஃபேமிலிமேன்’, ‘ஃபார்சி’ அளவுக்கு இல்லை என்றாலும், சலிப்படைய வைக்காத திரைக்கதைக்காகவும், கலகலப்புக்கு உத்தரவாதம் தரும் பகடிக்காகவும் இத்தொடரை நிச்சயம் வரவேற்கலாம். இத்தொடர் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x