Published : 17 Oct 2017 10:44 AM
Last Updated : 17 Oct 2017 10:44 AM

உடல் வளர்த்தேன்.. உயிர் வளர்த்தேனே 29: இனிது இனிது... இனி வாழ்க்கை இனிது!

‘உடல் வளர்த்தேன்.. உயிர் வளர்த்தேனே’ என்ற பெயரில் கடந்த ஒரு மாதமாக வந்த யோகத் தொடரின் நிறைவு அத்தியாயம் இன்று. உடலை உறுதிசெய்யும் பல யோகாசனங்கள், மூச்சுப் பயிற்சிகள், முத்திரைகள் உள்ளிட்டவற்றை இத்தொடரில் அறிந்துகொண்டோம். ‘உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே’ என்பது திருமந்திரம் தந்த திரு மூலரின் வாக்கு. இந்த உடலை வளர்க்க நம் முன்னோர்கள் பல நுட்பமான வழிமுறைகளை, பயிற்சிகளை நமக்கு விட்டுச் சென்றுள்ளனர். உடல் வளர்த்தல் என்பது வெறும் உடம்பை மட்டுமே பேணிக் காக்கும் செயல் அல்ல; அதில் உள்ள உயிரையும் வளர்ப்பதுவே. உடல் ஒரு தந்திரம் என்றால், அதில் மனம் ஒரு மந்திரம். இந்த மனம் என்னும் மந்திரத்தை அடக்குகிற, வசப்படுத்துகிற தியானம், மூச்சுப் பயிற்சி, யோகாசனங்கள் ஆகியவற்றை முறையாகப் பயன்படுத்தினால் நோய் நொடியின்றி, நீண்டகாலம் இளமையாக, ஆரோக்கியமாக வாழலாம். முக்கியமான சில யோகாசனங்கள், பயிற்சிகள், குறிப்புகளை மீண்டும் ஒருமுறை நினைவுகூரலாம்.

அடிப்படையில் யோகாசனம், தியானம், பிராணாயாமம் இவற்றில் எதில் ஈடுபட்டாலும் முதலில் அதற்கு தகுந்தாற்போல உடல், மனதை தயார்படுத்த வேண்டும். ஓசோன் வாயு ததும்பி இருக்கும் அதிகாலை 4 - 6 மணி இப்பயிற்சிகளுக்கு உகந்தது. இந்த நேரத்தில்தான், நம் வயிற்றில் எந்த உணவும் தேங்கியிருக்காது. இரவு நன்றாக ஓய்வெடுத்து எழுந்த பிறகு, மனமும், உடலும் அமைதியாக இருக்கும். பயிற்சிகளுக்கு உடலும் நன்கு ஒத்துழைக்கும். காலையில் நேரம் ஒதுக்க முடியாவிட்டால், மாலை 4 - 6 மணியில் செய்யலாம். இரவு நேரம் உடற்பயிற்சிகளுக்கு ஏற்றது அல்ல. திட்டமிட்டு அல்லது சபதமிட்டாவது இரவு 10 மணிக்குள் தூங்கச் செல்வது வெற்றிக்கான முதல் படி. இரவு 10 மணிக்குள் தூங்கப் பழகிவிட்டால், அதிகாலை 4 மணிக்கு எழுவது சிரமம் அல்ல. தொலைக்காட்சியிலும், செல்போனிலும் இரவுகளைத் தொலைத்தால், அதிகாலை என்னும் அற்புதப் பொழுதுகளை நாம் தூக்கத்தில்தான் இழக்கவேண்டி இருக் கும்.

மனதை ஒருமுகப்படுத்தும் ஆசனங்களில் அர்த்த ஹலாசனம், நவுகாசனம், விபரீதகரணி, சர்வாங்காசனம், சிரசாசனம், புஜங்காசனம், தனுராசனம், சிரசாசனம், அர்த்த மச்சேந்திர ஆசனம், தாடாசனம், விருட்சாசனம் முக்கியமானவை.

மனதை ஒருநிலைப்படுத்தி, நம்பிக்கையை அதிகரிக்கக் கூடியது விருட்சாசனம். கால்களை நேராக வைத்து, நிமிர்ந்து நிற்க வேண்டும். பின்னர் வலது காலை மடக்கி இடது தொடையில் பதியுமாறு வைக்க வேண்டும். மடித்து வைக்கப்பட்ட கால் 90 டிகிரி அளவில் பக்கவாட்டில் விரிந்திருக்க வேண்டும். பின்னர், மெதுவாக கைகளை இணைத்து நமஸ்காரம் செய்வதுபோல, மார்புக்கு மத்தியில் வைக்க வேண்டும். இதற்கு ‘நமஸ்கார முத்ரா’ என்று பெயர். பிறகு, கைகளை நமஸ்கார முத்ரா நிலையிலேயே உயர்த்தி, உச்சந்தலை யில் வைக்க வேண்டும். இதற்கு ‘கயிலாய முத்ரா’ என்று பெயர். பிறகு, காதுகளை ஒட்டினாற்போல கைகளை நேராக மேலே உயர்த்தி, நமஸ்காரம் செய்வதுபோல வைக்க வேண்டும். இது ‘அஞ்சலி முத்ரா’. மேற்கண்ட ஒவ்வொரு நிலையிலும் 3 முறை மூச்சை இழுத்து விடவேண்டும். பின்னர் கால்களைக் கீழே இறக்கிவிட வேண்டும். அடுத்து இடது காலை மடக்கி இதேபோல செய்ய வேண்டும். தொடர்ந்து இந்த ஆசனம் செய்தால் கால்கள் நன்கு வலுப்பெறும். புஜங்கள் விரிவடையும். கவனக் குவிப்புத் திறன் வளரும் என்பதால் படிக்கும் மாணவர் களுக்கு ஏற்றது.

