Published : 26 Sep 2017 10:07 AM
Last Updated : 26 Sep 2017 10:07 AM

உடல் வளர்த்தேன்.. உயிர் வளர்த்தேனே!- 11: முதுகுவலி போக்கும் பவன முக்தாசனம்

செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்க வேண்டும் என்றால், நம் உடலையும், மனதையும் எப்போதும் புத்துணர்ச்சியோடு வைத்திருக்க வேண்டும். அதற்கு நம் உடலில் எந்தவித கழிவும் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சாப்பிடும் உணவுகள் நன்றாக அரைக்கப்பட்டு, ஜீரணிக்கப்பட்டு, அதில் இருக்கும் மொத்த சத்துக்களும் உறிஞ்சப்பட்டு, அந்த சத்துக்கள் சக்தியாக மாறி நமது உடலை வலிவோடும், பொலிவோடும் வைத்திருக்க வேண்டும்.

இன்று நம்மில் பலரும் பணிநிமித்தமாக தினமும் 8-12 மணி நேரம் வரை கணினி முன்பு உட்காரவேண்டி உள்ளது. மேலும், பயணங்களின்போது வாகனங்களில் அதிக தொலைவுக்குப் பயணிக்கவேண்டி உள்ளது.

33 வகையான எலும்புகளின் கோர்வைதான் நமது முதுகெலும்பு. இவை ஒரே எலும்பாக இல்லாமல் நடுவே ஒரு வட்டைச் சுற்றி சின்னச் சின்ன எலும்புகளாக கோர்க்கப்பட்டுள்ளது. இதனால் தான் நம்மால் சிரமம் இல்லாமல் வளையவோ, நிமிரவோ, குனியவோ முடிகிறது. அப்படிப்பட்ட முதுகெலும்பை நாம் சரியாக முக்கியத்துவம் கொடுத்து கவனிக்காததால், லம்பார் ஸ்பாண்டிலோசிஸ், செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ், வெர்ட்டிகோ, கழுத்து மற்றும் இடுப்பு வலி, கைகளில் வரக்கூடிய ஃப்ரோஸன் ஷோல்டர் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

எல்லாவிதமான முதுகு வலிகளுக்கும் யோகாசனம் மூலம் தீர்வு காணலாம். பவன முக்தாசனம், சுத்த வஜ்ராசனம், மர்ஜரி ஆசனம், புஜங்காசனம், வியாகராசனம், தாடாசனம், கட்டி சக்ராசனம், மகராசனம், தனுராசனம் இவை அனைத்தும் முதுகுவலியை சரிசெய்யக்கூடிய ஆசனங்கள். இதில் அனைவரும் எளிதில் செய்யக்கூடிய இரண்டு முக்கியமான ஆசனங்களைப் பார்க்கலாம்.

பவன முக்தாசனம்

பவனம் என்றால் வாயு, காற்று. ‘முக்தா’ என்றால் விடுவிப்பது. தேவையற்ற வாயுவை நீக்கக்கூடியது என்பதால் இப்பெயர். முதலில் மல்லாந்து படுத்துக்கொள்ள வேண்டும். வலது காலை மடக்கி முட்டிப் பகுதியை வயிற்றுக்கு அருகே கொண்டுவர வேண்டும். பிறகு, பொறுமை யாக கைகளைத் தூக்கி முட்டியை இரு கைகளாலும் நன்கு அணைத்தபடி முட்டியை மார்புக்கு அருகே கொண்டுவர வேண்டும்.

இயன்றவரை மார்புக்கு நெருக்கமாக முட்டியைக் கொண்டுவர வேண்டும். இந்த நிலையிலேயே 10 விநாடிகள் வரை இருக்க வேண்டும். அல்லது 3 முறை பொறுமையாக மூச்சை இழுத்து விடவேண்டும். பின்னர், கைகளை மெதுவாக இறக்கிவிட்டு, காலையும் மெதுவாக இறக்க வேண்டும்.

இதேபோல இடதுகாலை உயர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு வலது - இடது கால்களை மாற்றி மாற்றி 3 முறை செய்ய வேண்டும். பிறகு இரு கால்களையும் மடித்து, இரு கைகளாலும் அணைத்தபடி, முட்டியை மார்புக்கு அருகே கொண்டுவந்து, வயிற்றில் நன்கு அழுந்துமாறு வைத்துக்கொண்டு பொறுமையாக மூச்சை இழுத்து விடவேண்டும்.

கீழ் மற்றும் நடு முதுகு வலிக்கு பவன முக்தாசனம் நல்ல பயிற்சி. வயிற்றுக்குள் இருக்கும் தேவையற்ற வாயுக்கள் வெளியேறும். வயிற்றுக்கு நல்ல அழுத்தம் கொடுக்கப்படுவதால் மலச்சிக்கல் வராது. ஜீரண உறுப்புகள் நன்கு வேலை செய்யும். நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு ஏற்ற ஆசனம்.

அடுத்து முதுகுவலிக்கான இன்னொரு எளிமையான ஆசனம் மர்ஜரி ஆசனம். ‘மர்ஜரி’ என்றால் பூனை. பூனைபோல உடலை வளைத்து செய்வதால் இந்தப் பெயர்.

இரு கால்களையும் மடித்து, குதிகால் பகுதியில் நமது பிட்டப் பகுதி நன்கு பதிந்திருக்குமாறு அமர்வதுதான் வஜ்ராசனம். முதலில் வஜ்ராசனத்தில் அமர வேண்டும். முட்டி போட்டு நின்றபடி, பூனைபோல கைகளை முன்னால் ஊன்றிய நிலையில் இருக்க வேண்டும்.

கால் முட்டியை சற்று அகல மாக வைத்து, கைகள் அதற்கு நேராக இருக்குமாறு சரிசெய்துகொள்ள வேண்டும். மூச்சை உள் இழுக்கும்போது தலையை நன்றாக மேலே தூக்கிப் பார்க்க வேண்டும். இந்த நிலையில் முதுகுப் பகுதி நன்கு வளைந்து, ஒரு பள்ளம்போல ஏற்படும். பிறகு மூச்சை விட்டவாறு பொறுமை யாக குனிந்து நம்முடைய தாடை மார்பைத் தொடுவதுபோல நன்றாக குனிய வேண்டும்.

இந்த நிலையில், முதுகுப் பகுதி வளைந்து, ஒரு குன்று போல காணப்படும். இவ்வாறு மாற்றி மாற்றி 3-5 முறை செய்ய வேண்டும். பிறகு, மீண்டும் வஜ்ராசனத்தில் அமரலாம். அல்லது, அப்படியே குப்புறப் படுத்து ரிலாக்ஸ் செய்துவிட்டு, பிறகு, ஒருக்களித்து ஒருபுறமாகத் திரும்பி, மல்லாக்க படுத்து சாந்தி அல்லது சவாசனத்தில் 10-15 விநாடிகள் இருந்துவிட்டு எழலாம். இப்பயிற்சியை தினமும் செய்துவர முதுகுவலி நன்கு குணமாகும்.

- யோகம் வரும்...

எழுத்தாக்கம்:

ப.கோமதி சுரேஷ்

படங்கள்: எல்.சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x