Published : 12 Oct 2017 10:20 AM
Last Updated : 12 Oct 2017 10:20 AM

உடல் வளர்த்தேன்.. உயிர் வளர்த்தேனே 24: டெங்குவை தடுக்கும் யோகாசனங்கள்

பசுஞ்சாணம் நல்ல கிருமிநாசினி என்பதை உணர்ந்த நம் முன்னோர், அதைக் கொண்டு வாசல் தெளித்து கோலமிட்டனர். இதுபோன்ற பாரம்பரிய பழக்க வழக்கங்களில் இருந்து நாம் விலகிச் சென்றுகொண்டே இருக்கிறோம். அதனால்தான் புதுப் புது வியாதிகளோடு போராட வேண்டியிருக்கிறது.

தற்போது டெங்கு காய்ச்சல் பரவிவரு கிறது. டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் வருமுன் காத்துக்கொள்ள, முதலில் நாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும். போதிய நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் குழந்தைகள், அதிலும் குறிப்பாக 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்தான் டெங்குவால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். டெங்குவில் இருந்து நம்மை காத்துக்கொள்ள வழிகாட்டும் யோகாசனங்கள் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், மூட்டு வலியைப் போக்கவும் உதவுகிறது.

வழக்கமாக இரவு 10 மணிக் குள் உறங்கச் சென்று அதிகாலை 5 மணிக்குள் எழுவது; யோகாசனம், உடற்பயிற்சிகள் செய்வது; புரதச் சத்துள்ள சமச் சீர் உணவுகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வது; வீடு மற்றும் சுற்றுப்புறச் சூழலை சுகாதாரமாக வைத்துக்கொள்வது ஆகியவற்றைக் கடைபிடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பொதுவாக, உடலினை உறுதி செய்யவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் சூர்ய நமஸ்காரம் பெரிதும் உதவும். காலையில் 6 முறை சூர்ய நமஸ்காரம் செய்தாலே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

கூர்மாசனம், தனுராசனம், வஜ்ராசனம், சுத்த தனுராசனம் ஆகியவையும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் அற்புத ஆசனங்கள் ஆகும். தவிர, நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் இன்னொரு முக்கியமான ஆசனம் ஏகபாத சிரசாசனம். இது பெரியவர்களுக்கு சற்று கடினமாக இருக்கும். ஆனால், குழந்தைகள் எளிதாகச் செய்வார்கள். எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம்.

முதலில், நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். இரு கால் களையும் நன்றாக நீட்டி ரிலாக்ஸ் செய்துகொள்ள வேண்டும். இரு கைகளையும் தொடைகளுக்குப் பக்கவாட்டில் வைக்க வேண்டும். வலது காலை நீட்டி வைத்துக்கொண்டு, பொறுமையாக இடது காலை தலைக்குப் பின்னால் கொண்டுவந்து கழுத்துக்கு அருகே வைத்துக்கொள்ள வேண்டும். இரு கைகளையும் மார்புக்கு அருகே கொண்டுவந்து நமஸ்கார முத்திரையில் வைக்க வேண்டும். வலது கால் நன்றாக நீட்டி இருக்கலாம். இந்த ஆசனம் செய்யும்போது, தொடை, வயிற்றுப் பகுதிகளுக்கு நன்றாக ரத்த ஓட்டம் பாயும். பின்னர், மெதுவாக கைகளை கீழே கொண்டுவந்து, காலை பொறுமையாக நீட்டி,நேராக படுத்துக்கொண்டு 10-15 முறை மூச்சை இழுத்து விட்டு ரிலாக்ஸ் செய்யலாம். யோகா சிகிச்சை நிபுணரிடம் கற்று, அவரது மேற்பார்வையில் செய்வது நல்லது.

நின்ற நிலையிலும் இந்த ஆசனத்தைச் செய்யலாம். நேராக எழுந்து நின்றுகொண்டு, ஒரு காலை தலைக்குப் பின்னே கொண்டுவந்து கழுத்துக்கு அருகே வைத்து, கைகளை நமஸ்கார முத்திரை யில் வைக்கலாம். இது உத்தான ஏகபாத சிரசாசனம்.

இதைத் தவிர, நாடி சுத்தி பிராணாயாமம், மர்ஜரி பிராணாயாமம் ஆகியவையும் மிகுந்த பலன் தருபவை.

காய்ச்சல் போன்றவை நெருங்காமல் தடுக்கும் வழிகள்: தினமும் காலையில் சீக்கிரம் எழுந்து வீட்டைச் சுற்றி 3-5 சுற்றுகள் சைக்கிளில் சுற்றலாம். அல்லது 5-10 சுற்று கள் வேகமாக ஓடலாம். இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து, உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். சமச்சீர் உணவு, புரதச் சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.எக்காரணம் கொண் டும் டப்பாக்களில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களை சாப்பிடக்கூடாது. வெளியில் இருந்து உணவு வாங்கி உண் பதையும் தவிர்க்க வேண்டும். நார்ச்சத்து மிக்க உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாழைப்பூ, வாழைத்தண்டு, பீர்க்கங்காய், கீரை வகைகள் நல்லது. முட்டை, பேரீச்சம்பழமும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். மாலை யில் கட்டாயம் யோகாசனம், சூர்ய நமஸ்காரம் 6 சுற்று செய்ய வேண்டும். மிக முக்கியமாக, காலையில் எழுந்தவுடன், மதிய உணவுக்கு முன்பு, இரவு படுக்கப் போகும் முன்பு ஆகிய 3 நேரங்களிலும் 15 முறை நன்கு மூச்சை இழுத்து விட வேண்டும்.

- யோகம் வரும்...

எழுத்து: ப.கோமதி சுரேஷ்

படங்கள்: எல்.சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x