அடுத்து ஆசனங்களில் நாம் கண்டிப்பாக அனைவரும் செய்ய வேண்டியது சூர்ய நமஸ்காரம். யோக சிகிச்சை முறையில் சூர்ய நமஸ்காரம் ஒரு அரு மருந்து. மிக நல்ல 12 ஆசனங்களின் தொகுப்புதான் சூர்ய நமஸ்காரம். தனித்தனியாக ஆசனங்களைச் செய்வதைவிட, சூர்ய நமஸ்காரம் செய்தாலே 12 விதமான ஆசனங்களின் பலன் கிடைக்கும். கர்ப்பிணிகள், தலைசுற்றல் (வெர்டிகோ), உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், இதய நோய், மூட்டுவலி, கழுத்துவலி, ஸ்பாண்டிலைசிஸ், தண்டுவடப் பிரச்சினை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சூர்ய நமஸ்காரம் செய்யக் கூடாது.

இன்றைய உலகில் பலருக்கும் உள்ள பிரச்சினை இடுப்பில் சதை அதிகமாகி பருமனாகத் தெரிவது. இதற்கும் எளிய தீர்வைத் தருகிறது யோகக்கலை. கழுத்து முதல் இடுப்பு வரை உள்ள பாகங்களுக்கான பயிற்சியைப் பார்க் கலாம்.

முதலில் இரு கைகளையும் மார்புக்கு அருகே வைத்துக்கொள்ள வேண்டும். இதுதான் தொடக்க நிலை. அடுத்து, வலது பக்கம் நன்றாகத் திரும்பி, பிறகு தொடக்க நிலைக்கு வரவேண்டும். அதேபோல இடது பக்கம் நன்றாகத் திரும்பி, பிறகு தொடக்க நிலைக்கு வரவேண்டும். இதுதான் twist அதாவது, உடலை வளைப்பது. இரு கால் களையும் போதிய இடைவெளி விட்டு தள்ளி வைத்துக் கொண்டால், தடுமாற்றமின்றிப் பயிற்சி செய்யலாம்.

அடுத்து, கால்களை அகன்ற நிலையிலேயே வைத்துக்கொண்டு, கை, கால்கள் மற்றும் உடலை மொத்தமாக இடதுபக்கமும், வலது பக்கமும் மாறி மாறி நன்கு திருப்பி 5-10 முறை பயிற்சி செய்ய வேண்டும். அடுத்ததாக, சுவாசத்தை உள்ளிழுத்தபடியே, மெதுவாக கைகளை உயர்த்தி காதுகளை ஒட்டியவாறு வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு சுவாசத்தை விட்டபடியே, கைகளைப் பொறுமையாக இறக்க வேண்டும். பிறகு, நேராக நிமிர்ந்து நின்று, வலது கையை வலது காதை ஒட்டி மேலே கூரையை நோக்கி உயர்த்தி வைத்துக்கொண்டு, உடலை இடது பக்கமாக வளைக்க வேண்டும். பிறகு, இதேபோல இடது கையை உயர்த்தி உடலை வலது பக்கமாக வளைக்க வேண்டும். இப்பயிற்சிகளை 3-5 முறை செய்தால் இடுப்பில் உள்ள கொழுப்புகள் கரைந்துவிடும்.

எந்த யோகப் பயிற்சி செய்தாலும், அடிப்படையில் ‘தொடர்ந்து செய்ய வேண்டும்’ என்ற உறுதி மிக முக்கியம். நன்கு பயிற்சி பெற்ற யோகக்கலை நிபுணரின் கண்காணிப்பில் முறையாகப் பயின்று செய்வது சிறப்பு. யோகக்கலையை நன்கு கற்று, தினந்தோறும் பயிற்சி செய்து, நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வத்தையும் பெறுவோம். வாழ்த்துகள்.

(நிறைந்தது)

எழுத்து: ப.கோமதி சுரேஷ்

படங்கள்: எல்.சீனிவாசன்

தொடர்புக்கான மின்னஞ்சல்:

drbhuvanayoga@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x